ஆன்மிகம்

ராகு - கேது தோஷம் போக்கும் அருகம்புல் வலிமை; வேதனைகள் தீர்த்தருளும் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு!  

வி. ராம்ஜி

மாதந்தோறும் வருகிற சங்கடஹர சதுர்த்தியில், விநாயகரை அருகம்புல் மாலை சார்த்தி பூஜை செய்து பிரார்த்தனை செய்யுங்கள். ராகு - கேது முதலான சர்ப்ப தோஷங்கள் அனைத்தும் விலகும். சங்கடங்களும் கவலைகளும் காணாமல் போகும். நாளைய தினம் 4ம் தேதி புதன்கிழமை சங்கடஹர சதுர்த்தி.

விநாயகப் பெருமானை வணங்குவதும் தரிசிப்பதும் அவரிடம் பிரார்த்தனை செய்துகொள்வதும் மும்மடங்கு பலன்களைத் தரக்கூடியது. விநாயகருக்கு ஆராதனைகள் செய்யும் போது அருகம்புல் கொண்டு மாலையிடுவது வழக்கம்.

அருகம்புல்லுக்கு அப்படியொரு மகத்துவம் இருக்கிறது.

இதுகுறித்து புராணத்திலேயே விளக்கப்பட்டுள்ளது.

கெளண்டின்ய மகரிஷியின் மனைவி, அவரிடம் 'சதா சர்வகாலமும் அருகம்புல்லால் விநாயகரைப் பூஜை செய்து வருகிறீர்கள். ஆனாலும், நமது கஷ்டம் தீர்ந்த பாடில்லையே..?' என்று அலுப்பும் சலிப்புமாகக் கேட்டாள்.

அதற்கு கெளண்டின்யர், ஓர் அருகம்புல்லை அவளிடம் தந்தார். ''இதை தேவேந்திரனிடம் கொடுத்து, இதற்குச் சமமான பொன்னை வாங்கி வா!'' என்றார். அவளும் தேவேந்திரனிடம் சென்று, அருகம்புல்லுக்குச் சமமான பொன்னைத் தரும்படி கேட்டாள்.

உடனே தேவேந்திரன், அவளை குபேரனிடம் சென்று வாங்கிக் கொள்ளும்படி அனுப்பிவைத்தான். குபேரனிடம் சென்றாள். விவரம் சொன்னாள். ''உங்களுக்குத் தேவைப்படும் பொன்னை நீங்களே எடுத்துச் செல்லலாம்!'' என்றார் குபேரன்.

ரிஷி பத்தினி, ’’நான் கொண்டு வந்த அருகம்புல்லுக்குச் சமமான பொன் தந்தாலே போதும்’’ என்றாள். உடனே, தராசின் ஒரு தட்டில் அருகம்புல்லை வைத்தார் குபேரன். மறு தட்டில் பொன்னால் செய்யப்பட்ட ஆபரணங்கள் நிறைய வைக்கப்பட்டன. ஆனாலும், தராசு சமமாகவில்லை. அங்கிருந்தவர்கள் அருகம்புல்லின் அருமையைப் புரிந்து உணர்ந்தார்கள். சிலிர்த்தார்கள்.

நாமும் அருகம்புல்லின் மகத்துவத்தை உணருவோம். விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் சார்த்தி ஆனைமுகனை வேண்டிக்கொள்வோம். அருளும் பொருளும் அள்ளிக்கொடுப்பார் வெற்றி விநாயகர்.

அருகம்புல்லை வாங்கி வந்ததும், அந்த அருகம்புல்லில், கொஞ்சம் மஞ்சள் கலந்த நீரைத் தெளிக்கவேண்டும். பின்னர், அருகம்புல்லுக்கு பன்னீர் தெளிக்கவேண்டும். அருகம்புல்லை, மாலை போல் தொடுத்துக் கட்டிக்கொள்ளவேண்டும்.

விநாயகர் படத்துக்கு அல்லது சிலைக்கு எதிரே, ஸ்வஸ்திக் கோலமிட்டுக் கொள்ளவேண்டும். இரண்டு தீபங்களை ஏற்றி, விநாயகருக்கு அருகில் வைத்துக்கொள்ளவேண்டும். மூன்று வகை மலர்களும் சமர்ப்பிக்கலாம்.

விநாயகருக்கு கொழுக்கட்டை, சுண்டல், பாயசம் என ஏதேனும் நைவேத்தியம் செய்யலாம். தீப தூப ஆராதனைகள் செய்து, விநாயகர் அகவல் பாராயணம் செய்து வேண்டிக்கொள்ளலாம்.

1. ஓம் பாசாங்குச தராய நம: 2. ஓம் கணாத்யாய நம: 3. ஓம் ஆகு வாகனாய நம: 4. ஓம் விநாயகாய நம: 5. ஓம் ஈச புத்ராய நம: 6. ஓம் சர்வ ஸித்திப்ரதாய நம: 7. ஓம் ஏக தந்தாய நம: 8. ஓம் இலவக்த்ராய நம: 9. ஓம் மூஷிக வாகனாய நம: 10. ஓம் குமார குரவே நம: 11. ஓம் கபில வர்ணாய நம: 12. ஓம் ப்ரும்மசாரிணே நம: 13. ஓம் மோதக ஹஸ்தாய நம: 14. ஓம் சுர ஸ்ரேஷ்டாய நம: 15. ஓம் கஜ நாசிகாய நம: 16. ஓம் கபித்த பலப்ரியாய நம: 17. ஓம் கஜமுகாய நம: 18. ஓம் சுப்ரசன்னாய நம: 19. ஓம் சுராஸ்ரயாய நம: 20. ஓம் உமா புத்ராய நம: 21. ஓம் ஸ்கந்த ப்ரியாய நம: என 21 நாமாவளிகளைச் சொல்லி, பூக்களால் விநாயகப் பெருமானை அர்ச்சித்து வழிபடலாம்.

மாதந்தோறும் வருகிற சங்கடஹர சதுர்த்தியில், விநாயகரை இவ்வாறாக பூஜை செய்து பிரார்த்தனை செய்யுங்கள். ராகு - கேது முதலான சர்ப்ப தோஷங்கள் அனைத்தும் விலகும். சங்கடங்களும் கவலைகளும் காணாமல் போகும்.

நாளைய தினம் 4ம் தேதி புதன்கிழமை சங்கடஹர சதுர்த்தி. அருகம்புல் மாலை சார்த்தி ஆனைமுகத்தானை வேண்டிக்கொள்ளுங்கள். வேண்டியதையெல்லாம் தந்தருள்வார் கணபதி பெருமான்!

SCROLL FOR NEXT