கிருத்திகையில் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்யுங்கள். கந்தசஷ்டி கவசத்தை காதாரக் கேளுங்கள். முருகப்பெருமானை வணங்கி பிரார்த்தனை செய்யுங்கள். வாழ்வில் பல நன்மைகளை ஏற்படுத்தித் தருவார் வேலவன்.
சிவ வழிபாடு, விஷ்ணு வழிபாடு போல அம்மன் வழிபாடு, அனுமன் வழிபாடு என்றெல்லாம் தனித்தனியே பக்தர்கள் இருந்து வழிபட்டு வருகின்றனர். சிவாலயம் சென்று சிவ தரிசனம் செய்து, பெருமாள் கோயிலுக்கும் சென்று தரிசித்து, அம்மனை ஆராதித்து, அனுமன் சாலீசா சொல்லி ஆஞ்சநேயரை வழிபடும் பக்தர்களும் இருக்கிறார்கள்.
இதேபோல, முருக வழிபாடு என்பதும் மகத்துவம் வாய்ந்தது. தை மாதத்தில் பூசம், பங்குனியில் உத்திரம், வைகாசியில் விசாகம், ஆடி மாதத்தில் கிருத்திகை, கார்த்திகையில் கிருத்திகை என முருகப்பெருமானைக் கொண்டாடுவதற்கும் ஆராதிப்பதற்கும் நிறைய நாட்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.
முருக வழிபாட்டில், மாதந்தோறும் வருகிற சஷ்டிக்கும் முக்கியத்துவம் உண்டு. சஷ்டியிலும் கிருத்திகையிலும் முருகக் கடவுளை விரதமிருந்து பூஜை செய்வார்கள் பக்தர்கள். அருகில் உள்ள முருகன் கோயிலுக்குச் சென்று, கந்தனைக் கண்ணார தரிசனம் மேற்கொள்வார்கள்.
இன்று கிருத்திகை நட்சத்திரம். கார்த்திகைப் பெண்கள் வளர்த்தெடுத்த கார்த்திகேயனை வணங்குவதற்கும் வழிபடுவதற்குமான அற்புதமான நாள். இந்தநாளில், வீட்டில் விளக்கேற்றி முருகப்பெருமானை வணங்குங்கள். மாலையில் விளக்கேற்றி, கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து ஞானக்குமரனை ஆராதனை செய்யுங்கள்.
அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று, வள்ளி மணாளனை தரிசித்து பிரார்த்தனை செய்யுங்கள். செவ்வரளி மலர் சாற்றி வேண்டிக்கொள்வது பல நன்மைகளைக் கொடுக்கவல்லது. தடைகளையெல்லாம் தகர்த்து அருளுவார் ஞானக்குமரன்.
கிருத்திகையில், கீர்த்தி வாய்ந்த குமரனை வணங்குங்கள். நம் குறைகளையெல்லாம் தீர்த்தருள்வான் சக்தி மைந்தன்.