ஆன்மிகம்

கார்த்திகை அஷ்டமி; மகாதேவாஷ்டமி! நான்கு பேருக்கு உணவு; தெருநாய்களுக்கு பிஸ்கட்!  எதிர்ப்பெல்லாம் விலகும்; தொட்டதெல்லாம் துலங்கும்! 

வி. ராம்ஜி

அஷ்டமி விசேஷம். அஷ்டமியில் பைரவரை வணங்குவது இன்னும் விசேஷம். அதிலும் கார்த்திகை மாதத்தின் அஷ்டமி மகாதேவாஷ்டமி என்றும் பைரவாஷ்டமி என்றும் போற்றப்படுகிறது. நாளைய தினம் 7ம் தேதி திங்கட்கிழமை, மகாதேவாஷ்டமி. பைரவரை வணங்குங்கள். நான்கு பேருக்காவது உணவுப் பொட்டலம் வழங்குங்கள். தெருநாய்களுக்கு பிஸ்கட் வழங்குங்கள்.

கார்த்திகை மாதம், தேய்பிறை அஷ்டமியை, மகாதேவாஷ்டமி என்றும் பைரவாஷ்டமி என்றும் விவரிக்கிறது புராணம். இந்த நாளில்,அன்னதானம்செய்வது ரொம்பவே விசேஷம். இந்த அன்னதானத்தை, சிவபார்வதியே வந்து ஏற்பதாக ஐதீகம்.

இந்நாளில், பைரவரை மனதார வேண்டிக்கொண்டு, அன்னதானம் செய்வது மும்மடங்கு பலன்களைக் கொடுக்கும் என்கிறார்கள் ஆச்சார்யக்காரர்கள்.
கேரளாவிலுள்ள வைக்கம் எனும் புண்ணியத் தலத்தில் அமைந்திருக்கிறது ஸ்ரீமகாதேவர் திருக்கோயில். மிகவும் விசேஷமான இந்தக் கோயிலை, அஷ்டமிக்கு உரிய கோயிலாகக் கொண்டாடுகின்றனர் பக்தர்கள்.

கார்த்திகை அஷ்டமி நன்னாள் இங்கே மிகப்பெரிய விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இதனை வைக்கத்து அஷ்டமி என்றும் மகாதேவாஷ்டமி என்றும் சொல்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

இந்த தினத்தில், இங்கு, ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து சிவனாரைத் தரிசித்துச் செல்கிறார்கள். அன்னதானம் செய்கிறார்கள். இந்த அன்னதானத்தைப் பெறுவதற்காக சிவபெருமானே சிவனே வருவதாக ஐதீகம் உண்டு.

சிவபெருமான், பைரவராக உருவெடுத்து, பைரவர் எனும் உருவை தோன்றச் செய்தார். அந்தகாசுரன் எனும் அசுரனை அழித்தார் என்பதெல்லாம் நாம் அறிந்ததுதானே!
இரண்யாட்சன் என்ற அசுரனின் மகன் அந்தகாசுரன். இவன், திருமால், பிரம்மா முதலான தெய்வங்களால் கூட, அழிவு வரக் கூடாது என்ற வரத்தை, சிவபெருமானிடம் தவமிருந்து பெற்றான்.

அப்படியான வரத்தை சிவனார் வழங்கினார். இந்த வரத்தின் காரணமாக, இறுமாப்பும் கர்வமும் கொண்டான் அசுரன். தேவர்களை அடிமைப்படுத்தி துன்புறுத்தி வந்தான். தான் கொடுத்த வரத்தை, தவறாகப் பயன்படுத்திய அந்தகாசுரனின் ஆணவத்தை அடக்க முடிவெடுத்த சிவபெருமான், தன்னில் இருந்து தோன்றிய பைரவரிடம் அழிக்கும் பொருட்டு ஒப்படைத்தான்.

அசுரனுடன் பைரவர் போரிட்டார். அழிந்து போனான் அசுரன். எதிரிகளால் தொல்லை இருந்தால், தேய்பிறை அஷ்டமி நாட்களில், பைரவருக்கு வடைமாலை, செவ்வரளி அல்லது எலுமிச்சை மாலை சார்த்தி வணங்கி வழிபட்டால், சகல எதிர்ப்புகளையும் அடக்கி அருளுவார் பைரவர் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
அஷ்டமி நன்னாளில், ராகு காலத்தில் வழிபடுவது இன்னும் விசேஷம். எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். எதிர்ப்புகள் அனைத்தும் அடங்கும்.

ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியும் பைரவரை வழிபடுவதற்கு உகந்த நாட்கள். எல்லா சிவாலயங்களிலும் பைரவருக்கு சந்நிதி உள்ளது. பைரவரை அஷ்டமியில் தரிசித்து வழிபடுங்கள். முக்கியமாக, கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி மகாதேவாஷ்டமி என்றும் பைரவாஷ்டமி என்றும் சொல்லுவார்கள். நாளைய தினம் 7ம் தேதி திங்கட்கிழமை அஷ்டமி. தேய்பிறை அஷ்டமி. கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி. மிக மிக விசேஷமான நாள்.

கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமியன்று, பைரவரை வணங்குங்கள். செந்நிற மலர்கள் சார்த்துங்கள். அன்னதானம் செய்யுங்கள். நான்கு பேருக்கேனும் உணவுப் பொட்டலம் வழங்குங்கள். தெருநாய்களுக்கு பிஸ்கட் வழங்குங்கள். இதுவரை பட்ட கஷ்டங்களெல்லாம் குறையும். எதிர்ப்புகள் அனைத்தும் தவிடுபொடியாகும். இன்னல்கள் அனைத்தும் தீர்ந்து காரியத்தில் வெற்றி பெறுவீர்கள்.

SCROLL FOR NEXT