குருவாரத்தில், சஷ்டியில் ஞானகுரு முருகப் பெருமானை வேண்டுவோம்.
வியாழக்கிழமை குருவுக்கு உகந்த நாள். வியாழக்கிழமையை குருவாரம் என்று சொல்லுவோம். குரு என்பவர், நவக்கிரகத்தில் உள்ள குரு பிரகஸ்பதி பகவான். வியாழக்கிழமைகளில், நவக்கிரகத்தில் உள்ள குரு பகவானை வலம் வந்து வேண்டிக்கோள்வது ரொம்பவே மகத்துவம் மிக்கது.
அதேபோல், சிவபெருமான் குரு தட்சிணாமூர்த்தியாக வீற்றிருந்து உபதேசித்து அருளுவதைத் தரிசித்திருக்கலாம். கல்லால மரத்தடியில் அமர்ந்து, சனகாதி முனிவர்களுக்கு உபதேசிக்கும் தட்சிணாமூர்த்தியின் எல்லா சிவாலயங்களிலும் தெற்குப் பார்த்தபடி கோஷ்டத்தில் அமைந்திருக்கும்.
வியாழக்கிழமைகளில், தட்சிணாமூர்த்தியை சுண்டல் நைவேத்தியம் செய்து தரிசித்து வேண்டிக்கொள்வது ஞானத்தையும் யோகத்தையும் தந்தருளும் என்பது ஐதீகம். குழந்தைகள் வியாழக்கிழமைகளில், ஸ்ரீதட்சிணாமூர்த்தி மூலமந்திரம் சொல்லி, அவரை தரிசித்து பிரார்த்தனை செய்துகொண்டால், கலையிலும் கல்வியில் சிறந்து விளங்கலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பையா என்று முருகக் கடவுளைப் புகழ்கிறது கந்த புரானம். பிரணவப் பொருளை தந்தை சிவனாருக்கே உபதேசித்த முருகப்பெருமான், ஞானகுருவாகவே திகழ்கிறார். அனைத்து சிவாலயங்களிலும் முருகப்பெருமானுக்கு சந்நிதி அமைந்திருக்கின்றன. அதேபோல் அம்மன் கோயில்களிலும் முருகக் கடவுளுக்கு சந்நிதி உண்டு.
மேலும் முருகப்பெருமான் தனிக் கோயிலில் எழுந்தருளி, அருளும் பொருளும் அள்ளித்தந்துகொண்டிருக்கிறார். குன்றுதோறும் இருக்கும் குமரகுருவான கந்தவேலன், மலையிலும் இருக்கிறார். கடற்கரையிலும் ஆட்சி செய்கிறார்.
முருகனுக்கு உகந்தது என பலநாட்கள் உள்ளன. விசாகம், உத்திரம், கார்த்திகை, பூசம் என பல நட்சத்திரங்கள் உள்ளன. அதேபோல் மாதந்தோறும் வருகிற சஷ்டி திதி என்பது ஞானக்குமரனுக்கு உரிய அற்புதமான நாள்.
கார்த்திகை நட்சத்திர நாளில், வேலவனை விரதம் இருந்து தரிசிப்பார்கள். அதேபோல், மாத சஷ்டியிலும் வள்ளி மணாளனை விரதம் மேற்கொண்டு வணங்குவார்கள். நாளைய தினம் 22ம் தேதி வியாழக்கிழமை சஷ்டி. இந்த மகோன்னதமான நன்னாளில், பார்வதி மைந்தனை வணங்கி மகிழ்வோம். கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து பிரார்த்தனை செய்வோம்.
வழக்கில் வெற்றி தருவான் வேலவன். வீடு மனை வாங்கும் யோகத்தைத் தந்தருள்வான். எதிர்ப்புகளையெல்லாம் அடக்கி, காரியத்தடைகளை நீக்கி செயலில் வெற்றியைத் தந்தருள்வான் வேலவன்!