ஆன்மிகம்

கந்தசஷ்டியில்... சுப்ரமண்ய புஜங்கம்; சிக்கல்கள் தீர்ப்பான் செந்திலாண்டவன்!

வி. ராம்ஜி

- செல்வ முத்துக்குமாரசுவாமி சிவாச்சார்யர்

தெய்வங்கள் மீது பல வகையான ஸ்தோத்திரங்கள் இயற்றி அருளியிருக்கிறார். முருகப் பெருமான் மீதும் ஆதிசங்கரர் ஸ்துதி இயற்றியுள்ளார்.
ஞானகுருவாகவும் யோக குருவாகவும் முருகப்பெருமான் அருள்பாலிக்கும் திருச்செந்தூர் திருத்தலத்தின் நாயகன் செந்திலாண்டவர் குறித்து ஆதிசங்கரர் பாடிய ஸ்துதி... ஸ்ரீசுப்ரமண்ய புஜங்கம் என்று போற்றப்படுகிறது.
சம்ஸ்கிருதத்தில் புஜங்கம் என்றால் பாம்பு என்று அர்த்தம். இந்த ஸ்லோகத்தின் வார்த்தைகள் (சந்தஸ்)பாம்பு வளைந்து வளைந்து இழுத்துக்கொண்டு போவதுபோல் அமைந்திருப்பதால் இதற்கு புஜங்கம் என்று பெயர் அமைந்தது.
சுப்ரமண்யருக்கும் சர்ப்பத்திற்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு.கர்நாடகா, ஆந்திரா முதலான வெளிமாநிலங்களில் முருகக் கடவுளை பாம்பு உருவத்திலேயே வழிபடுகின்றனர். இங்கே, ஆதிசங்கரர் ஸுப்ரமண்ய ஸ்தோத்ரத்தை புஜங்க சந்தத்தில் அமைத்தது ஆச்சரிய விசேஷம்தான்!

சுப்ரமண்ய புஜங்கத்தில் மொத்தம் 33 ஸ்லோகங்கள் உள்ளன. எல்லா ஸ்லோககங்களுமே அற்புதமானவை. அவற்றுள் மூன்றை மட்டும் இப்போது பார்ப்போம்.

மூன்றாவது ஸ்லோகம்
மயூராதிரூடம் மஹாவாக்ய கூடம்
மனோஹாரி தேஹம் மஹச் சித்த கேஹம்
மஹீ தேவ தேவம் மஹா வேத பாவம்
மஹா தேவ பாலம் பஜே லோக பாலம்.

பொருள்:
அதாவது, மிக அழகாக அமைந்த இந்த ஸ்லோகத்தில் ஆதிசங்கரர் முருகப்பெருமானின் பெருமைகளைக் கூறுகிறார். ‘மயிலை வாகனமாக உடையவர், வேத தத்துவங்களின் சாராம்சமாக திகழ்பவர். அதீதமான காந்தியை பரப்பும் தேகம் உடையவர். யோகிகளின் இதயத்தில் வசிப்பவர். தேவர்களுக்கெல்லாம் தேவராகத் திகழ்பவர். வேதப் பொருளாக விளங்குபவர். மஹா தேவனாகிய சிவபெருமானின் மைந்தர். இவ்வுலகைக் காக்கும் இறைவனானவர் என்று சொல்லி பாடுகிறார்.

அடுத்து 23-வது ஸ்லோகம் மிக முக்கியமானது.

ஸஹஸ்ராண்ட போக்தா
த்வயா சூர நாமா
ஹதஸ்தாரக ஸிம்ஹவக்த்ரஸ்ய தைத்ய:
மமாந்தர்ஹ்ருதிஸ்தம்
மன: க்லேச மேகம்
ந ஹம்ஸி ப்ரபோ
கிம் கரோமி க்வ யாமி?

பொருள்:
அதாவது, ஆயிரம் உலகங்களை ஆண்ட சூர பத்மன் மற்றும் தாரகன், சிம்ம முகன் முதலான அசுரர்கள் உன்னால் கொல்லப்பட்டார்கள். என்னுடைய இருதயத்தில் இருக்கும் மனக் கவலைகளில் ஒன்றைக்கூட நீ அழிக்கவில்லை. நான் என்ன செய்வேன்? எங்கு செல்வேன்? என்கிறார் ஆதிசங்கரர். கடைசியில் கேட்கும் கேள்விகள், ஏக்கங்கள் அவருக்காக இல்லை. அவர் ஸர்வக்ஞன். சாதாரண பக்தன் நிலையிலிருந்து கேட்பதாக அதாவது நாம் கேட்பதாக எழுதியிருக்கிறார்.

இதையடுத்து 24வது ஸ்லோகம் இன்னும் விசேஷமானது.

அஹம் ஸர்வதா துக்கபாராவஸந்நோ
பவான் தீனபந்துஸ்த்வ
தன்யம் ந யாசே.
பவத் பக்திரோதம்
ஸதா க்லுப்த பாதம்
மமாதிம் த்ருதம் நாச
யோமா ஸுதத்வம்.

பொருள் ‌.
அதாவது, எப்போதும் துக்கத்தில் இருக்கிறேன். நீ ஆதரவற்றவர்களுக்கு நல்வாழ்வு அளிப்பதில் ஆர்வம் உடையவனாக விளங்குகிறாய். நான் உன்னைத் தவிர வேறு எவரிடமும் வேண்ட மாட்டேன். நிரந்தரமாக தொல்லைப்படுத்துவதும் உன்னிடம் பக்தி செய்வதற்கு தடையாகவும் உள்ள என்னுடைய மன உளைச்சலை சீக்கிரம் போக்குவாயாக' என்கிறார்.

உலகோர் உய்வதற்காக, மக்கள் நலம் பெறுவதற்காக, துயரங்களில் இருந்து மீள்வதற்காக, ஆதிசங்கரர் திருவாய் மலர்ந்தருளிய புனிதமான சுப்ரமண்ய புஜங்கத்தை அனுதினமும் பாராயணம் செய்வோம். குறிப்பாக, சஷ்டி, கந்த சஷ்டி, கார்த்திகை, பூசம் முதலான நட்சத்திர நாட்கள் முதலான காலங்களில், செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை உள்ளிட்ட நாட்களில் செந்தில் ஆண்டவனை மனமுருகிப் பிரார்த்தித்து அவன் புகழ் பாடி அவன் அருள் பெறுவோம். தீராத நோயையும் தீர்த்தருள்வான். வேதனைகளில் இருந்து விடுவித்து அருளுவான் செந்தூர் ஆண்டவன்!

SCROLL FOR NEXT