ஆன்மிகம்

’நீ என்னுடன் பேசு; நீ சொல்வதைக் கேட்கிறேன்’ என்கிறார் சாயிபாபா! 

வி. ராம்ஜி


‘நீ எனக்கு முன்னால் அமர்ந்துகொண்டு என்னுடன் பேசு. நீ சொல்லுவதை நான் கவனமாகக் கேட்கிறேன். ஏனென்றால், உன்னுடைய மன வேதனையை என்னுடன் நீ பகிர்ந்துகொள்கிறாய்’’ என்கிறார் பகவான் ஷீர்டி சாயிபாபா.

மண்ணுலகில் தெய்வத்துக்கு நிகரானவர்கள் குருமார்கள். அதனால்தான் மாதா, பிதா, குரு, தெய்வம் என்று போற்றுகிறோம். வணங்குகிறோம். அன்னைக்கு நிகராக, தந்தை ஸ்தானத்துக்கு இணையாக, குருவாக அவ்வளவு ஏன்... தெய்வமாகவே இருந்து நம்மைக் காத்தருள்கிறார்கள் மகான்கள்.

இறைவனின் அருள் இருந்தால்தான், நாம் நிம்மதியான வாழ்க்கையை வாழமுடியும். அப்படி இறையருளை முழுமையாக நாம் பெற வேண்டுமெனில், நம் ஒவ்வொருவருக்கும் குருநாதர் என்பவர் மிக மிக அவசியம். குருவை நெருங்க நெருங்க, இறைவன் நமக்கு அருகே வருகிறார். அருகில் வந்து நம்மை ஆட்கொள்கிறார். நமக்கு அருளையும் பொருளையும் வழங்குகிறார்.

அப்படி, நமக்கெல்லாம் குருவாக வந்தவர்தான் ஷீர்டி சாயிபாபா. மண்ணுலகில் உதித்த மண்ணுலகையும் மனிதர்களையும் காப்பதற்கு அவதரித்தவர்தான் பாபா என்று கொண்டாடுகிறார்கள் பக்தர்கள்.

லட்சக்கணக்கான மனிதர்களுக்கு எதிரே நடந்து, அமர்ந்து, நின்று, சிரித்து, கை உயர்த்தி ஆசி வழங்கி, பல அற்புதங்களை நிகழ்த்தி அருளியவர் பகவான் ஷீர்டி சாயிபாபா. அதனால்தான் அவர் முக்தி அடைந்த பின்னரும் இந்த மண்ணுலகில் தன் சாந்நித்தியத்தால் பக்தர்களுக்கு சூட்சுமமாக இருந்து அருளாசி வழங்கிக்கொண்டே இருக்கிறார்.
பாபாவின் திருவுருவச் சிலை எங்கே இருந்தாலும் அங்கே பாபா இருக்கிறார். பாபாவின் படம் எங்கெல்லாம் இருக்கிறதோ... அங்கெல்லாம் பாபாவின் நறுமணத்தை உணரலாம். தெய்வீக மணம் அங்கே வியாபித்திருக்கும்.

அதனால்தான்... ஷீர்டி பாபா நமக்கெல்லாம் சொல்லி போதித்திருக்கிறார். ’’நீ என் முன்னால் அமர்ந்து என்னோடு பேசும்போது நீ சொல்வதை நான் கவனமாகக் கேட்கிறேன். ஏனென்றால், உன் மன வேதனையை என்னிடம் பகிர்கிறாய். கவலைப்படாதே. நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன்’ என அருளியுள்ளார் சாயிபாபா.
பகவான் ஷீர்டி நாதனான சாயிபாபாவின் திருவுருவத்துக்கு முன்னே அமர்ந்துகொள்ளுங்கள். அது சிலையாக இருந்தாலும், படமாக இருந்தாலும் அதன் முன்னே அமர்ந்துகொள்ளுங்கள். பாபாவிடம் பேசுங்கள். நாம் அவருடன் பேசுவதையெல்லாம் பாபா கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார். நம் கவலைகளையும் துக்கங்களையும் வருத்தங்களையும் தோல்விகளையும் பாபாவிடம் சொல்லும் போது, அதை மிகக் கவனமாக கேட்டுக்கொண்டே இருக்கிறார் பாபா.

நாம் பாபாவிடம் கேட்டால்தான் நம் துக்கங்களும் துயரங்களும் நிவர்த்தியாகும். நாம் சொல்வதை பாபா கேட்பதால்தான் வாழ்வில் நமக்கான தடைகள் அனைத்தும் பாபாவால் தகர்க்கப்படுகின்றன.

ஆகவே, பாபாவின் முன்னே அமர்ந்துகொண்டு பேசுங்கள். உங்கள் கவலைகளையும் மன வேதனைகளையும் அவரிடம் சொல்லி முறையிடுங்கள். நீங்கள் சொல்வதை பாபா கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார்.

SCROLL FOR NEXT