திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி நிச்சயம் என்பார்கள். திருவாரூரில் பிறந்தாலே முக்தி என்பார்கள். காசியில் இறந்தால் முக்தி என்பார்கள். சிதம்பரம் தலத்தை தரிசித்தால் முக்தி என்பார்கள்.
அதேபோல், நடராஜ பெருமான் நடனமாடிய ஐந்து திருத்தலங்கள் கொண்டாடப்படுகின்றன. திருவாலங்காட்டில் நடராஜரின் சபை ரத்தின சபை என்று அழைக்கப்படுகிறது. சிதம்பரத்தில் பொன்னம்பல சபை என்று போற்றப்படுகிறது. மதுரையில் வெள்ளியம்பலம் என்று புகழப்படுகிறது. இதேபோல், குற்றாலத்தில் உள்ள சபையை சித்திர சபை என்று போற்றுவார்கள். திருநெல்வேலியில் உள்ள சபையை தாமிர சபை என்று கொண்டாடுவார்கள். இதைத்தான் முறையே பஞ்ச சபை என்று கொண்டாடுகிறார்கள் சிவ பக்தர்கள்.
அதேபோல், சிவதாண்டவங்கள் குறித்தும் சொல்லப்பட்டிருக்கின்றன. தில்லை என்று போற்றப்படும் சிதம்பரத்தில், ஆனந்தத் தத்துவத்தைக் கொண்ட சிவ தாண்டவம் என்பார்கள். மதுரையம்பதி என்று போற்றப்படும் மதுரையில், சத்திய தாண்டவம் நிகழ்ந்ததாகச் சொல்கிறது மதுரை ஸ்தல புராணம்.
திருக்குற்றாலத்தில், திரிபுரதாண்டவ நடனம் அமைந்தது என்று சொல்கிறது புராணம். திருநெல்வேலியில், முனி தாண்டவம் என்று போற்றப்படுகிறது. திருவாலங்காட்டில் கெளரி தாண்டவத்தை சிவனார் நிகழ்த்தினார் என்று தெரிவிக்கிறது சிவ புராணம்.
நடராஜர் பெருமான், சிறப்புறத் திகழும் இந்த ஆலயங்களைத் தவிரவும் பல ஆலயங்கள் உள்ளன. கும்பகோணத்தை அடுத்துள்ள கோனேரி ராஜபுரம் நடராஜர் கொள்ளை அழகு. அதேபோல திருச்சியை அடுத்துள்ள திருவாசி மாற்றுரைத்த வரதீஸ்வரர் கோயிலில் உள்ள நடராஜர் விசேஷமானவர். இந்த நடராஜரை வணங்கினால், தீராத நோயும் தீரும் என்பது ஐதீகம்.
இதேபோல். திருச்சி - பெரம்பலூர் சாலையில், குறுக்குச் சாலையில் உள்ளது ஊட்டத்தூர். இங்கே உள்ள சிவனாரின் திருநாமம் சுத்தரத்தினேஸ்வரர். இந்தத் தலத்தில் உள்ள நடராஜர் ரொம்பவே விசேஷமானவர். பஞ்சநதன நடராஜர் என்று அழைக்கப்படுகிறார்.
இந்த நடராஜரை தரிசிப்பதும் நடராஜருக்கு அபிஷேகித்த தீர்த்தத்தை பருகுவதும் நோய் தீர்க்க வல்லது என்பார்கள்.
நடராஜர் அற்புதமாகக் குடிகொண்டிருக்கும் திருத்தலங்களைத் தரிசிப்போம். கலைகளிலும் கல்வியிலும் சிறந்து விளங்கச் செய்வார் ஆடல்வல்லான்!