ஆன்மிகம்

குருப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்: கடக ராசி வாசகர்களே (15.11.2020 முதல் 13.11.2021 வரை)

செய்திப்பிரிவு

ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

நிகழும் சார்வரி வருடம், ஐப்பசி மாதம் 30ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, 15.11.2020 சுக்ல பட்சத்து பிரதமை திதி, சமநோக்குள்ள அனுஷம் நட்சத்திரம், சோபனம் நாமயோகம், கிம்ஸ்துக்கினம் நாமகரணம், நேத்திரம், ஜுவனம் மறைந்த மந்தயோக நாளில் சரத்ருதுவில், சுக்கிரன் ஓரையில், பஞ்சபட்சியில் கோழி ஊன் தொழில் புரியும் காலத்திலும் தசிணாயனப் புன்யகாலத்தில் இரவு 09 மணி 34 நிமிடத்தில் மிதுனம் லக்னத்தில் நாவம்ச சக்கரத்தில் கும்பம் லக்னத்தில் ஆன்மீக அறிவொளி கிரகமான பிரகஸ்பதி எனும் குருபகவான் தன் சொந்த வீட்டிலிருந்து சர வீடாகிய சனிபகாவனின் வீடான மகரம் ராசிக்குள் நுழைகிறார்.

குருபகவான் இப்போது பெயர்ச்சியாகி சனிபகவானுடன் சென்று சேர்வதாலும், சனிபகவானின் ராசிகளாகிய மகரம் மற்றும் கும்பத்திலும் தொடர்ந்து பயணம் செய்ய இருப்பதாலும் உலகெங்கும் பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருக்கும். கைகளில் பணப்புழக்கம் குறையும். மக்கள் தெருவில் இறங்கி போராடுவார்கள். ஆளுங்கட்சிக்கு எதிரான எண்ணங்கள் அதிகரிக்கும். ஆனாலும் தேர்தல் முடிவுகள் ஆள்பவர்களுக்கே சாதகமாகும். சனிபகவான் எதையும் சுருக்குபவர். குருபகவானோ எதையும் பெருக்குபவர்.

பெருகி வளர்க்கும் கிரகம் குருபகவான் சுருக்கி சுண்ட வைக்கும் கிரகமான சனிபகவானுடன் சேர்வதால் உணவுத் தட்டுப்பாடு வரும். வெங்காயம், தக்காளி, கோதுமை தட்டுப்பாடு வரும். பங்குச் சந்தைகளில் பங்குகளின் விலை விழும். தங்கத்தின் விலை மேலும் உயரும். நிலக்கரி, தங்க சுரங்கங்கள் அதிகரிக்கும். பூமியில் புதைந்து கிடக்கும் நிலக்கரி, பெட்ரோகெமிக்கல், தங்கப் படிகங்கள் செயற்கைக் கோள் உதவியுடன் கண்டறியப்படும். பெட்ரோல், டீசல் வாகனங்களின் விலை உயரும். ஆசிரியர்கள், மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவார்கள். பாரம்பரிய தொழில் நிறுவனங்கள் பாதியாக உடையும். கர்ப்பச்சிதைவுகள் அதிகரிக்கும்.
ராணுவம், காவல்துறை, பலப்படுத்தப் படும்.

நாட்டின் எல்லையை பாதுகாக்கும் வீரர்களுக்கு புதிய சலுகைகள் அறிவிக்கப்படும். எலக்ட்ரிக்கல், செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் கருவிகளை இந்தியாவே தயாரிக்கும். வெளிநாட்டு நிறுவனங்கள் பல போட்டிபோட்டு இந்தியாவில் முதலீடு செய்யும். சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட பழமையான வைத்திய முறைகள் பிரபலமாகும். ஆடம்பர வாழ்க்கையிலிருந்து விடுபட்டு மக்கள் யதார்த்தமான வாழ்க்கைக்குள் நுழைவார்கள். ரியல் எஸ்டேட் சூடு பிடிக்கத் தொடங்கும். கல்வி முறை மாறும், கல்வி நிறுவனங்கள், ஆசிரியர்களை கட்டுப்படுத்த புதிய சட்டங்கள் நடைமுறைக்கு வரும். ஆன்லைன் கல்வி முறை இப்போது பிரபலமானாலும் வரும் செப்டம்பர் 2021 முதல் வகுப்பறை கல்வி வழக்கத்திற்கு வரும். மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி நவீன வாழ்க்கையிலிருந்து மக்களை விடுவித்து இயல்பாக, இயற்கையாக வாழ வழி வகுக்கும்.

கடக ராசி வாசகர்களே

தீவிரமாக யோசித்து மிதமாகச் செயல்படும் நீங்கள், வாக்குச் சாதுரியத்தால் வாதங்களில் வெல்வீர்கள். ஏறக்குறைய கடந்த ஓராண்டு காலமாக சகடை வீட்டில் அமர்ந்து ஆறாக்கி, வேறாக்கி உங்களைக் கூறுபோட்டுப் பார்த்த குருபகவான் 15.11.2020 முதல் 13.11.2021 வரை உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் அமர்ந்து உங்களை ஆட்சிசெய்ய இருக்கிறார். எதிலும் ஆர்வமில்லாமல் எதையோ இழந்ததைப் போல் சோர்ந்து, வதங்கியிருந்தீர்களே! இனி உற்சாகம் பிறக்கும். பெற்ற பிள்ளையிடம் கூடப் பேசுவதற்குப் பயந்து நடுங்கினீர்களே! அவதூறால் அவதிப்பட்டீர்களே! எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாததைப் போல ஒரு வெறுமையை உணர்ந்தீர்களே! இனி இந்த அவல நிலையெல்லாம் மாறும். குடும்பத்துக்குள் சுபிட்சம் நிலவும்.

குரு உங்கள் ராசியைப் பார்ப்பதால் ஆரோக்கியம் குறையும். எளிய உடற்பயிற்சி, இயற்கை உணவு மூலமாகவே ஆரோக்கியம் கூடும். மற்றவர்களைக் குறைகூறும் போக்கை மாற்றிக் கொள்வீர்கள். எதிர்மறை எண்ணங்கள் நீங்கும். குருபகவான், லாபவீட்டைப் பார்ப்பதால் உங்களின் ஆளுமைத் திறன், நிர்வாகத் திறன் அதிகரிக்கும். பங்கு வர்த்தகத்தால் பணம் வரும். வேற்றுமதத்தவர்களால் நன்மை உண்டு. உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டை குரு பார்ப்பதால் எங்குச் சென்றாலும் மதிக்கப்படுவீர்கள்.
15.11.2020 முதல் 05.01.2021 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் குரு பயணிப்பதால் திடீர் பணவரவு உண்டு. பிரபலங்கள் உதவுவார்கள். சமாளிக்க முடியாத பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். கண் வலி குறையும். தந்தைவழி உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் நீங்கும். சிலருக்கு அரசு வேலை கிடைக்கும்.

06.01.2021 முதல் 04.03.2021 வரை திருவோணம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் பிரபலமாவீர்கள். வருமானம் உயரும். விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். சொந்தபந்தங்களின் வருகையால் வீடு களைகட்டும். குலதெய்வப் பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அடிக்கடி பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். பெரிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வி.ஐ.பிக்களின் வீட்டு விசேஷங்களில் முதல் மரியாதை கிட்டும். வீடு, மனை அமையும்.

05.03.2021 முதல் 22.05.2021 வரை மற்றும் 23.07.2021 முதல் 13.11.2021 வரை அவிட்டம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் நினைத்த காரியங்களை முடிப்பீர்கள். உங்களின் அந்தஸ்து உயரும். சொத்துப் பிரச்சினை சுமுகமாகும். தள்ளிப் போன வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். பிள்ளை பாக்கியம் உண்டு. பிள்ளைகளால் புகழடைவீர்கள்.

23.05.2021 முதல் 22.07.2021 வரை சதயம் நட்சத்திம் ஒன்றாம் பாதத்தில் குருபகவான் செல்வதால் இக்காலக்கட்டத்தில் யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். யாருக்கும் சிபாரி செய்யாதீர்கள். உறவினர், நண்பர்கள் விஷயத்தில் அத்துமீறித் தலையிட வேண்டாம்.

குருபகவான் 06.04.2021 முதல் 14.09.2021 வரை எட்டாம் வீட்டுக்கு குரு அதிசாரமாகியும், வக்கிரமாகியும் செல்வதால் பணம் வரும். வீண் செலவுகள், அதிகரிக்கும். நெருங்கிய நண்பர்கள், உறவினர்களுடன் கருத்துமோதல்கள் வரும்.

வியாபாரத்தில் கடன் பிரச்சினையாலும், பணப்பற்றாக்குறையாலும் புதிய முதலீடுகள் செய்ய முடியாமல் தவித்தீர்களே! இனி பண உதவி கிடைத்து தொழிலை விரிவுப்படுத்துவீர்கள். பெரிய வாய்ப்புகளும் வரும். பாக்கிகளும் வசூலாகும். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளாலும், சக ஊழியர்களாலும் ஓரங்கட்டப்பட்டீர்களே! இனி மரியாதை கிடைக்கும்.

இந்த குருப்பெயர்ச்சி பதுங்கியிருந்த உங்களை பளிச்சென முன்னேற வைப்பதுடன் காசு, பணம் சொத்து சுகத்தையும் தரும்.

பரிகாரம்

தஞ்சாவூர் தென்குடித்திட்டையில் உள்ள வசிஷ்டேஸ்வரர் கோவிலில் உள்ள குருபகவானைச் சென்று தரிசியுங்கள். செல்வ வளங்கள் பெருகும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

SCROLL FOR NEXT