ஆன்மிகம்

பிரம்மா... சனீஸ்வரர்... நரசிம்மர்!  - திருப்பட்டூர் சிவாலயத்தில் நரசிம்ம தரிசனம்! 

செய்திப்பிரிவு

திருப்பட்டூர் கோயிலில், பிரம்மபுரீஸ்வரரையும் பிரம்மாவையும் தரிசிக்கும் அதேவேளையில், ஆலயத்தூணில் இருக்கும் நரசிம்மரையும் பிரம்மா சந்நிதிக்கு எதிரே தூணில் இருக்கிற சனீஸ்வரரையும் மனதார வழிபடுங்கள். கிரக தோஷங்கள் அனைத்தும் நீங்கும். மங்கல காரியங்கள் அனைத்தும் நடந்தேறும்.

அனைத்து சிவாலயங்களிலும் பிரதோஷ நாளில், விமரிசையாக பூஜைகள் நடந்தேறும். வழக்கத்தை விட, பிரதோஷ நாளில், சிறப்பு பூஜைகளும் விசேஷ அபிஷேக ஆராதனைகளும் விமரிசையாக நடைபெறும். இந்த நாளில், சிவாலயம் சென்று பிரதோஷ தரிசனம் செய்வார்கள் பக்தர்கள். பிரதோஷ நாளில், விரதம் மேற்கொள்ளும் பக்தர்களும் இருக்கிறார்கள்.

இதேபோல், நரசிம்மருக்கும் பிரதோஷ பூஜை உகந்தது. அந்த நாளில் நரசிம்மப் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறுகின்றன.

இரணியன் வித்தியாசமாக வரம் ஒன்றை வாங்கியிருந்தான். அதாவது என்னைக் கொல்லும் சக்தி மனிதருக்கும் இருக்கக் கூடாது; மிருகத்துக்கும் இருக்கக் கூடாது என்று வரம் வாங்கியிருந்தான். அதனால்தான் மனித உடலும் சிங்க முகமும் கொண்டு கடும் உக்கிரத்துடன் அவதரித்தார் நரசிம்மர்.

அடுத்து, வீட்டுக்குள்ளேயும் கொல்லக் கூடாது. வெளியேயும் சாகடிக்கக் கூடாது எனும் வரத்தைக் கேட்டிருந்தான். அதனால்தான் இரணியனை வீட்டுக்குள்ளேயும் இல்லாமல், வெளியேயும் இல்லாமல், வாசலுக்குக் கொண்டுவந்து, மடியில் கிடத்தி சம்ஹரித்தார் பெருமாள்.

என்னைக் கொல்லும் நேரம் காலையாகவும் இருக்கக் கூடாது இரவாகவும் இருக்கக் கூடாது என்று வரம் வாங்கி ஆணவத்துடன் திரிந்தான். அதனால்தான் காலையும் இல்லாமல் இருளும் இல்லாத அந்திசாயும் வேளையாகப் பார்த்து, நரசிம்ம அவதாரம் நிகழ்ந்தது.

அப்படித்தான் நிகழ்ந்தது நரசிம்ம அவதாரம். மாலை 4.30 முதல் 6 மணிக்குள்ளான நேரம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். அதாவது, நரசிம்ம அவதாரம் நிகழ்ந்தது ஓர் பிரதோஷ நாளில் என்றும் சொல்வார்கள்.

ஆகவே, பிரதோஷ நாளின் போது, நரசிம்மர் குடிகொண்டிருக்கும் ஆலயங்களில் சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறுகின்றன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நரசிம்ம தரிசனம் செய்வார்கள்.

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து சுமார் 28 வது கிலோமீட்டரில் உள்ளது சிறுகனூர். இங்கிருந்து கிளை பிரிந்து செல்லும் சாலையில் அமைந்து உள்ளது திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில். தலையெழுத்தையே திருத்தி அருளும் பிரம்மா கோயில் இது. இங்கே தனிச்சந்நிதியில் குடிகொண்டு அருள்பாலிக்கிறார் பிரம்மாண்ட பிரம்மா!

கோயிலுக்குள் நுழைந்ததும் கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகிய தரிசனங்கள். பிரதோஷத்தின் போது நந்திதேவருக்குத்தான் அபிஷேகங்களும் பூஜைகளும் நடைபெறும் என்பது தெரியும்தானே. அப்போது நந்திதேவருக்கு அருகில் உள்ள தூண் ஒன்றில், நரசிம்மர் வதம் செய்யும் சிற்பத்தைத் தரிசிக்கலாம்.

திருப்பட்டூர் கோயிலில், பிரம்மபுரீஸ்வரரையும் பிரம்மாவையும் தரிசிக்கும் அதேவேளையில், ஆலயத்தூணில் இருக்கும் நரசிம்மரையும் பிரம்மா சந்நிதிக்கு எதிரே தூணில் இருக்கிற சனீஸ்வரரையும் மனதார வழிபடுங்கள். கிரக தோஷங்கள் அனைத்தும் நீங்கும். மங்கல காரியங்கள் அனைத்தும் நடந்தேறும் என்பது உறுதி.

SCROLL FOR NEXT