வணங்குதும் வாழி நெஞ்சே புணர்ந்துடன்
பொருகடல் முகந்து கருமுகிற் கணம்நாற்
படவர வொருங்க மின்னிக் குடவரைப்
பொழிந்து கொழித்திழி அருவி குணகடல்
மடுக்குங் காவிரி மடந்தை
- (11-ம் திருமுறை நக்கீரர்)
பொங்கிவரும் பொன்னி நதியாம் காவிரியைத் தாயாகப் போற்றி வழிபடுவது தமிழர்தம் மரபு. அதன் வழிதான் ஆடியில் காவிரித் தாய்க்கு, மக்கள் சீர் செய்யும் வழக்கம் இன்றளவும் நடைமுறையில் உள்ளது. அப்படிப்பட்ட தமிழர் தம்வாழ்வை குறிப்பாக நெல் களஞ்சியத்தின் நலனைக் காக்கும் தெய்வமான காவிரி அன்னைக்கு, கும்பகோணம் காவிரிக் கரையில் கோயில் ஒன்று உள்ளது.
மேலக்காவிரியின் வடகரையில் ஆலயம்
தீர்த்தத்தை தெய்வமாகக் கொண்டாடுவது இந்து மரபு. அதன் அடிப்படையில் தான் “கங்கையாய் காவிரியாய் கன்னியாகி கடலாகி மலையாகி கழியும் ஆகி” என்று திருமுறை விளம்புகிறது. அப்பர் பெருமானும் தீர்த்தனை சிவனை சிவலோகனை என்று இறைவனை தீர்த்தனாக உருவகித்து அழைக்கிறார். அவ்வகையில் காவிரியை இறை வடிவமாகப் போற்றி கும்பகோணம் மேலக்காவிரியில் காவிரியின் வடகரையில் இவ்வாலயம் அமைக்கப் பட்டிருக்கிறது.
இங்குள்ள கோயில்தோப்பு ஸ்ரீகாசி விஸ்வநாதர் ஆலயத்தை ஒட்டியுள்ள காவிரி படித்துறையில் இவ்வாலயம் அமைக்கப்பட்டுள்ளது. அளவில் மிகச் சிறியதாக இருந்தாலும் அளப்பரிய மாட்சிமை கொண்டதாக அமைந்திருக்கிறது. படித்துறை மண்டபமாகச் சிதிலமடைந்த நிலையில் இருந்த கட்டிடத்தை, கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டத்தினர் கடந்த 2013-ம் ஆண்டில் புனரமைத்துப் புதிதாகக் கட்டினார்கள்.
சுகாசனத்தில் காவிரி
பூமிக்குள் சென்றுகொண்டிருந்த காவிரி நதி ஏரண்ட மகரிஷியின் உயிர்த் தியாக வழிபாட்டின் விளைவாக மேலெழுந்த இடம் தான் இந்த மேலக்காவிரி என்று திருவலஞ்சுழி தல வரலாறு கூறுகிறது. அப்படிப்பட்ட புராணப் பெருமை கொண்ட இடத்தில் அமைந்திருக்கும் இவ்வாலயத்தின் உள்ளே கிழக்கு நோக்கிய நிலையில் சுகாசனத்தில் அமர்ந்த நிலையில் இரு கரங்களும் அபய, வரத முத்திரைகளுடன் வீற்றிருக்கிறாள் அன்னை காவிரி.
ஒன்றரை அடி உயரத்தில் கருங்கல் திருமேனியாய் திகழும் அன்னையின் முகம் பக்தர்களை அன்போடு அரவணைக்கும் திருமுகமாக ஒளிவீசுகிறது. தினம்தோறும் உரிய முறையில் பூஜைகள் நடைபெறுகின்றன. காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் இக்காவிரி அன்னையையும் தரிசித்து விட்டே செல்கின்றனர்.