விரிவான சிந்தனையும், வேடிக்கையான பேச்சும், வினோதமான போக்கும் கொண்ட நீங்கள், நாலும் அறிந்தவர்கள். குருபகவான் இதுவரை உங்களின் தன வீடான இரண்டாம் வீட்டில் அமர்ந்து செல்வாக்கையும், பணவரவையும் தந்தார். வெளிவட்டாரத்திலும் உங்கள் கை ஓங்கியிருந்தது. பலரும் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் 15.11.2020 முதல் 13.11.2021 வரை குருபகவான் மூன்றாம் வீட்டில் சென்று அமர்கிறார். மூன்றில் குரு மறைவதால் முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே நேரடியாக சென்று முடிக்க வேண்டும். இடைத்தரகர்களை இனி நம்ப வேண்டாம். பல வேலைகளை முதல் முயற்சியிலேயே முடிக்க முடியாமல் இரண்டு, மூன்று முறை அலைந்து முடிக்க வேண்டி வரும். பண விஷயத்தில் கறாராக இருங்கள். உரிமையில் மனைவி, சகோதரர் உங்களின் குறைகளைச் சுட்டிக் காட்டினால் அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள். எவ்வளவு பணம் வந்தாலும் சேமிக்க முடியாதபடி செலவினங்களும் இருக்கும். இளைய சகோதரர் வகையில் மனத்தாங்கல் வரும். திடீரென்று புதிதாக அறிமுகமாகும் நண்பர் களை வீட்டுக்கு அழைத்து வர வேண்டாம். வசதி, செல்வாக்கைக் கண்டு மயங்கித் தவறானவர்களுடன் சென்றுவிட வேண்டாம். நண்பர்கள், உறவினர்களில் யார் உண்மையானவர்கள், யார் போலியானவர்கள் என்பதைக் கண்டுபிடிப்பதில் ஒரு தடுமாற்றம் இருக்கும்.
ஏழாம் வீட்டை குரு பார்ப்பதால் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். கணவன் மனைவிக்குள் அன்பும், அன்னியோன்யமும் குறையாது. குருபகவான் உங்களின் ஒன்பதாம் வீட்டைப் பார்ப்பதால் அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். ஓரளவு பணவரவு உண்டு. தந்தையாருடன் கருத்து மோதல்கள் குறையும். குருபகவான் 11-ம்
வீட்டைப் பார்ப்பதால் கல்வியாளர்கள், அறிஞர்கள் நட்பால் தெளிவடைவீர்கள். மூத்த சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். அந்தஸ்து உயரும்.
15.11.2020 முதல் 05.01.2021 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் குரு பயணிப்பதால் சாதித்துக் காட்டுவீர்கள். தடைபட்டுக் கொண்டிருந்த காரியங்களெல்லாம் முடிவுக்கு வரும். எதிலும் வெற்றி கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகள் அமையும். அரசால் ஆதாயமடைவீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் சாதகமாக முடியும். தள்ளிப்போன கல்யாணம் கூடி வரும். வீடு, மனை வாங்க வங்கிக் கடனுதவி கிடைக்கும். பிரபலங்களைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள்.
06.01.2021 முதல் 04.03.2021 வரை திருவோணம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் பணவரவு அதிகரிக்கும். தந்தைக்கு மருத்துவச் செலவுகள் குறையும். நிரந்தர வருமானத்துக்கு வழி தேடுவீர்கள். விலையுயர்ந்த ஆடை, அணி கலன்கள் வாங்குவீர்கள். புது வாகனம் அமையும்.
05.03.2021 முதல் 22.05.2021 வரை மற்றும் 23.07.2021 முதல் 13.11.2021 வரை அவிட்டம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் திடீர் யோகம் உண்டாகும். சொத்து வாங்குவீர்கள். ராஜ தந்திரத்தால் வெற்றியடைவீர்கள். பெரிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
23.05.2021 முதல் 22.07.2021 வரை சதயம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். வீடு, வாகனத்தைச் சீர் செய்வீர்கள். நிலுவையிலிருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.
குருபகவான் 06.04.2021 முதல் 14.09.2021 வரை உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் அதிசாரமாகியும், வக்கிரமாகியும் செல்வதால் ஓரளவு நல்ல பலன்கள் உண்டாகும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வாகனத்தை மாற்றுவீர்கள். விபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. மிதமான வேகத்தில் செல்லவும். தாய்வழி உறவினர்கள் உதவுவார்கள்.
வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் விஷ யத்தில் கறாராக இருங்கள். சந்தை நிலவரத்தைத் தெரிந்து செயல்படப்பாருங்கள். தள்ளுபடி, சலுகைகளை அறிவித்து பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். வேலையாட்களால் பிரச்சினைகள் வரும். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற போராட வேண்டி வரும். உத்தியோகத்தில் விமர்சனங்களும், வீண்பழியும் வந்து செல்லும். திறமை இருந்தும், கடினமாக உழைத்தும் அங்கீ காரம் கிடைக்கவில்லையென்று ஆதங்கப்பட்டுக் கொண்டேயிருப்பீர்கள். அதிகாரிகள் ஆதரவாகப் பேசினாலும் கூடுதலாக உங்களுக்கு வேலைகளைத் தருவார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு சற்றுத் தாமதமாக கிடைக்கும்.
இந்தக் குரு மாற்றம் ஏமாற்றங்களையும், எதிலும் தாமதத்தையும் ஏற்படுத்தினாலும் விட்டுக் கொடுத்துப் போகும் குணத்தால் மகிழ்ச்சியைத் தருவதாக இருக்கும்.
பரிகாரம்
மதுரை ஆரப்பாளையம் புட்டுசொக்கநாதர் கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தியை சென்று வணங்குங்கள். எதிர்ப்புகள் அகலும்.