பொதுவாக 17 முறை வலம் வருவதும் 17 முறை தீபமேற்றுவதும் அரிதான ஒன்று. இது புதன் பகவானுக்கு மட்டுமே இந்த எண்ணிக்கையில் வலம் வரவேண்டும் என்றும் தீபமேற்ற வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
நோய் தீர்க்கும் திருத்தலம் என்று போற்றப்படுகிறது திருவெண்காடு. இந்தத் தலத்தின் இறைவன் ஸ்வேதாரண்யேஸ்வரர். சீர்காழிக்கு அருகில் உள்ளது இந்தத் தலம். இது, நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்று. புதன் பரிகாரக் கோயில் எனும் பெருமை மிக்க திருத்தலம் இது.
பிரமாண்டமான கோயில். அழகிய கட்டுமானங்கள் கொண்ட ஆலயம். ஏகப்பட்ட சந்நிதிகளுடன் சாந்நித்தியத்துடன் திகழ்கிறது. சந்திர பகவான் வழிபட்டு வரம் பெற்ற தலம் என்று விவரிக்கிறது ஸ்தல புராணம்.
இங்கே உள்ள அக்கினி தீர்த்தம் விசேஷம். சூரிய தீர்த்தமும் உள்ளது. அதேபோல் சந்திர பகவான் உண்டு பண்ணிய சந்திர தீர்த்தமும் பிரசித்தி பெற்றது. இந்தத் தீர்த்தங்கள் மட்டுமின்றி, தீர்த்தக்கிணறும் இங்கே அமைந்துள்ளது.
புதன் பரிகாரத் திருத்தலமான இங்கே புதன் பகவானுக்கு தனிச்சந்நிதி உண்டு. புதன் கிழமையில் இங்கு வந்து வணங்குவது சிறப்புக்கு உரியது. அல்லது நம்முடைய நட்சத்திரம் கொண்ட நாளிலோ நம் குழந்தையின் நட்சத்திரத்துக்கு உரிய நாளிலோ இங்கு வந்து வணங்கி வழிபடலாம்.
சிவனார் ஸ்வேதாரண்யேஸ்வரை வழிபட வேண்டும். அதையடுத்து அம்பாளை வணங்கவேண்டும். நாயன்மார்கள் அறுபத்துமூவர், புத்திரகாளி, மகாவிஷ்ணு, மகாலக்ஷ்மி, சரஸ்வதி முதலானோரை தரிசித்து, அகோரமூர்த்தியை வழிபடவேண்டும்.
பிறகு, புதன் பகவானின் தந்தையான சந்திர பகவானை வழிபடவேண்டும். அதையடுத்து புதன் பகவான் சந்நிதிக்குச் சென்று அவரை தரிசிக்கவேண்டும். புதன் பகவானுக்கு 17 தீபங்களை ஏற்றச் சொல்கிறது ஆகமம். மனதார புதன் பகவானை வேண்டிக்கொண்டு, 17 தீபங்களை ஏற்ற வேண்டும். பின்னர் 17 முறை அவரை வலம் வந்து நமஸ்கரிக்கவேண்டும்.
பொதுவாக 17 முறை வலம் வருவதும் 17 முறை தீபமேற்றுவதும் அரிதான ஒன்று. இது புதன் பகவானுக்கு மட்டுமே இந்த எண்ணிக்கையில் வலம் வரவேண்டும் என்றும் தீபமேற்ற வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
எனவே 17 தீபமேற்றி வழிபடுங்கள். 17 முறை வலம் வந்து உங்கள் கோரிக்கைகளை அவரிடம் சொல்லி வேண்டிக்கொள்ளுங்கள். புதன் தோஷத்தையும் கிரக தோஷம் அனைத்தையும் நிவர்த்தி செய்து அருளுவார். மந்தமான புத்தியில் இருந்து சுறுசுறுப்பாக்குவார். மனோதிடம் தருவார். மனக்கிலேசம் நீக்குவார். மனோபலம் தந்தருள்வார் புதன் பகவான்!