ஐப்பசி மாதம் என்பதால், துலா மாதம் என்பதால், காவிரியில் நீராடிவிட்டு, சூரிய நமஸ்காரம் செய்யுங்கள். கிரக தோஷங்களில் இருந்து விடுபடலாம்.
வீட்டு வாசலில் சூரிய ஒளிபடும் இடத்தில் சூரிய ரதம் வரைந்து, சூரிய பகவானை வேண்டிக்கொண்டால், சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கப் பெறலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
உலகம் இயங்குவதற்கு மிக முக்கியமானதாக சூரியன் போற்றப்படுகிறது. எல்லா உயிர்களுக்கும் சக்தியை வழங்குவது, சூரியன் என விவரிக்கின்றன. நவக்கிரகங்களில் ஒரு கிரகமாக, சூரியனாக, சூரிய பகவானாக வழிபட்டு வருகிறோம்.
சூரியனை வழிபடும் முறைக்கு செளமாரம் என்று பொருள். சூரியன், சிவபெருமானின் வலது கண்ணாக இருப்பதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. சூரியனை சிவனோடு ஒப்பிட்டு சிவ சூரியன் என்றும், விஷ்ணுவோடு ஒப்பிட்டு சூரிய நாராயணர் என்றும் அழைக்கிறது புராணம்.
சிவபெருமானை நோக்கி கடுமையான தவம் இருந்த சூரியன், ‘கிரகபதம்’ எனும் பேறு பெற்றார். ஆயிரம் கிரகணங்களோடு ஒளி மண்டலத்தில் உலா வரும் உயர்வையும் பெற்றார் என்கிறது புராணம்.
சூரியன் மேஷம் முதல் மீனம் வரையிலான பன்னிரண்டு ராசிகளுக்கும் செல்வார். அவர் ஒருராசியில் இருந்து அடுத்த ராசிக்கு செல்லும் பொழுதுதான் மாதப்பிறப்பு நிகழ்கிறது.
சூரியன் பச்சை நிறமுடைய ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் வலம் வருகிறார். இந்தக் குதிரைகள் பூட்டிய தேரை ஓட்டுபவரின் பெயர் அருணன் எனத் தெரிவிக்கிறது புராணம். இவர் திருமாலின் பெரிய திருவடி என்று போற்றப்படும் கருட பகவானின் அண்ணன் ஆவார்.
சூரியனின் ரதம் பொன் மயமானது என வர்ணிக்கிறது சூர்ய புராணம். அந்த ரதத்துக்கு ஐந்து ஆரங்களும் மூன்று நாபிகளும் உண்டு. மூன்று நாபிகள் என்பவை முக்காலத்தையும் குறிக்கும். சூரிய சக்கரத்திலுள்ள 6 கட்டைகளும், 6 ருதுக்களை குறிக்கின்றன. சக்கரத்தின் மேல் பாகமும், கீழ்பாகமும் உத்திராயனம் மற்றும் தட்சிணாயனத்தைக் குறிக்கிறது. சூரிய பகவான், தன்னுடைய தேரில் நான்கு பட்டணங்களைச் சுற்றி வந்து, காலை, மதியம், மாலை, அர்த்தராத்திரி என்ற காலங்களை உண்டாக்குகிறார்.
சூரிய பகவானை வழிபடும் விரதங்களில் முக்கியமானது ‘ரதசப்தமி’. இதை சூரியஜெயந்தி என்று அழைக்கப்படுகிறது. தை மாதத்தில் வரும் சப்தமியையே ரத சப்தமி என்று அழைக்கிறார்கள். அன்றையதினம் சூரியன் பயணிக்கும் தேரை இழுத்துச்செல்லும் 7 குதிரைகளும் ஒரு சேர வடக்கு நோக்கி திரும்பி பயணத்தை தொடங்குகின்றன என விளக்குகிறது புராணம்.
இந்த இனிய நாளில் சூரிய உதயத்தில் எழுந்து புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது சிறப்பு.
கணவனை இழந்தவர்கள் இந்த விரதத்தை கடைப்பிடிப்பதால் அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை வராது என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. ரதசப்தமி விரதத்தை சூரிய உதயத்தில் செய்யவேண்டும்.
அதேபோல், சூரிய பகவானை தினமும் வணங்க வேண்டும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதால், சூரிய பகவானின் அருளைப் பெறலாம். அதேபோல், ஐப்பசி மாதம் என்பதால், துலா மாதம் என்பதால், காவிரியில் நீராடிவிட்டு, சூரிய நமஸ்காரம் செய்யுங்கள். கிரக தோஷங்களில் இருந்து விடுபடலாம்.
வீட்டு வாசலில் சூரிய ஒளிபடும் இடத்தில் சூரிய ரதம் வரைந்து, சூரிய பகவானை வேண்டிக்கொண்டால், சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கப் பெறலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
சூரிய பகவானை வணங்குவோம். சுபிட்சமும் மன நிம்மதியும் பெற்று வாழ்வோம்.