ஆன்மிகம்

தாலி பாக்கியம் நிலைக்கச் செய்யும் நவராத்திரி; கொலுவைப் பார்க்கப் பார்க்க ஐஸ்வர்யம் பெருகும்! 

வி. ராம்ஜி

புரட்டாசி என்றாலே நினைவுக்கு வருவது நவராத்திரிதான். ‘ராத்ரம்’ என்ற வடமொழிச் சொல் நாளைக் குறிப்பது. பொதுவாகப் பகலில் செய்யப்படும் பூஜை இறைவனுக்கு உரியது. இரவில் செய்யப்படும் பூஜை இறைவிக்கு உரியது. ஆனால், நவராத்திரி காலத்தில் இரண்டு வேளைகளில் செய்யப்படும் பூஜைகளும் இறைவிக்கே உரியது. சக்திக்கே உரியது.

நம் முன்னோரால் சித்திரை மாதத்தில் வசந்த நவராத்திரி விரதம் கொண்டாடப்பட்டு வருகிறது. புரட்டாசி மாதத்தில் பாத்ரபத நவராத்திரி விரதம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பருவ காலங்களில், தோன்றிப் பரவும் கடுமையான வியாதிகளைக் குணப்படுத்தவே பண்டிகைகளும் வழிபாடுகளும் பூஜைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவற்றில் மிக முக்கியமானது நவராத்திரி விழா.

நவராத்திரியின் முதல் 3 நாட்கள் சக்தியை, துர்கை அம்சமாக வழிபடச் சொல்கிறது சாஸ்திரம். அடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமியின் அம்சமாகக் கொண்டு வழிபட வேண்டும். கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியின் அம்சமாகக் கொண்டாட வேண்டும். இந்த ஒன்பது நாட்களும் இப்படியாக அம்பாளை ஆவாஹனம் செய்யப்பட்டு பூஜிக்கப்படுகிறாள்.

இந்த ஒன்பது நாட்களும் சக்தியை சூட்சுமமாக பாவித்து வழிபடுவதால் ‘நவராத்திரி’ என்ற சிறப்புப் பெயர் பெற்றது. நவராத்திரியின் பத்தாம் நாள் பூஜை மிகவும் முக்கியமானது. மூல நட்சத்திரம் உச்சமாக உள்ள 6 அல்லது 7-ஆம் நாளில் ஆவாஹனம் செய்யப்படும் சரஸ்வதிதேவிக்கு பத்தாம் நாளில் சிரவணம்- திருவோணம் நட்சத்திரம் உச்சமாகும்போது பூஜை நடத்தப்படுகிறது. இது சரஸ்வதி தேவியின் அருள் கிடைப்பதற்காகச் செய்யப்படும் ஆராதனை. இதனால் அம்பாளின் பூரணமான அருளைப் பெறலாம்.

நம் வீட்டில் உள்ள குழந்தைகளின் புத்தகங்களுக்குப் புத்துயிர் கொடுப்பதற்காகவே, நம் முன்னோர்களால் சரஸ்வதிதேவி ஆராதனை ஏற்படுத்தப்பட்டுள்ளது. புரட்டாசி அமாவாசைக்கு மறுநாள் பிரதமை திதியிலிருந்து நவராத்திரி ஆரம்பமாகிறது. அன்று கொலு வைப்பார்கள்.

இதில் சக்தி ரூபத்தை முன்னிறுத்தி 9, 11, 21 படிகள் என்ற நிலையில் ‘கொலுக் காட்சி’ இடம் பெறுகின்றன. கொலுவில் கண்களைக் கவரும் பொம்மைகளுடன் கடவுளர்கள், விலங்குகள், பறவைகள், வீரர்கள், மகான்கள் போன்றோரின் உருவ பொம்மைகள் வைக்கப்படுகின்றன. கொலுவிழாவின் ஒவ்வொரு நாளிலும் காலை, மாலை இரு வேளைகளிலும் சக்தி பூஜிக்கப்படுகிறாள்.

கொலு தொடங்கிய நாள் முதற்கொண்டு, ஒவ்வொரு நாளும் சக்திக்கு விதவிதமாக நைவேத்தியம் செய்து, கொலுவைப் பார்க்க வருபவர்களுக்கு அவற்றைப் பிரசாதமாக அளிக்க வேண்டும். அப்போது பெண்கள் பாட்டுப் பாடியும், குழந்தைகள் தெய்வ வேடங்களை அணிந்தும் வழிபடுவார்கள்.

வீடுகளில் மட்டுமின்றி, ஆலயங்களிலும் நவராத்திரி விழா விமரிசையாகக் கொண்டாடப்படும். மைசூர் தசரா விழா என்பது உலகப் பிரசித்தம். அதேபோல் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் கோயிலில் தசரா விழா விமரிசையாக நடந்தேறும். லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். ஏராளமான பக்தர்கள், ஒவ்வொரு வேடங்கள் அணிந்து வந்து தரிசிப்பதாக வேண்டிக்கொள்வார்கள். அதன்படி நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக வருவார்கள். காணக் கண்கொள்ளாக் காட்சியாக, பிரமாண்டமானத் திருவிழாவாக குலசை தசரா விழா அமைந்திருக்கும்.

நவராத்திரி விழாவில், தினமும் அம்பாளை ஆராதியுங்கள். செந்நிற மலர்கள் சூட்டியும் வெண்ணிற மலர்கள் சூட்டியும் அம்பாளை அலங்கரியுங்கள். கொலு வைத்திருப்பவர்களின் வீடுகளுக்குச் சென்று, தாம்பூலப் பிரசாதம் பெற்றுக் கொள்ளுங்கள். தாலி பாக்கியம் நிலைக்கச் செய்வாள் அம்பிகை!

SCROLL FOR NEXT