ஆன்மிகம்

செங்குருதியால் நனைந்த கர்பலா

இக்வான் அமீர்

அக்.15 மொஹரம்

நபி பெருமானாரின் மரணத்துக்குப் பிறகு, நபியின் தோழர் அபூபக்கர் ஜனாதிபதியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். பதவியேற்ற அடுத்த நாளே தோளில் மூட்டையைச் சுமந்த வண்ணம கடைத்தெருவில் நின்றார்.

மக்களுக்கோ வியப்பு. ஜனாதிபதி ஏன் பழையபடி துணி வியாபாரம் செய்யவேண்டும்?

அந்த நேரத்தில் நபியின் மற்றொரு தோழர் உமர் அங்கு வந்தார். நேராக அபூபக்கரிடம் சென்றார்.

“ஜனாதிபதி அவர்களே! இங்கு என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?”

“வழக்கம் போல இவைகளை விற்பனை செய்யப்போகிறேன்”

“என்ன துணி விற்பனையா? இப்போதுமா? தற்போது, தாங்கள் எங்களின் கண்ணியத்திற்குரிய ஜனாதிபதி. எங்களை வழிநடத்த வேண்டியவர். எங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டியவர். இந்நிலையில் வியாபாரம் செய்ய நேரம் எங்கிருக்கிறது?”

“நான் என் வயிற்றுப்பாட்டையும் கவனிக்க வேண்டும் உமரே! இல்லையென்றால் என் குடும்பத்தார் பட்டினி கிடக்க வேண்டியதுதான்”.

இதைக் கேட்டதும் உமர், “சரி வாருங்கள். இது குறித்து நம் தோழர்களுடன் கலந்து பேசி ஒரு முடிவெடுப்போம்!” என்று அபூபக்கரை அழைத்துச் சென்றார்.

ஜனாதிபதியின் பிரச்சினை சம்பந்தமாக உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் ‘பைத்துல்மால்' எனப்படும் பொதுநிதியிலிருந்து' ஜனாதிபதிக்கு உதவியளிக்க முடிவெடுக்கப்பட்டது.

ஒரு சராசரி குடும்பத்திற்கான குறைந்தபட்சத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான நிதியுதவி தரப்பட்டது. கோடையில் இரு ஜோடித் துணிகள், குளிர் காலத்தில் இரு போர்வைகள், ஜனாதிபதிக்கும் அவர் குடும்பத்தார்க்கும் தேவையான அன்றாட உணவுக்கும் போதுமான நிதியாக இருந்தது.

அபூபக்கரும் இந்த முடிவை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டார். ஆனால் தாம் முன்னர் சேர்த்த சொத்துக்கள் அனைத்தையும் ஒரு பைசா விடாமல் அரசின் கரூவூல அதிகாரியிடம் ஒப்படைத்துவிட்டார்.

அபூபக்கரின் ஆட்சி இரண்டு ஆண்டுகள் நடந்தது. மிகவும் எளிமையாக வாழ்ந்து மக்களுக்கு நல்லாட்சியைத் தந்தவர் நோயுற்றார். மரணத் தறுவாயில் தம் மனைவி மக்களை அருகில் அழைத்தார். “இதுவரையும் நாம் பயன்படுத்திய பைத்துல்மால் பணம் எவ்வளவு என்று நான் அறிய விரும்புகிறேன்.!” என்றார்.

அவருடைய பிள்ளைகள் உடன் கணக்கிட்டு அத்தொகையை தம் தந்தையாரிடம் சொன்னார்கள். “பிள்ளைகளே! நான் இறந்த பின் என்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் விற்றுவிடுங்கள். நாம் பயன்படுத்திய மக்கள் பணத்தை பைத்துல்மாலில் சேர்த்துவிடுங்கள். இதன் மூலம் மக்களின் ஒவ்வொரு பைசாவும் திருப்பிச் செலுத்தப்பட்டுவிடும்!” என்று பணித்தார்.

வாரிசுரிமை வேண்டாம்

அபூபக்கர் அவர்களின் விருப்பம் பூர்த்தி செய்யப்பட்டது. அபூபக்கரின் மறைவுக்குப் பின்னர், உமரை ஜனாதிபதியாக மக்கள் தேர்நதெடுத்துக்கொண்டனர். உமர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் இஸ்லாமியப் பேரரசு விரிந்து பரந்திருந்தது. குறைவாக உண்ணுவதையும், எளிமையாக உடுத்துவதையும் உமர் பழக்கமாகக் கொண்டிருந்தார். கிழிந்த ஒட்டுப்போட்ட பழைய ஆடைகளே அவரது அணிகலனாக இருந்தன. ரொட்டியும் அதில் தடவிக்கொள்ள ஆலிவ் எண்ணையுமே அவர்களின் உணவாக இருந்தன.

ஒருமுறை, ரோமப் பேரரசிலிருந்து தூதுவர் ஒருவர் மதீனாவுக்கு வந்தார். ஜனாதிபதி உமரைச் சந்திக்க விரும்பினார். தெருவோரத்து மரத்தடியில் ஜனாதிபதி உமர், ஒரு மரத்தடியில் தம் கையையே தலைக்கு முட்டுக் கொடுத்து நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார். ஜனாதிபதி அணிந்திருந்த சட்டையில் பனிரெண்டு ஒட்டுக்கள் போடப்பட்டிருந்தன!

உமரின் ஆட்சி 13 ஆண்டு காலம் நீடித்தது. தமக்கு அடுத்ததாக அவரது மகன் அப்துல்லாஹ்வை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்க மக்கள் நினைத்தும் மரணப் படுக்கையில் இருந்த உமர் தமக்குப் பின் வாரிசுரிமை உருவாவதை விரும்பவில்லை.

நபித் தோழர்கள் அபூபக்கர், உமர் ஆகியோரைத் தொடர்ந்து நேர்வழி சென்ற கலிஃபாக்களாக நபித் தோழர்கள் உஸ்மான் மற்றும் அலி அடுத்தடுத்த ஜனாதிபதிகளாக மக்கள் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப் பட்டனர். நல்லாட்சியும் நடந்தது.

யஜீத்தின் கொடுங்கோலாட்சி

ஆனால், அதற்குப் பின்னர், ஜனாதிபதியான, முஆவியா தனது பிள்ளைப் பாசத்தால் தடுமாறி, தமது மகன் யஜீதை ஜனாதிபதியாக ஆட்சி பீடத்தில் வலிய அமர்த்தினார்.

கொடியவன் யஜீத், ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்கி சர்வாதிகாரி ஆட்சி புரிகிறான். இதற்கு நபிகளின் பேரனாரான இமாம் ஹூசைனின் ஒப்புதலும் அங்கீகாரமும் தேவையாக இருந்தது. அக்காலத்தில் மக்களின் மத்தியில் செல்வாக்கு பெற்றவராக அவர் இருந்தார். இந்த கொடுங்கோன்மையை எதிர்த்தும், மக்களாட்சியை நிலைநிறுத்தவும் இமாம் ஹீஸைன் வீறு கொண்டு எழுந்தார். யஜீத்துக்கு எதிராக கர்பலா மைதானத்தில் நடந்த போரில் வீரமரணம் அடைந்தார்.

ஜனநாயகத்துக்காக இமாம் ஹூசைனின் தியாகப் பலிதான் இன்றும் மொஹரம் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

SCROLL FOR NEXT