ஆன்மிகம்

‘என்னை நம்புங்கள்; நீங்கள் அழைக்காமலேயே நான் வருவேன்!’ என்கிறார் ஷீர்டி சாயிபாபா

வி. ராம்ஜி

‘என்னை நம்புங்கள். நீங்கள் அழைக்காமலேயே நான் வருவேன். உங்களைத் தேடி வருவேன். ஏதேனும் ஒரு ரூபத்தில் உங்களுக்கு அருகில் வருகிற கடமை எனக்கு உள்ளது’ என அருளியுள்ளார் பகவான் ஷீர்டி சாயிபாபா.

இறைவனை அறிவதும் புரிவதும் உணருவதும் அத்தனை சுலபமில்லை. கடவுளை அடைவதற்கான வழி தெரியாமல்தான் நாம் அல்லாடிக்கொண்டிருக்கிறோம். எல்லோரும் கைகூப்புவது போல் கைகூப்புகிறோம். கண்கள் மூடிக்கொள்கிறோம். கன்னத்தில் போட்டுக்கொள்கிறோம். ‘எனக்கு இதைக் கொடு, அதைப் பண்ணு’ என்று வேண்டிக்கொள்கிறோம். கடவுளிடம் கோரிக்கைகளை வைக்கிறோம்.

உண்மையில், இவையெல்லாம் நம் சந்தோஷத்துக்காகத்தான் செய்துகொண்டிருக்கிறோம் என்பதை நாம் உணருவதே இல்லை. கடவுளை அடைவது என்பது உண்மையான அன்பிலும் சக உயிர்களை நேசிப்பதிலும்தான் இருக்கிறது என்பதை நாம் அறிவதே இல்லை.

கடவுள் எனும் இறைசக்தியின் சாந்நித்தியங்களையும் அவை நிகழ்த்துகிற அற்புதங்களையும் நாம் உணருவதே இல்லை. அதை உணர்த்துவதற்கும் நாம் உணருவதற்குமாக அவதரித்தவர்கள்தான் மகான்கள்.

அப்படியொரு மகானாக அவதரித்தவர்தான் சாயிபாபா. தன்னுடைய அன்பினாலும் கருணையாலும் இறைவழியைக் காட்டி போதித்தார் சாயிபாபா. சக உயிர்கள் மீது கொண்ட அன்பும் கருணையும்தான் கடவுளை அடைவதற்கான வழி’ என்று தன்னுடைய பக்தர்களுக்கு அருளியிருக்கிறார் பகவான் சாயிபாபா.

‘யாரெல்லாம் உங்களைச் சுற்றியுள்ள இந்த பரந்து பட்ட உலகத்து மனிதர்களிடம் யாரெல்லாம் உண்மையாகவும், அன்புடனும், கனிவுடனும் நடந்துகொள்கிறீர்களோ அவர்களை நான் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறேன். என்னை நம்புங்கள். என்னை நம்புகிறவர்கள், என்னை அழைக்க வேண்டும் என்று நான் காத்துக்கொண்டிருக்க மாட்டேன். என்னை நம்பினால், அவர்கள் அழைக்காமலேயே நான் அவர்களிடம் வருவேன்’ என்கிறார் பகவான் சாயிபாபா.

’என்னை முழுமையாக நம்புங்கள். என்னை நம்பியவர்களுக்கு அழைக்காமலேயே நான் வருவேன். ஏதேனும் ஒரு ரூபத்தில் உங்களுக்கு அருகில் வருவேன். உங்களுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். ஒவ்வொரு நிலையிலும் உங்களுக்கு பலம் தருவதே என்னுடைய மிக முக்கியமான பணி. கவலையே படாதீர்கள். எல்லோரிடமும் அன்புடன் நடந்துகொள்ளுங்கள். நான் உங்களுக்கு அருகில் வருவேன். உங்களைக் காப்பேன்’ என்கிறார் சாயிபாபா.

பாபாவை மனதார வேண்டினால், பாபா நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார். பாபா நம் பிரச்சினைகளையெல்லாம் சரி செய்து தருவார் என்று மெய்சிலிர்க்கச் சொல்லுகிறார்கள் பக்தர்கள். பாபாவை மனதார நினைத்து, எவருக்கேனும் ஒரு பழமோ, ஒரு உணவுப் பொட்டலமோ, ஒரு பிஸ்கட் பாக்கெட்டோ வழங்கினால், அவற்றின் மூலமாக பாபா நமக்கு அருளுவார். ஆனந்தப்படுவார். அழைக்காமலேயே வருவார் பாபா!

வியாழக்கிழமைகளில், பாபாவை தரிசிப்போம். பாபாவை நினைத்து, எவருக்கேனும் உணவு வழங்குவோம்.

SCROLL FOR NEXT