விஜயதசமியன்று பரிவேட்டைக்காக பெருமாள் குதிரை வாகனத்தில் அம்பு எய்தும் நிகழ்ச்சி பெசண்ட் நகர் அருள்மிகு மகாலட்சுமி திருக்கோயிலில் 22.10.15 நடைபெறவுள்ளது. குதிரையில் சென்று தீமைகளையும் தீயவர்களையும் அழித்ததால், இந்நிகழ்ச்சி பரிவேட்டை எனப்படுகிறது. பாரில் உள்ளவர்களின் தீமையைப் போக்கி நன்மை அருள்வதால் பார்வேட்டை எனவும் வழங்கப்படுகிறது.
பரிவேட்டை நவராத்தியின் இறுதி நாளில் நடைபெறும் இத்திருக்கோயிலில் சிறப்பு பூஜையாக நவராத்திரி ஒன்பது நாளும் தினமும் காலை ஸ்ரீ சூக்த ஆராதனை நடைபெறும். `ஸ்ரீ’ என்றால் மகாலட்சுமி என்று பொருள். சூக்தம் என்பது வேதம் மற்றும் பிரபந்தம் ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள முறைப்படி லட்சுமியை வழிபடும் முறையாகும். விஜயதசமியன்று பார்வேட்டைக்குச் சென்று அம்பு போடும் உற்சவம் நடத்தப்படுகிறது. இத்திருக்கோயிலில் பல திருக்கோலங்களில் காட்சி அளிக்க உள்ளார் பெருமாள்.
நவராத்திரி லட்சார்ச்சனைப் பெருவிழா
அருள்மிகு லலிதாம்பாள் சமேத அருள்மிகு மேகநாதசுவாமி திருக்கோயிலில் நவராத்திரி லட்சார்ச்சனைப் பெருவிழா 13.10.2015 அன்று தொடங்கி 21.10.15 வரை நடைபெறவுள்ளது. இத்திருக்கோயில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருமீயச்சூரில் உள்ளது. லலிதா சகஸ்ரநாமம் உருவானதாகக் கூறப்படும் இத்திருத்தலத்தில் லலிதா சகஸ்ரநாம லட்சார்ச்சனையைத் தொடர்ந்து, 22.10.15 அன்று ஸ்ரீ அம்பாளுக்கு அன்னப் படையல் நெய்க்குள தரிசனம் நடைபெறும்.