கார்த்திகை மாத கடைசி திங்கட்கிழமையில் மறக்காமல் சங்காபிஷேக தரிசனம் செய்யுங்கள். தென்னாடுடைய சிவனாரின் பேரருளைப் பெறுங்கள். பிரச்சினைகள் அனைத்தையும் தீர்த்தருள்வார் சிவபெருமான்.
கார்த்திகை மாதம் என்பது விசேஷமான மாதம். கார்த்திகை மாதம் தீபங்களின் மாதம். கார்த்திகை மாதம் என்பது வழிபாட்டுக்கும் பூஜைக்கும் உரிய மாதம். இந்த மாதத்தில் வழிபாடுகளிலும் விரதங்களிலும் பூஜைகளிலும் பங்கேற்பதும் ஆலயங்களுக்குச் சென்று தரிசனம் செய்வதும் மகா புண்ணியம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள் .
கார்த்திகை மாதத்தில் முருகப் பெருமானை வழிபடுவதும் சிறப்புக்கு உரியது. அதேபோல், அம்பாள் எனும் சக்தி வழிபாடு மிக மிக உன்னதமானது.
முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் ஆலயங்களில், சிறப்பு வழிபாடுகள் விமரிசையாக நடைபெறும். அதேபோல், அம்பாள் குடிகொண்டிருக்கும் திருத்தலங்களிலும் விசேஷ பூஜைகள் நடத்தப்படும். இந்த தருணங்களில், ஆலயத்துக்குச் சென்று வழிபடுவது மகத்தான பலன்களைத் தரும்.
அதேபோல், பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, விழாக்கள் ஆரம்பமாகிவிட்டன. பெருமாள் குடிகொண்டிருக்கும் தலங்களில், காலையும் மாலையும் உத்ஸவங்களும் சிறப்பு வழிபாடுகளும் அமர்க்களப்படுகின்றன.
கார்த்திகை மாதத்தின் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சிவாலயங்களில், சங்காபிஷேகம் நடைபெறும். சோம வாரம் எனப்படும் திங்கட்கிழமையில் சிவனாருக்கு 108 அல்லது 1008 சங்குகள் கொண்டு அபிஷேகம் சிறப்புற நடைபெறும்.
கார்த்திகை மாதம் தொடங்கி, ஒவ்வொரு திங்கட்கிழமையும் பெரும்பாலான சிவாலயங்களில் சங்காபிஷேகம் நடைபெற்றன. கார்த்திகை மாதத்தின் நாளைய தினம் திங்கட்கிழமை. கார்த்திகை மாதத்தின் கடைசி திங்கட்கிழமை. நாளைய தினம் 14ம் தேதி சோம வாரம் எனப்படும் அற்புதமான திங்கட்கிழமையில், சிவாலயங்களில் சங்காபிஷேகம் நடைபெறும்.
சிவனாருக்கு குளிரக்குளிர நடைபெறுகிற சங்காபிஷேகத்தை கண்குளிர தரிசனம் செய்யுங்கள். கவலைகள் அனைத்தையும் பறந்தோடச் செய்வார். முக்தியையும் ஞானத்தையும் தந்தருள்வார் சிவனார்!