கார்த்திகை மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை. கந்த சஷ்டி விழாவானது ஆலயங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தருணத்தில், வெற்றிவேல் முருகனை வேண்டுவோம். வெற்றிகளைத் தந்திடும் வேலவனை பிரார்த்திப்போம்.
கார்த்திகை மாதம் என்பது வழிபாட்டுக்கான அற்புதமான மாதம். ஐயப்ப விரதங்கள் ஒருபக்கம், கந்தசஷ்டி விரதம் இன்னொரு பக்கம், கார்த்திகை தீபம் மற்றொரு பக்கம் என வழிபாடுகளிலும் பூஜைகளிலும் லயித்து ஈடுபடக்கூடிய அற்புதமான மாதம்.
இந்த மாதத்தில், எங்கு பார்த்தாலும் ஆலயங்களில் விசேஷங்களும் விழாக்களும் அமர்க்களப்படும்.
கார்த்திகை மாதத்தில் கார்த்திகேய வழிபாடு மிகவும் விசேஷம். பொதுவாகவே செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை செவ்வாய்க்கிழமைகளில் வழிபடுவது மிகவும் உகந்தது. உரிய பலன்களை வழங்கவல்லது. முருகக் கடவுளுக்கு உகந்த நாளும் செவ்வாய்க்கிழமைதான்.
முருகப்பெருமானை செவ்வாய்க்கிழமைகளில் தரிசித்து வணங்கிப் பிரார்த்தனை செய்தால், செவ்வாய் தோஷம் முதலானவை நீங்கும். வீடு மனை வாங்கும் யோகம் கிடைக்கப் பெறலாம். சொத்துகளில் இருந்த சிக்கல்களையெல்லாம் தீர்த்தருள்வார் முருகக் கடவுள்.
முக்கியமாக, கார்த்திகை மாதத்து செவ்வாய்க்கிழமை என்பது முருகப் பெருமானை வணங்கி வளம் பெறுவதற்கு மிக அருமையான நாள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
செவ்வாய்க்கிழமை. கந்த சஷ்டி விழா நடந்துகொண்டிருக்கும் அற்புதகாலம். இந்த அருமையான நாளில், கார்த்திகை மாதத்தில் கந்தக் கடவுளை வணங்குங்கள். கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து வேண்டிக்கொள்ளுங்கள். செந்நிற மலர்கள் சூட்டி பிரார்த்தனை செய்துகொள்ளூங்கள்.
மாலையில் விளக்கேற்றி, முருகப்பெருமானுக்கு செவ்வரளி மலர் சூட்டி, கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து வேண்டிக்கொள்ளுங்கள். முருகப்பெருமானுக்கு எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து மனதார வழிபடுங்கள். வீடு மனை வாங்கும் யோகத்தைத் தந்தருள்வார். காரியத்தில் வெற்றியைத் தந்திடுவார். கவலைகளையும் துக்கங்களையும் போக்கிடுவார்.செவ்வாய் தோஷம் முதலான தோஷங்களைப் போக்கிக் காத்தருள்வார்.
கார்த்திகையில் செவ்வாய்க்கிழமையில்... கந்தனை வணங்குவோம். துக்கமும் கவலையும் நீங்கப் பெறுவோம்!