ஆன்மிகம்

திருப்பட்டூரில் குரு பிரம்மா; குரு தட்சிணாமூர்த்தி; குருப்பெயர்ச்சியில் சிறப்பு பரிகார ஹோமங்கள்; பூஜைகள்! 

வி. ராம்ஜி

திருப்பட்டூர் பிரம்மா கோயிலில், குரு பிரம்மாவும் இருக்கிறார். குரு தட்சிணாமூர்த்தியும் இருக்கிறார். குருப்பெயர்ச்சியையொட்டி, திருப்பட்டூர் திருத்தலத்துக்கு வந்து தரிசியுங்கள். தலையெழுத்தை திருத்தி அருளும் திருத்தலத்தில், குரு பிரம்மா, குரு தட்சிணாமூர்த்தி என இருவரையும் வணங்கி குருவருளும் திருவருளும் பெறுங்கள்.

திருச்சியில் இருந்து சென்னை செல்லும் வழியில் சுமார் 28வது கிலோமீட்டரில் உள்ளது சிறுவாச்சூர். இங்கிருந்து கிளை பிரிந்து செல்லும் சாலையில் பயணித்தால் திருப்பட்டூர் திருத்தலத்தை அடையலாம்.

இந்தத் தலத்தின் இறைவனின் திருநாமம் - ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர். அம்பாள் திருநாமம் - ஸ்ரீபிரம்ம சம்பத் கெளரி. இங்கே உள்ள ஒவ்வொரு சந்நிதியும் சாந்நித்தியம் நிறைந்தது. புராண காலத்தில் திருப்பிடவூர் என்றும் திருப்படையூர் என்றும் குறிக்கப்பட்டுள்ள இந்தத் தலத்தில், முருகப்பெருமான் அழகுறக் கோயில் கொண்டிருக்கிறார்.
இதேபோல், யோக சூத்திரத்தை அருளிய பதஞ்சலி முனிவரின் திருச்சமாதி எனப்படும் பிருந்தாவனமும் அமைந்திருக்கிறது. சித்தபுருஷரின் சமாதி அமைந்திருப்பதால், இன்னும் இன்னுமான சக்தியை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும் திருத்தலம் என்று போற்றப்படுகிறது திருப்பட்டூர்.

தலத்தின் பிரதான நாயகனாக, திருத்தல நாயகனாகத் திகழ்கிறார் பிரம்மா. தனிச்சந்நிதியில், பத்மபீடத்தில், கிழக்குப் பார்த்தபடி அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறார் பிரம்மா.

தன் கர்வத்தாலும் ஆணவத்தாலும் ஒரு தலையையும் படைப்புத் தொழிலையும் இழந்த பிரம்மா, இங்கே வந்து, பிரம்ம தீர்த்தம் உண்டுபண்ணி, 12 தலத்து சிவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து தவமிருந்து வேண்டினார்.

இதன் பலனாக, அம்பாளின் சிபாரிசுடனும் கருணையுடனும் சிவனருளைப் பெற்றார். ‘இழந்த உன் பதவியைத் தருகிறேன். இங்கே வரும் என் அடியவர்களின் தலையெழுத்தை திருத்தி அருளுவாயாக’ என்றார் சிவனார். ‘விதி இருப்பின் விதி கூட்டி அருளுக’ எனும் அருளுரைக்கு ஏற்ப, திருப்பட்டூர் தலத்துக்கு வரும் அன்பர்கள் அனைவருக்கும் தலையெழுத்தைத் திருத்தி அருளுகிறார் பிரம்மா என விவரிக்கிறார் கோயிலின் பாஸ்கர குருக்கள்.

இன்று நவம்பர் 15ம் தேதி குருப்பெயர்ச்சி நிகழ்வதையொட்டி, குருப்பெயர்ச்சி சிறப்பு ஹோம பூஜைகள் நடைபெற்றன. பரிகார ஹோமங்கள் நடந்தேறின. திருப்பம் தரும் திருப்பட்டூர் திருத்தலத்துக்கு வந்து தரிசியுங்கள். வாழ்வில் திருப்பங்கள் நடந்தேறும். குருவருளும் திருவருளும் கிடைக்கப் பெறுவீர்கள்.

SCROLL FOR NEXT