ஆன்மிகம்

’நான் உங்களுக்கு கடன்பட்டிருக்கிறேன்’ என்கிறார் சாயிபாபா! 

வி. ராம்ஜி

’நான் உங்களுக்கு கடன்பட்டிருக்கிறேன். விரைவில் உங்களுக்கான கடனை அடைத்துவிடுவேன். கடன் என்பது உங்களைக் காப்பது. அதுவே என் கடமை’ என்கிறார் பகவான் சாயிபாபா.

குருவருள் இருந்தால்தான் திருவருளைப் பெறமுடியும் என்பார்கள். நம் வாழ்வில் நமக்கு குரு என்பவர் மிக மிக அவசியம். குருவின் வழிகாட்டுதல் இல்லாமல் இங்கே ஒரு காரியமும் நடப்பதில்லை. குருவின் ஆசீர்வாதம் இல்லாமல் எந்தவொரு செயலும் இங்கே வெற்றி பெறுவதில்லை. அப்படி ஆசி வழங்கக் கூடியவராக, அருள் பொழியக் கூடியவராக, நமக்கெல்லாம் குருவாக, வழிகாட்டியாக இருக்கிறார் பகவான் ஷீர்டி சாயிபாபா.

‘பாபா இன்றி ஓர் அணுவும் அசையாது’ என்பதுதான் கோடிக்கணக்கான சாயிபாபா பக்தர்களின் சத்திய வாசகம். பாபாவே சரணம் என்று சாயிபாபாவை கெட்டியாகப் பற்றிக்கொண்டவர்கள் பாபாவின் குடும்பம் என்றும் சாயி குடும்பம் என்றும் பெருமையுடன் சொல்லி வருகிறார்கள். பாபாவைத் தரிசிப்பதும் பாபாவை பூஜிப்பதும் பாபாவிடம் தங்கள் கோரிக்கைகளை முறையிடுவதும் என அனவரதமும் பாபாவை நினைத்து, பாபாவையே வணங்கிக் கொண்டிருக்கிறார்கள் பக்தர்கள்.

பாபா செய்த சேவைகளில் மிகப்பெரிய சேவை அன்னதானம். அதனால்தான், இந்தியா முழுவதும் உள்ள சாயிபாபா கோயில்களில், அன்னதானம் மிகச்சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பாபாவுக்கு ஒரேயொரு ரோஜாப்பூவை உள்ளன்புடன் சமர்ப்பித்துவிட்டு, அன்னதான சேவையில் தங்களாலான பங்களிப்பைச் செய்கிற பக்தர்கள் ஏராளம். பாபாவும் இதைத்தான் விரும்புகிறார்.

கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக, அற்புத மகானாகத் திகழ்ந்து தன் உள்ளொளியால் அருளாடல்களைச் செய்துகொண்டிருக்கிற ஷீர்டி சாயிபாபாவுக்கு, இந்தியாவில் பல ஊர்களில், பல்லாயிரக்கணக்கான கோயில்கள் எழுப்பப்பட்டிருக்கின்றன.

திருச்சி சமயபுரத்துக்கு அருகில் அக்கரைப்பட்டி எனும் கிராமத்தில், பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டிருக்கிறது பாபா கோயில். தென் ஷீரடி என்று பக்தர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஷீர்டியில் உள்ள ஆலய அமைப்பைப் போலவே சந்நிதிகள் அமைந்திருக்கின்றன என்று பக்தர்கள் சிலிர்ப்புடன் தெரிவிக்கின்றனர்.

‘என் கடன் பாபாவை வணங்குவதே’ என்று சாயி பக்தர்கள் சிலாகித்து வணங்கிக்கொண்டிருக்கிறார்கள். பாபாவோ, ‘நான் உங்களுக்குக் கடன்பட்டிருக்கிறேன்’ என்கிறார்.

’’நான் அடிமைகளுள் அடிமை. உங்களுக்கு நான் கடன்பட்டவன். உங்களுக்கு அருள் செய்வதே என் கடன்; என்னுடைய கடமை. நீங்கள் என்னை நினைக்க நினைக்க, இன்னும் கடன்பட்டவனாகி, கடமைக்கு உரியவனாகிறேன். என்னிடம் உங்கள் உள்ளத்தை பூரணமாகக் கொடுக்கக் கொடுக்க, உங்கள் இந்தப் பிறவியில் எல்லா சத்விஷயங்களையும் உங்களுக்குக் கொடுப்பதே என்னுடைய கடமை என்பதாகத்தான் நான் பணியாற்றுகிறேன்.

நீங்கள் எங்கு வேண்டுமானாலும் இருங்கள். என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். நீங்கள் செய்வது அனைத்தும் எனக்குத் தெரியும். உங்களை நான் அறிந்துகொண்டுதான் இருக்கிறேன். உங்களை அறிந்தால்தானே என் கடனை, என் கடமையை உங்களுக்கு நான் செலுத்தமுடியும்’ என சாயிபாபா அருளியுள்ளார் என ஸ்ரீசாய் சத்சரிதம் விவரிக்கிறது.

SCROLL FOR NEXT