கந்த சஷ்டி நன்னாள் இன்று (20ம் தேதி). இந்த நன்னாளில், கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வோம். ஸ்கந்த குரு கவசம் படித்து வேண்டுவோம். முருகப்பெருமானை மனதார வேண்டிக்கொள்வோம். கடன் தொல்லையில் இருந்தும் வழக்கு முதலான சிக்கல்களில் இருந்தும் மீட்டெடுப்பான் பாலகுமாரன்.
கர்வம் இருக்குமிடத்தில் அழிவு நிச்சயம் என்கிறது புராணம். ஆணவம் இருப்பவர்களை இறைவன் அழித்தே தீருவான் என்று விவரிக்கிறது புராணம். கர்வமும் ஆணவமும் இருப்பவர்களால், மக்களுக்கு நிம்மதி இருக்காது. முனிவர்களின் தவத்தைக் கலைத்து பூஜைகளை தடை செய்து என எல்லா வேலைகளையும் செய்வார்கள். அவர்களைத்தான் அரக்கர்கள் என்றும் அசுரர்கள் என்றும் விவரிக்கிறது புராணம். அப்படியொரு சூரனை வதம் செய்தவர்தான் முருகப்பெருமான். அந்த வதம் செய்த நிகழ்வுதான் சூரசம்ஹாரம்.
தட்சன், காசிபன் இருவருமே சிவனாரின் வரத்தை வாங்கிக் கொண்டார்கள். ஆனால் அசுரத்தனமான செயல்களில் ஈடுபட்டார்கள். இவர்களில், தட்சன், சிவபெருமானுக்கே மாமனாரானான். அகந்தையும் ஆணவமும் கொண்ட தட்சன், தென்னாடுடைய சிவனாரிடம் இருந்து உருவான வீரபத்திரரால் கொல்லப்பட்டான். வதம் செய்யப்பட்டான்.
அந்த தட்சன் மறுபிறவி எடுத்தான். அந்தப் பிறவியில் சூரபத்மனாக வந்தான் என்கிறது புராணம். ஆனாலும் என்ன... கடந்த பிறவியில் இருந்தது போலவே அதே துர்குணங்களுடன் இந்தப் பிறவியிலும் இருந்தான். அட்டூழியங்கள் செய்தான். முனிவர்களை தவம் செய்யாமல் கலைத்துப் போட்டான். மக்களை அடித்து துன்புறுத்தினான். மாடுகன்றுகளைக் கொன்றுபோட்டான். எவருக்கும் நிம்மதி இல்லாமல் போனது. அமைதி இல்லாமல் மருகினார்கள்.
இந்த முறை சூரபத்மனை அழிக்கவேண்டும் என சிவனாரிடம் முனிவர் பெருமக்கள் முறையிட்டார்கள். கண்ணீர் விட்டு வேண்டினார்கள். ‘எங்களை வாழ அருளுங்கள்’ என கோரிக்கை விடுத்தார்கள்.
போன பிறவியில், தட்சனை அழிக்க சிவனார் உருவெடுத்தார். இந்த முறை சூரபத்மனை அழிக்க முருகப்பெருமானைப் பணித்தார் சிவபெருமான்.
சிவனாரின் உத்தரவுப்படி, முருகப்பெருமான், சூரபத்மனை அழிக்கப் புறப்பட்டார். அந்த சூரனை அழிக்க, மைந்தன் முருகக் கடவுளுக்கு வேல் வழங்கினார் பார்வதிதேவி. அப்படி அவர் வேல் வழங்கிய திருத்தலம் சிக்கல். நாகை மாவட்டத்தில் உள்ளது இந்தத் தலம். சிக்கலில் வேல் வாங்கிய முருகப் பெருமான், சூரபத்மனை அழித்து மக்களுக்கும் முனிவர் பெருமக்களும் நிம்மதியை அளித்தார். அந்தத் திருத்தலம்தான் திருச்செந்தூர்.
முருகப்பெருமான், ஊருக்குள் கோயில் கொண்டிருக்கிறார். தெரு சந்திப்புகளில் கோயில் கொண்டிருக்கிறார். மலையின் மீது கோயில் கொண்டிருக்கிறார். எல்லா சிவாலயங்களிலும் கோயில் கொண்டிருக்கிறார். கடற்கரையிலும் கோயில் கொண்டிருக்கிறார். அப்படி கடற்கரையில் கோயில் கொண்டிருக்கும் திருத்தலம் தான் திருச்செந்தூர்.
பாலனாக, பால தண்டாயுதபாணியாக, வேலனாக, வேலாயுதமாக, வள்ளி மணாளனாக, தெய்வானைக் கணவனாக, சண்முகராக, மயில்வாகனனாக, தண்டாயுதபாணியாக என ஒவ்வொரு தலத்திலும் பலப்பல திருக்கோலங்களில் அற்புதமாகக் காட்சி தந்துகொண்டிருக்கிறார்.
முருகு என்றால் அழகு என்று அர்த்தம். அழகன் முருகன் என்றுதான் நாம் கொண்டாடி பூஜிக்கிறோம். வணங்குகிறோம். கருணையும் கனிவும் கொண்டு நம்மை காபந்து செய்து, நம் வாழ்க்கைக்கு வழிகாட்டும் கந்தக் கடவுள், ‘யாமிருக்க பயமேன்’ என அருளுகிறார்.
கந்த சஷ்டி நன்னாள் இன்று (20ம் தேதி). இந்த நன்னாளில், கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வோம். ஸ்கந்த குரு கவசம் படித்து வேண்டுவோம். முருகப்பெருமானை மனதார வேண்டிக்கொள்வோம். கடன் தொல்லையில் இருந்தும் வழக்கு முதலான சிக்கல்களில் இருந்தும் மீட்டெடுப்பான் பாலகுமாரன்.
வள்ளி மணாளனை வேண்டுவோம். பிரிந்த தம்பதியை ஒன்று சேர்ப்பான் வேலவன். பிரச்சினைகளில் இருந்து கரை சேர்த்து அருளுவான் செந்திலாண்டவன்!