பகவான் ஷீர்டி சாயிபாபாவை அழைக்க மூன்று விஷயங்கள் உள்ளன என்கிறார்கள் சாயி பக்தர்கள்.
கடவுளை வழிபடுவதற்கும் அவர்கள் மீது வைத்த நம்பிக்கையுடன் கொண்ட பக்திக்கும் பாலமாக இருப்பவர்கள் மகான்கள். நாம் செலுத்துகிற வழிபாடுதான் நம்மை செம்மைப்படுத்துகின்றன. இறை சக்தி மீது நாம் வைத்திருக்கிற பக்திதான், நம் மீதே நமக்கான நம்பிக்கையை பலப்படுத்துகின்றன.
சோர்ந்து போகிற தருணங்களும் துவண்டு விழுகிற நேரங்களும் எல்லார் வாழ்விலும் நிகழத்தான் செய்கின்றன. எல்லோருக்கும் இப்படி நடக்கின்றன என்றாலும் ‘எனக்கு மட்டும் ஏனிப்படி?’ என்று புலம்பாதவர்களே இல்லை. வருந்தாதவர்களே இல்லை. கண்ணீர் விடாதவர்களே இருக்கமுடியாது.
நாமெல்லாரும் சாமான்ய மனிதர்கள். அப்படித்தான் துவளுவோம். கதறுவோம். கண்ணீர் விடுவோம். அந்த தருணங்களில், நம்மை ஆற்றுப்படுத்தவும் நமக்கெல்லாம் பலம் தரவும் நம்மை வளப்படுத்தவுமாக வருபவர்கள்தான் மகான்கள். அப்பேர்ப்பட்ட மகான் தான் பகவான் ஷீர்டி சாயிபாபா.
கடவுளை அடைவதற்கும் உலகாயத விஷயங்களைப் பெறுவதற்கும் மிக எளிய வழி... மகான்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்வதுதான். பாபாவை ஒருவர் நெருங்கிவிட்டால், அவர் பின்னர் எதற்காகவும் எதன் பொருட்டும் கவலை கொள்ளும் சூழலுக்கு ஆளாகமாட்டார். அவருக்கான சத்விஷயங்கள் தொடர்ந்து அவரைச் சூழ்ந்து அமைதிப்படுத்திக் கொண்டே இருக்கும் என்கிறார்கள் சாயி பகவானின் லட்சக்கணக்கான பக்தர்கள்.
ஷீர்டி சாயிபாபாவை அழைப்பதற்கு மூன்று எளிய வழிகள் இருக்கின்றன என்கிறார்கள்.
முதலாவது... சாயி பகவானின் ஷீர்டி நாயகனின் மூல மந்திரம்.
ஓம் சாயி ஸ்ரீசாயி ஜெய ஜெய சாயி
- இந்த மூலமந்திரத்தை தினமும் சொல்லுங்கள். 11 முறை சொல்லுங்கள். 24 முறை சொல்லுங்கள். உங்களால் முடியுமெனில் 108 முறை சொல்லுங்கள். பூஜையறையில் அமர்ந்துகொண்டு சொல்லுங்கள். பயணத்தின் போது மனதுள் சொல்லிக்கொண்டே இருங்கள். உங்களைத் தேடி சாயிபாபா வெகு சீக்கிரமே வருவார்.
அடுத்து... சாயிநாதர் திருவடி.
சாயிநாதர் திருவடியே
சம்பத் அளிக்கும் திருவடியே
நேயம் மிகுந்த திருவடியே
நினைத்ததை அளிக்கும் திருவடியே
தெய்வ பாபா திருவடியே
தீரம் அளிக்கும் திருவடியே
உயர்வை அளிக்கும் திருவடியே
என்று காலையும் மாலையும் சொல்லுங்கள். சொல்லிவிட்டு சாயிபாபாவுக்கு முன்னே கண்கள் மூடி பிரார்த்தித்து, நமஸ்கரியுங்கள். சூட்சுமமாக உங்களுக்கு அருகில் வருவார். உங்களுடனேயே இருந்து உங்களை வழிநடத்துவார் சாயி மகராஜ்.
மூன்றாவது... சாயி பகவான் காயத்ரி...
ஓம் ஸ்ரீஷீர்டி சாயி ஸ்ரீநிவாஸாய வித்மஹே
ஸர்வ தேவாய தீமஹி
தந்நோ ஸர்வ ப்ரஜோதயாத்
இந்த சாயிபாபாவின் காயத்ரியை, அனுதினமும் சொல்லுங்கள். காலையும் மாலையும் சொல்லுங்கள். எவருக்கேனும் ஒரு உணவுப்பொட்டலம் வழங்கிவிட்டு, தெருநாய்களுக்கு இரண்டு பிஸ்கட் வழங்கிவிட்டு, மனதுக்குள் ஷீர்டி சாயிபாபாவின் காயத்ரியைச் சொல்லுங்கள்.
உங்கள் வாழ்வில் இனி வரக்கூடிய ஒவ்வொரு தருணங்களையும் பாபா தீர்மானித்து அருளுவார். வாழ்வைத் தேனாக்கித் தருவார். காரியத் தடைகளையெல்லாம் போக்கி ஜெயமாக்கி அருளுவார் சாயிபாபா!