நவராத்திரி எனும் பண்டிகை, பெண்களுக்கான பண்டிகை. பெண் தெய்வங்களை வழிபடுவதற்கான பண்டிகை. சிவனுக்கு ஒரு ராத்திரி சிவராத்திரி. அம்பிகைக்கு நவராத்திரி என்றோரு வாசகம் உண்டு. நவராத்திரியை அவசியம் கொண்டாடவேண்டும்.
சகல விதமான நன்மைகளையும் கலையில் ஞானமும் இல்லத்தில் செல்வத்தையும் வழங்குவது து நவராத்திரித் திருவிழா. பெண்களுக்கான முக்கியமான பண்டிகை உறவுகளை மேம்படுத்தும் பண்டிகை இது. அக்கம்பக்கத்தினர் இடையே நட்புக்குப் பாலம் அமைக்கும் பண்டிகை இது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
சுமங்கலிகள் ஒருவருக்கொருவர் வாழ்த்தி, ஆசி கூறிக் கொள்ளும் ஒப்பற்ற வைபவம். ஞானம் வளர்க்கும் பூஜை இது. தரித்திரம் போக்கும் மகாலக்ஷ்மி விரதம் இது என்கிறது சாஸ்திரம்.
அதனால்தான் இந்த நாட்களில், மாலை வேளைகளில் கொலுவைக் காரணமாகக் கொண்டு, அக்கம்பக்கத்துப் பெண்கள் வீடுகளுக்கு வந்தார்கள். அவர்களை, கொலு என்ற பெயரில் வீடுகளுக்கு அழைத்தார்கள். அவர்களுக்கு வெற்றிலை, பாக்குடன் ஜாக்கெட் மற்றும் மங்கலப் பொருட்கள் வழங்கப்பட்டன. இன்றைக்கும் இந்த சம்பிரதாய சாங்கியங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.
சுமங்கலிகளுக்கு மட்டுமின்றி கொலு பொம்மைகளை ஆசை ஆசையாகப் பார்க்க வரும் குழந்தைகளுக்கும் ஏதேனும் விளையாட்டுப் பொருட்கள் கொடுத்து மகிழ்விப்பார்கள்.
நவராத்திரி நாளில், கொலு வைத்துக் கொண்டாடும் வீடுகளுக்குச் சென்று, அந்த பூஜை வைபவங்களில் கலந்து கொள்ளுங்கள்.
நவராத்திரிப் பெருவிழாவில், இப்படி பண்டிகை எனும் பெயரில், வழிபாடு என்கிற பெயரில், கொடுத்துப் பெறுவதும் சுமங்கலிகளுக்கு நமஸ்காரம் செய்வதும் சுமங்கலிகளுக்கு ஆசி வழங்குவதும் மகா புண்ணியம். சகல சுபிட்சங்களையும் இல்லத்தில் கொண்டு வந்து சேர்க்கும்.