இன்று 20ம் தேதி கந்த சஷ்டி. இந்தநாளில், கந்தனை வணங்குவோம். கந்தசஷ்டி கவசம் சொல்லி, முருகப்பெருமானை மனமுருக பிரார்த்திப்போம். நமக்கு இதுவரை இருந்த எதிர்ப்புகளையெல்லாம் இல்லாது செய்து அருளுவான் திருக்குமாரன்.
நமக்கு இதுவரை இருந்த எதிர்ப்புகளையெல்லாம் இல்லாது செய்வான் திருக்குமரன். வேண்டியதையெல்லாம் தந்திடுவான் வெற்றிவேலன். நினைத்ததையெல்லாம் முடித்துக் கொடுப்பான் கருணைக் கந்தன்!
சூரபத்மனை முருகப்பெருமான் அழித்த நன்னாள்தான் கந்த சஷ்டிப் பெருவிழா. தட்சனாக இருந்த போது தந்தை சிவனார் அழிக்க, அடுத்த பிறப்பில் சூரபத்மனாக மறுபிறவி எடுக்க, மைந்தன் முருகப் பெருமானால் கொல்லப்பட்டான்.
அடுத்து, காசிபனும் தவம் புரிந்து சிவனாரிடம் பல வரங்கள் பெற்றான். அசுர குரு சுக்கிரனால் ஏவப்பட்ட மாயை எனும் பெண்ணின் அழகில் மயங்கி தன் தவ வலிமையை இழந்தான். இதைத் தொடர்ந்து காசிபனும் மாயை எனும் அசுரப் பெண்ணும் முதலாம் சாமத்தில் மனித உருவத்தில் இணைந்து மனிதத் தலையுடைய சூரபத்மனும், இரண்டாம் சாமத்தில் சிங்க உருவில் இருவரும் இணைந்து சிங்கமுகமுடைய சிங்கனும், மூன்றாம் சாமத்தில் யானை உருவில் இணைந்து யானை முகமுடைய தாரகனும், நான்காம் சாமத்தில் ஆட்டுருவத்தில் இணைந்து ஆட்டுத் தலையுடைய அஜமுகி எனும் அசுரப் பெண்ணுமாகப் பிறந்தனர் என்கிறது புராணம்.
இவர்கள் அனைவருமே உருவத்தால் வேறானாலும் குணத்தால், துர்குணங்களுடன், அலட்டலும் கர்வமுமாகத் திரிந்தனர்.
இவர்களுள் சூரபத்மன் சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்து 108 யுகம் உயிர் வாழவும் 1008 அண்டம் அரசாளவும் இந்திர ஞாலம் எனும் தேரையும் வரமாக பெற்றான். ஒரு பெண்ணின் வயிற்றில் பிறக்காத பிள்ளையால்தான் தனக்கு அழிவு வர வேண்டும் என வரம் கேட்டான். சிவனாரும் வரம் தந்தார். அப்படியான வரத்தையும் பெற்றான்.
உலக மக்களுக்கும் தேவாதி தேவர்களுக்கும் இன்னல்களையும் துன்பத்தையும் கொடுப்பதே வேலையாகக் கொண்டார்கள். அசுரர்களின் இந்தக் கொடுமையைத் தாங்க முடியாத தேவர்கள், கயிலாயம் சென்று சிவனாரிடம் முறையிட்டனர்.
அதைக் கேட்டு, சிவனார் தன் நெற்றிக்கண்ணால், ஆறு தீப்பொறிகளை உருவாக்கினார். அந்த தீப்பொறிகளில் இருந்து, சரவண பொய்கையில் தாமரைமலர்களில் ஆறு குழந்தைகளாகத் தோன்றியவர்தான் சண்முகர். ஆறு கார்த்திகைப் பெண்கள் சீராட்டி வளர்த்தனர்.
அப்படி உருவான முருகப் பெருமான், சிவனாரின் திருவுளப்படி, கட்டளைப்படி சூரபத்மனை அழித்தொழித்தார். அந்த நாளே சஷ்டி. கந்த சஷ்டி.
இன்று 20ம் தேதி கந்த சஷ்டி. இந்தநாளில், கந்தனை வணங்குவோம். கந்தசஷ்டி கவசம் சொல்லி, முருகப்பெருமானை மனமுருக பிரார்த்திப்போம்.
நமக்கு இதுவரை இருந்த எதிர்ப்புகளையெல்லாம் இல்லாது செய்வான் திருக்குமரன். வேண்டியதையெல்லாம் தந்திடுவான் வெற்றிவேலன். நினைத்ததையெல்லாம் முடித்துக் கொடுப்பான் கருணைக் கந்தன்!