தீபாவளி நாளில், நாம் பட்சணங்கள் படைக்கிறோம். அக்கம்பக்கத்தாருக்கும் உறவுக்காரர்களுக்கும் வழங்குகிறோம். அவர்கள் நமக்கு வழங்குவதை மகிழ்வுடன் ஏற்கிறோம். இப்படிக் கொடுப்பதும் பெறுவதுமாகவும் இருக்கிற அன்புக்கும் ஈகைக்கும் உகந்த விழாவாகத்தான் தீபாவளியைக் கொண்டாடுகிறோம். இதையே ‘அன்னக்குவியல்’ என்றும் ‘சப்பன் போக்’ என்றும் கொண்டாடுகிறார்கள்.கோகுலத்தின் ஆயர்பாடி மக்கள் பலரும் கொண்டாடுகிற இந்த விழா, தீபாவளியையொட்டித்தான் நடைபெறுகிறது.
’கோ’ என்றால் பசு. ‘குலம்’ என்றால் கூட்டம். எனவே, அவர்கள் வாழ்ந்த ஊர் கோகுலம். அதாவது ஆயர்பாடி. அதைப் பராமரிப்பவர்கள் ஆயர் இனத்தவர்கள். ஆக்ரா, மதுரா சேர்ந்த தற்போதைய வட மதுரா பிரதேசம்தான் பழைய கோகுலம். அவர்கள் இந்தியின் கிளை மொழியாகிய இலக்கிய வளம் மிக்க ‘வ்ரஜ’ மொழியைப் பேசினர். எனவே, அந்தப் பகுதி ‘வ்ரஜ பூமி’ எனப்படுகிறது.
ஒரு முறை, கோகுலவாசிகள் மழை வேண்டி கோவர்த்தன கிரியை பூஜித்தனர். எனவே, தேவர்களின் தலைவனான இந்திரன் இரவு- பகலாக ஏழு நாட்கள் கடும் மழையைப் பொழியச் செய்தான்.
இதனால் எங்கு பார்த்தாலும் மழை. ஊரெங்கும் வெள்ளம். வெள்ளத்தில் இருந்து பாதுகாப்பாக இருக்க குடை இருந்தால் நன்றாக இருக்குமே? மொத்த ஊரும் பாதுகாக்க வேண்டுமெனில் என்ன செய்வது? இறைவன் தான் ஏதாவது செய்யவேண்டும். கண்ண பரமாத்மா, கோவர்த்தன குன்றைப் பெயர்த்தெடுத்து மக்கள் மற்றும் பசுக்களுக்குக் குடையாகப் பிடித்தான். மொத்த ஆயர்குல மக்களையும் காத்தான். அதனால்தான் கண்ணன் ‘கோவர்த்தன கிரிதாரி’ என்று அழைக்கப்படலானான்.
இன்றும் இந்த ஊரில், கோவர்த்தனகிரி பூஜை நடத்தப்படுகிறது. தீபாவளிக்கு மறுநாள் விமரிசையாகவும் கோலாகலமாகவும் நடைபெறுகிறது கோவர்த்தன கிரி பூஜை. கிரிராஜன்தான் மணமகன். தீபாவளியே மணமகள். அவர்களின் திருமண நாளே அது!
அன்றைய தின விருந்து பிரமாண்டம். அமர்க்களப்படும். திருமணம் அல்லவா. அந்த விருந்துக்கு ‘அன்னக்குவியல்’ என்று பெயர். அந்த நாளில், மொத்தம் 56 வகை உணவுகள் படைக்கப்படுமாம்! இதை ‘சப்பன் போக்’ என்கிறார்கள். ‘சப்பன்’ என்றால் 56 என்று அர்த்தமாம். ‘போக்’ என்றால் போஜனம், உணவு என்று அர்த்தம்.
சமைக்கப்பட்டது, சமைக்கப்படாதது, சர்க்கரை சேர்த்தது, சேர்க்கப்படாதது, பாலில் செய்தது, கிழங்கு வகைகள், சில புதிய பழங்கள், உலர்ந்த பழங்கள் என்று பலவிதப் பண்டங்கள் இருக்கும். அதே போல், விழுங்குபவை, கடித்துத் தின்பவை, சப்பிச் சாப்பிடுபவை, நக்கிச் சாப்பிடுபவை... இப்படிப் பல விதத் தயாரிப்புகள் அடங்கியதுதான் இந்த ‘சப்பன் போக்’ என்ற விழாப் படையல்.
தீபாவளி நாளில், நாம் பட்சணங்கள் படைக்கிறோம். அக்கம்பக்கத்தாருக்கும் உறவுக்காரர்களுக்கும் வழங்குகிறோம். அவர்கள் நமக்கு வழங்குவதை மகிழ்வுடன் ஏற்கிறோம். இப்படிக் கொடுப்பதும் பெறுவதுமாகவும் இருக்கிற அன்புக்கும் ஈகைக்கும் உகந்த விழாவாகத்தான் தீபாவளியைக் கொண்டாடுகிறோம்.