கோயம்புத்தூரில் உள்ள முக்கியமான இடங்களில் பேரூரும் ஒன்று. இங்கே உள்ள ஆலயம், பட்டீஸ்வரர் திருக்கோயில். புராதன புராணப் பெருமைகள் கொண்ட அற்புதமான ஆலயம்.
சிவனார் குடிக்கொண்டிருக்கும் சாந்நித்தியம் நிறைந்த திருத்தலம். இங்கே உள்ள விநாயகப் பெருமான் தொடங்கி நடராஜர் வரை அத்தனை திருமேனிகளும் அற்புதமாகக் காட்சி தருகிறார்கள். ஒப்பற்ற திருத்தலம் என்று அதனால்தான் போற்றுகிறார்கள் பக்தர்கள்.
அதேபோல், சிற்ப நுட்பங்களுடன் திகழ்கிறது ஆலயம். ஒவ்வொரு மண்டபங்களும் மண்டபத்தின் தூண்களும் மிகச்சிறந்த வேலைப்பாடுகளுடன் திகழ்கின்றன.
இங்கே பால தண்டாயுதபாணி மிகவும் சாந்நித்தியம் நிறைந்தவர். அருளும் பொருளும் அள்ளித் தருபவர். பழநியம்பதியில் குடிகொண்டிருக்கும் கந்தனைப் போலவே அழகும் கருணையும் ததும்பக் காட்சி தருகிறார்.
அற்புதமான பேரூர் பட்டீஸ்வரம் திருத்தலத்தில், வருடத்தின் ஒவ்வொரு மாதங்களும் விழாக்களும் விசேஷங்களும் என அமர்க்களப்படுகின்றன. சித்திரை மாதத்தில் திருப்பாராயணத்துடன் விழாக்கள் தொடங்குகின்றன. சித்திரைத் திருநாள் தமிழ்ப் புத்தாண்டு வைபவத்தின் போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபடுவார்கள்.
அதேபோல, வைகாசி மாதத்தில் விசாக விழா விமரிசையாக நடைபெறும். வசந்த உத்ஸவம் ஆரம்பமாகும். முருகக் கடவுளுக்கு பாலபிஷேகம் நடைபெறும். இந்த நாளில், கோவையின் பல பகுதியில் இருந்தும் பக்தர்கள் விரதம் மேற்கொண்டு, முருகப்பெருமானை தரிசிப்பார்கள்.
ஆனி மாதத்தில், பத்து நாட்கள் உத்ஸவம் நடைபெறும். ஆனித்திருமஞ்சன வைபவம் அமர்க்களப்படும். நாற்று நடவு உத்ஸவம் முக்கிய அங்கம் வகிக்கும். அம்பாள், கொள்ளை அழகுடன் காட்சி தருவாள். சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் என விமரிசையாக நடந்தேறும்.
ஆடி மாதம் வந்துவிட்டாலே செவ்வாயும் வெள்ளிக்கிழமையும் அம்பாளைத் தரிசிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு விடுவார்கள். அம்மனுக்கு ஊஞ்சலோத்ஸவம் நடைபெறும். சக்தி வழிபாடுகள், நேர்த்திக்கடன்கள் என விழா களைகட்டும்.
ஆவணி மாதத்தில் விநாயகப் பெருமானுக்கு விநாயக சதுர்த்தி விழா எல்லா ஆலயம் போலவே இங்கேயும் சிறப்புற நடைபெறும். அதேபோல், கனகசபை நாயகன் ஸ்ரீநடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும்.
புரட்டாசி மாதத்தில், நவராத்திரிப் பெருவிழாவும் சுக்ல சதுர்த்தசி நடராஜர் அபிஷேகம் நடைபெறும். இந்த நாளில் நவராத்திரி நாட்கள் அனைத்திலும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசிப்பார்கள்.
ஐப்பசியிலும் நடராஜருக்கு அபிஷேகம் அமர்க்களப்படும். சஷ்டியும் சூரசம்ஹாரமும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். ஐப்பசி பெளர்ணமியில் அன்னாபிஷேகம் கோலாகலமாக நடைபெறும். ஏராளமான பக்தர்கள், அன்னாபிஷேக தரிசனத்தில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துகொள்வார்கள். இந்த அன்னப் பிரசாதம் வறுமையைப் போக்கும். வளமையைக் கூட்டும். குழந்தை பாக்கியம் தந்தருளும் என்பது ஐதீகம்.
கார்த்திகையில், சோமாவாரம் எனப்படும் திங்கட்கிழமைகளில் சங்காபிஷேகம் நடைபெறும். சிவ தரிசனம் சிலிர்க்க வைக்கும்.
மார்கழி மாதம் முழுக்கவே விசேஷம்தான். ஒன்பது நாள் உத்ஸவமும் பத்தாம் நாள் ஆருத்ரா தரிசனமும் அமர்க்களப்படும். ஆடல்வல்லான் நடராஜப் பெருமான் கொள்ளை அழகுடன் காட்சி தருவார்.
தை மாதத்தில், தைப்பூச உத்ஸவமும் விழா நாயகன் முருகப் பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகளும் நடைபெறும். விரதம் மேற்கொண்டு முருகப் பெருமானை தரிசிப்பார்கள் முருக பக்தர்கள்.
மாசி மகா சிவராத்திரி பூஜைகள் நடைபெறும். அதேபோல் சுக்ல சதுர்த்தசியில் நடராஜருக்கு அபிஷேகம் நடைபெறும்.
பங்குனி மாதத்தில் எல்லா ஆலயங்களைப் போலவே உத்திர வைபவம் விமரிசையாக நடைபெறும். தேரோட்டம் நடைபெறும்.
பிரசித்தி பெற்ற பேரூரில் எந்த நாளிலேனும் வந்து தரிசியுங்கள். எல்லா நலன்களையும் தந்தருள்வார் பட்டீஸ்வரர். காமதேனுவுக்கு அருளிய ஈசன், கற்பகத் தரு போல் இருந்து நம்மையும் நம் சந்ததியையும் வாழச் செய்வார்.