ஆன்மிகம்

நலமெல்லாம் தரும் நவராத்திரி! 

வி. ராம்ஜி

நவராத்திரிப் பெருவிழா நாளை முதல் (17ம் தேதி) தொடங்குகிறது. சிவனுக்கு ஒரு ராத்திரி, அம்பாளுக்கு நவராத்திரி என்ற சொல் பிரசித்தம். நவராத்திரி விழாவில் மிக முக்கியமான அம்சமாக, கொலு வைப்பதையும் அம்பாள் வழிபாட்டையுமே வலியுறுத்துகிறது சாஸ்திரம்.

நவராத்திரி என்றால் கொலு என்று மட்டுமே நினைத்துக்கொண்டிருக்கிறோம். கொலுவைப்பவர்கள் கொண்டாட வேண்டியதாக மட்டுமே நினைத்துக்கொண்டிருக்கிறோம். நவராத்திரி வழிபாடுகளில் கொலுவும் ஒன்று. நவராத்திரி காலங்களில் அம்பாள் வழிபாடு என்பதே முக்கியம். சக்தி வழிபாடு என்பது மிக மிக அவசியம்.

நவராத்திரி நாட்களில் பகலில் சிவ பூஜையும் இரவில் அம்பிகை பூஜையும் செய்வதே சரியான வழிபாடு.

நவராத்திரி 9 நாட்களும் தினமும் காலையில் 1008 சிவ நாமாவளிகளை ஜபித்து வந்தால், அதில் மகிழ்ந்து போவாளாம் அம்பிகை. அளவிடற்கரிய பலன்களை வழங்கி அருளுவாளாம்!

நவராத்திரி வழிபாட்டை தினமும் தொடங்கும் போது ஸ்யவன மகரிஷியையும் சுகன்யா தேவியையும் தியானித்தபடியே தொடங்க வேண்டும்.

நவராத்திரி நாட்களில் சுண்ணாம்பு மாவினால் கோலம் போடக்கூடாது.பெரும்பாலும் நாம் ஸ்டிக்கர் கோலங்களை ஓட்டிவிட்டிருக்கிறோம். நவராத்திரி காலத்திலாவது கொலு வைத்தாலும், இல்லாது போனாலும் கோலமிடவேண்டும். அரிசி மாவைப் பயன்படுத்தியே கோலமிட வேண்டும். இதனால் குடும்ப ஒற்றுமையும், செல்வமும் வளரும். சுண்ணாம்பு மாவு பயன்படுத்தினால் எதிர்மறையான விளைவுகளே நிகழும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். .

ஒன்பது நாட்களிலும் சிறுமியரை தேவியாக பாவித்துத் துதிக்க வேண்டும். நம் வீட்டுக் குழந்தையாக இல்லாமல், பிறர் வீட்டுக் குழந்தையையே அழைத்து வந்து உபசரிக்க வேண்டும். நம் உறவுக்காரக் குழந்தைகளையும் அவர்களுடன் இணைத்து பூஜிக்கலாம். அவர்களுக்கு புத்தாடைகள், வளையல் முதலான மங்கலப் பொருட்கள் வழங்கவேண்டும்.

நவராத்திரிக்கு கொலு வைக்காதவர்கள் கூட, இதேபோல் சிறுமிகளை அழைத்து ஆராதிப்பது இல்லத்தில் சுபிட்சத்தை உண்டுபண்ணும்.

நவராத்திரி ஒன்பது நாளும் நாம் செய்கிற பூஜைகளையும் ஆராதனைகளையும் திருமகளே ஏற்றுக் கொள்கிறாள் என்பதாக ஐதீகம்.

நவதானியச் சுண்டல் நவக்கிரக நாயகர்களைத் திருப்திப்படுத்தும். கிரகங்களால் வரக்கூடிய துன்பங்களைத் தடுக்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

ஷோடச லக்ஷ்மி பூஜை நவராத்திரி நாளில் செய்வது மகத்தானது. முக்கியமாக வெள்ளிக்கிழமையில் செய்தால் ஐஸ்வர்யம் பெருகும். இது கிரியா சக்தி வழிபாடு என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

SCROLL FOR NEXT