ஆன்மிகம்

சிவன் கோயிலில் பெருமாள் சந்நிதிகள்! 

வி. ராம்ஜி

தமிழகம் முழுவதும் ஆலயங்கள் உள்ளன. சோழ தேசம், பாண்டிய தேசம், பல்லவ தேசம் என பல தேசத்து மன்னர்கள் எழுப்பிய ஆலயங்கள் எழுப்பப்பட்டுள்ளன. அந்த ஆலயங்கள் இரண்டாயிரம் வருடங்களைக் கடந்தும் இன்றைக்கும் அழகுற, நிமிர்ந்து நிற்கின்றன.

சிவாலயங்கள், வைஷ்ணவ கோயில்கள், அம்மன் கோயில்கள், முருகன் கோயில்கள், விநாயகர் கோயில்கள், அனுமன் கோயில்கள் என பல அமைந்துள்ளன. நரசிம்மர் கோயில்களும் அமைந்திருக்கின்றன.

பொதுவாகவே சிவாலயங்களில் பெருமாளுக்கும் பெருமாள் கோயில்களில் சிவனாருக்கும் என சந்நிதிகள் அமைந்திருப்பது அரிதுதான். குறிப்பாக, சிவாலயங்களில் பெருமாளுக்கு சந்நிதி அமைந்திருக்கும் கோயில்கள் சிலவும் இருக்கின்றன.

சிதம்பரம் தலத்தில், கோவிந்தராஜ பெருமாள் சந்நிதி கொண்டிருக்கிறார். இந்த கோவிந்தராஜ பெருமாள் ரொம்பவே சாந்நித்தியமானவர். அதேபோல், திருப்பத்தூர் திருத்தலத்தில் அரங்கநாத பெருமாளை ஸேவிக்கலாம்.

கொடுமுடி சிவாலயத்தில், பெருமாள் சந்நிதியும் அமைந்திருக்கிறது. இந்தத் தலத்து இறைவனின் திருநாமம் -ஸ்ரீஅரங்கநாத பெருமாள். நெல்லையப்பர் கோயிலில், நெல்லை கோவிந்தர் சந்நிதி அமைந்துள்ளது. மிக விசேஷமானவர் இந்த பெருமாள்.

காஞ்சிபுரம் திருத்தலத்தில், நிலாத்தொண்ட பெருமாள் சந்நிதி அமைந்திருக்கிறது.திருவத்திபுரத்தில் உள்ள பெருமாளின் திருநாமம் ஸ்ரீஆதிகேசவ பெருமாள். நாகை மாவட்டம் சிக்கல் திருத்தலத்தில் உள்ள பெருமாளுக்கு கோல வாமனப் பெருமாள் என்று திருநாமம் என்கிறது ஸ்தல புராணம்.

திருப்பழனம் சிவன் கோயிலில், பெருமாளின் திருநாமம் கோவிந்தராஜ பெருமாள். திண்டிவனம் அருகில் உள்ள திருவக்கரை திருத்தலத்தில் பெருமாள் சந்நிதி அமைந்துள்ளது. இந்த பெருமாளின் திருநாமம் அரங்கநாத பெருமாள்.

சிவாகம பூஜைகள் படி சிவனாருக்கும் அம்பாளுக்கும் பூஜைகள் நடைபெற்றாலும் மகாவிஷ்ணுவுக்கு உரிய முறைப்படியே பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறுகின்றன.

சைவ வைணவ பேதமில்லாமல், ஹரியும் சிவனும் ஒன்று என்பதைச் சொல்லும் இந்த ஆலயங்களுக்குச் சென்று சிவனாரையும் பெருமாளையும் மனதார வழிபடுவோம்.

SCROLL FOR NEXT