நவராத்திரியில், பஞ்சமி திதியில், வாராஹியை வழிபடுவோம். வாராஹி தேவியின் மூலமந்திரத்தைச் சொல்லி மனதார வழிபடுங்கள். மங்காத செல்வத்தை தந்தருள்வாள் தேவி.
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களை வழிபடுவதற்கான அற்புதமான காலம். அம்பாளைக் கொண்டாடுவதற்கான அருமையான காலம். சிவபெருமானுக்கு ஒரு ராத்திரி சிவராத்திரி என்றால் அம்பாளுக்கு ஒன்பது ராத்திரி, அது நவராத்திரி என்பார்கள்.
பிரதமையில் இருந்து நவராத்திரி விழா தொடங்கும். தினமும் கொலு பார்க்கச் செல்வதும் சுமங்கலிகளுக்கு பூ பழங்கள், புடவை உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் கொடுப்பதும் வழக்கம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நைவேத்தியம் படைத்து அக்கம்பக்கத்தாருக்கு வழங்கி மகிழ்வார்கள்.
பிரதமையில் இருந்து நவராத்திரி தொடர்ந்து நடைபெறும். பத்தாம்நாள் தசமி. இதுவே விஜயதசமி என்று கொண்டாடப்படுகிறது.
பொதுவாகவே பஞ்சமி திதி என்பது வாராஹி தேவியை வழிபடுவதற்கு உரிய அற்புதமான நாள். பஞ்சமியில் வாராஹியை வழிபட்டால், பஞ்சமெல்லாம் தீர்த்து வைப்பாள். கவலைகளையெல்லாம் போக்கி வைப்பாள் என்பது ஐதீகம்.
சப்த மாதர்களில் ஒருத்திதான் வாராஹி. வாராஹி தேவியை தொடர்ந்து வழிபட்டு வந்தால், எதிர்ப்புகளையெல்லாம் விரட்டியடிப்பாள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். எதிரிகளையெல்லாம் பலமிழக்கச் செய்வாள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பஞ்சமி திதி விசேஷம். நவராத்திரி விசேஷம். அம்பாள் விசேஷம். வாராஹி ரொம்பவே விசேஷம். இந்தநாளில் வாராஹி தேவியின் மூலமந்திரம் சொல்லி வழிபடுங்கள். வாராஹி தேவியே போற்றி என்று 108 முறை சொல்லி பிரார்த்தனை செய்யுங்கள். எலுமிச்சை சாதம் அல்லது கேசரி நைவேத்தியம் செய்து வேண்டிக்கொள்ளுங்கள்.
இன்று 21ம் தேதி பஞ்சமி. வாராஹிக்கு உரிய நாள். சக்தியும் உக்கிரமும் கொண்ட வாராஹி தேவியை செந்நிற மலர்கள் சூட்டி வழிபடுவதற்கு உரிய நன்னாள். வாராஹி தேவியை வழிபடுங்கள். உங்கள் கவலைகளையும் துக்கங்களையும் அவளிடம் சொல்லி முறையிடுங்கள். சகல செளபாக்கியங்களையும் தந்தருள்வாள் தேவி.