ஆன்மிகம்

பிரிந்த தம்பதியை ஒன்று சேர்க்கும் கேதார கெளரி நோன்பு! வயது முதிர்ந்த தம்பதிக்கு புடவை வேஷ்டி! 

வி. ராம்ஜி

தீபாவளி திருநாளில், தீப ஒளி நன்னாளில், கேதார கெளரி நோன்பு கொண்ட அற்புதமான நாளில், வயது முதிர்ந்த தம்பதிக்கு புத்தாடை வழங்கி, மங்கலப் பொருட்கள் கொடுத்து நமஸ்கரித்தால், பிரிந்த தம்பதியும் ஒன்று சேருவார்கள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

கேதாரம் என்றால் வயல். கௌரியாகிய பார்வதி வயல்வெளியில் தவம் இருந்து சிவபெருமானின் அருளைப் பெற்றதால் இந்த விரதம் கேதார கௌரி விரதம் எனப்படுகிறது.

மனதில் வயல் போன்ற பசுமையான எண்ணங்களை வளர்த்துக்கொண்டு இறைவனை மனப்பூர்வமாக வணங்கினாலே போதும். தீபாவளியன்று பூஜை முடிந்ததும் பூஜையறையில் விளக்கேற்றி சிவபெருமான் குறித்த பாடல்களைப் பாடி ஆராதனை செய்யலாம். அதேபோல், சிவபார்வதி படத்துக்கு முன்னால் அமர்ந்து அமைதியாக தியானிக்க வேண்டும்.

வீட்டில் சிவ லிங்கம் இருந்தால் அதற்குப் பால் அபிஷேகம் பண்ணலாம். ஆலயம் சென்று சிவனாருக்கு அபிஷேகம் செய்வதும் மிகுந்த பலன்களை வழங்கக் கூடியது. அந்த அபிஷேகப் பாலையே பிரசாதமாக சாப்பிடலாம். குடும்பத்தில் அனைவருக்கும் வழங்கலாம்.

கேதார கௌரி விரதத்துக்கெனத் தனியாகப் பாயசம் அல்லது அப்பம் அல்லது சர்க்கரைப் பொங்கல் என நைவேத்தியம் செய்து வணங்கி வழிபடலாம். அம்பாள் துதியைப் பாராயணம் செய்யலாம்.

சிவ மந்திரங்களைச் சொல்ல வேண்டும். இதனால், சிவனாரின் அருளையும் உமையவளின் அருளையும் பெறலாம். ருத்ரம் ஜபித்து பாராயணம் செய்யலாம்.
முக்கியமாக... ஓம் நமசிவாய, சிவாய நம ஓம் என்ற பஞ்சாட்சர மந்திரத்தை அன்றைய தினம் முழுக்க சொல்லிக்கொண்டே இருக்கலாம்.

தீபாவளியன்று விரதம் இருக்க முடியாதென்பதால் குறைந்த அளவு உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். சிலர் அதைக் குறையாக கருதினால் மறுநாள் விரதம் இருந்து விரதத்தைக் கடைப்பிடிக்கலாம்.

தீபாவளி நன்னாளில், தீபாவளித் திருநாளில், கேதார நோன்பு இருந்தாலும் இல்லையென்றாலும் அன்றைய நாளில், சிவ பார்வதியை வணங்குவதும் பசுவுக்கு அன்னமிடுவதும் விசேஷ பலன்களைத் தந்தருளும் என்பது ஐதீகம்.

பசுவுக்கு உணவிட்டு, யாரேனும் ஒருவருக்கு புத்தாடைகள் வழங்கி நமஸ்கரித்தால், பிரிந்த கணவனும் மனைவியும் ஒன்று சேருவார்கள். சேர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும் தம்பதி, கருத்தொருமித்த தம்பதியாக, ஆதர்ஷ தம்பதியாக, இணையற்ற தம்பதியாக வாழ்வார்கள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

SCROLL FOR NEXT