ஆன்மிகம்

சனீஸ்வரரை சாந்தப்படுத்தும் விநாயகர்

குள.சண்முகசுந்தரம்

பார்வை சங்கடப் பார்வை என்பார்கள். காரைக்குடியில் உள்ள யோக அனுகிரக சனீஸ்வரர் கோயிலில் அந்த சனீஸ்வரன் சாந்தப் பார்வையுடன் மக்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.

சனீஸ்வரனின் காரைக்குடி சிவன் கோயில் அருகிலுள்ள ஊருணிக் கரையின் ஈசானிய மூலையில் குடி கொண்டிருக்கிறார் சனீஸ்வர பகவான். சனியின் தோஷம் நீங்க திருநள்ளாறு சென்று சனீஸ்வர பகவானை வழிபடும் வழக்கம் உண்டு. அவ்வளவு தூரம் போக முடியாத சாமானியர்களுக்கு இந்த தென் திருநள்ளாறு சனீஸ்வரர் கோயில் ஒரு பிரசாதம். திருநள்ளாறில் சனீஸ்வர பகவான் பரிவார தெய்வமாக இருந்து அருள்பாலிக்கிறார். ஆனால், இங்கே தனிக்கோயிலாகவே குடிகொண்டிருக்கிறார். திருநள்ளாறு போலவே அதே வடிவ அமைப்புடன் காக்கை வாகனத்தில் ஐந்தடி சிலையாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார் சனி பகவான்.

திருநள்ளாறுக்குச் செல்லும் பலன்

திருநள்ளாறு சனீஸ்வர பகவானின் சந்நிதியில் 45 நாட்கள் வைத்து பூஜிக்கப்பட்ட எந்திரத் தகடு அனுகிரக சனீஸ்வரர் சிலைக்கு அடியில் வைக்கப் பட்டுள்ளதால் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் திருநள்ளாறு சென்று வந்ததற்கு நிகரான பலனை அடையலாம் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.

பொதுவாக சனீஸ்வரர் பார்வை உக்கிரப் பார்வையாகத் தான் இருக்கும். அனுகிரக சனீஸ்வரரின் உக்கிரத்தைத் தனிப்பதற்காக இங்கே சந்நிதிக்கு எதிரே எட்டடி தூரத்தில் அனுகிரக விநாயகரை பிதிஷ்டை செய்திருக்கிறார்கள். சனீஸ்வரரின் முகம் பார்க்க வீற்றிருப்பதால் சனீஸ்வரரை சாந்த சொரூபியாக மாற்றி வைத்திருக்கிறார் அனுகிரக விநாயகர் என்று கூறப்படுகிறது.

இங்கே, சனி பகவான் சாந்தமாக இருப்பதால் வாரத்தின் அத்தனை நாட்களிலும் பக்தர்களின் வருகையைப் பார்க்க முடிகிறது. மற்ற சனீஸ்வரர் கோயில்களில் உள்ளது போலவே இங்கேயும் பகவானுக்கு கருப்பு வஸ்திரம் அணிவித்து எள் தீபம் போட்டு எள் சோறு படையல் வைக்கப்படுகிறது. நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து நீல வஸ்திரம் அணிவித்து சனிபகவானைக் குளிர்விக்கிறார்கள். இப்படிச் செய்தால் தோஷங்களில் இருந்து மட்டுமின்றி அனைத்து விதமான தடைகளையும் தகர்த்து அனுகிரகம் செய்வார் என்று சேவார்த்திகள் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். அந்த நம்பிக்கை பொய்க்காமல் அருளாட்சி செய்துகொண்டிருக்கிறார் அனுகிரக சனீஸ்வர பகவான்.

SCROLL FOR NEXT