ஆன்மிகம்

சமணத் திருத்தலங்கள்: முக்தி மலை- மங்கி துங்கி

விஜி சக்கரவர்த்தி

இந்தியாவிலும் கிழக்கு ஆசியாவிலும் பல்வேறு ராமாயணங்கள் புழங்கிவருகின்றன. அவற்றில் ஜைன ராமாயணமும் ஒன்று. அதில் ராமபிரான், மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள நாசிக் நகரத்தின் அருகே மங்கி துங்கி என்ற மலையில் முக்தி அடைந்ததாகக் கூறப்பட்டுள்ளது. அங்கேயே அனுமனும்,சுக்ரீவனும் முக்தி அடைந்துள்ளனர்.

மங்கி துங்கி என்பது இரட்டை மலைகள். இவை இயற்கையாகவே ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. மலையேற நான்காயிரத்து ஐநூறு படிகட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

மலை மீது ஏழு ஆலயங்கள்

மலை மீது ஏறும் பொழுதே பல சமண தீர்த்தங்கரர்களின் திருவுருவங்களும் வரலாற்றுச் சின்னங்களும் ஆங்காங்கே காணப்படுகின்றன. பல கல்வெட்டுகள் உள்ளன. காவல் தெய்வங்கள் அழகாக வடிக்கப்பட்டுள்ளன. தேவி சக்ரேஸ்வரி யட்சி திருவுருவம் முக்கியமானது ஆகும்.மேலும் எண்ணற்ற முனிவர்கள் இம்மலையில் முக்தி அடைந்ததால் சமணர்களுக்கு இது ஒரு புனிதமான,முக்தி மலை ஆகும்.

மலைகளில் ஏழு கோயில்கள் காணப்படுகின்றன. அவற்றில் பல சமண தீர்த்தங்கரர்களின் திருமேனிகள் வடிக்கப்பட்டுள்ளன. பல கல்வெட்டுகள் வட மொழியிலும் மகதி மொழியிலும் உள்ளன. நானூறு ஆண்டுகளுக்கு மேலான இவை, சிதைந்து காணப்படுகின்றன.

மங்கிமலை மீது மகாவீரர் குகைக் கோயிலில் வர்த்தமானர் அமர்ந்தபடி இருக்கிறார். இடதுபுறம் நான்கு கடவுளர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆதிபகவன் தன் கோயிலில் இருபது சிலைகளுடனும் நடுப்பகுதியில் பார்சுவநாதர் முப்பத்தியெட்டு சிலைகளுடனும் உள்ளனர்.

பல்பத்ரா குகை

பார்சுவநாதர் நாற்பத்தியேழு கடவுளர்களுடன் அருளுகிறார். சாரணர்களின் உருவங்கள் நிறுவப்பட்டுள்ளன. மலையில் ஒரு குளம் உள்ளது. இது ‘கிருஷ்ணகுந்த்’ எனப்படுகிறது. இங்கு பகவான் கிருஷ்ணர் தன் இறுதிக்காலத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு குகையில் பலராமர் சிலை உள்ளது. இது ‘பல்பத்ரா குகை’ என அழைக்கப்படுகின்றது. இங்குதான் பலராமர் தவம் நோற்று மேலுலகு அடைந்தார் என்கின்றனர்.

துங்கி மலையில் ஐந்து குகைக்கோயில்கள் உள்ளன. அவற்றில் இரண்டு, அறவாழி அந்தணன் ஆதிநாதருக்கும் சாதல் பிறத்தல் கடந்த சந்திரப்பிரபு சுவாமிக்கும் அர்பணிக்கப்பட்டுள்ளன. மற்றொன்றை ‘ராமசந்திர குகை’ என்கின்றனர். இதில் அனுமன், கவயன், கவயாட்சன், நீல் ஆகிய வானரர்களின் சிலைகள் பரவசமூட்டுகின்றன. ராமபிரானின் படைத்தளபதி இங்கு முனிவர் உருவக்கோலத்தில் காணப்படுகிறார்.

மற்ற குகைகளில் புத்தர், சுத்தர் எனும் இரு முனிவர்கள் சிலை வடிவமாகத் தோன்றுகின்றனர். பகவான் விருஷப தேவரின் இளைய குமாரர் பாகுபலி திருஉருவச் சிலைகளும் நிறுவப்பட்டுள்ளன. இராமாயண காலத்தவரான இருபதாவது தீர்த்தங்கரர் முக்காலமும் உணர்ந்த முனிசு விரத பகவான் அமர்ந்த நிலையில் அருளுகிறார்.

மலைகளின் அடிவாரத்தில் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. ஒன்று பூணணி புனையா பாரீசநாதருக்கும் மற்றொன்று அமலன் ஆதிபகவனுக்கும் உரியது. ஆயிரத்தெட்டு திருவுருவங்களுடன் தாமரைக் கோயில் உள்ளது.

ஆண்டுதோறும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் இவ்விடம் விழாக்கோலம் பூணுகிறது. பல்வேறு இடங்களிலிருந்தும் மக்கள் திரண்டு தரிசிக்க வருகின்றனர். தூய்மையான மனதுடன் வந்தால்தான் இந்த மலைப்பாதையில் பயணம் செய்து சரியாக ஆலயத்தை அடைய முடியும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.

SCROLL FOR NEXT