மதுரை அருகே சோழவந்தான் பிரளயநாத சுவாமியை மனதார வழிபட்டு பிரார்த்தனைகள் செய்தால், செவ்வாய் தோஷம் முதலான தோஷங்கள் நீங்கும். நம் பிரச்சினைகளையெல்லாம் தீர்த்துவைப்பார், வழக்கு முதலான சிக்கல்களில் நமக்கு வெற்றியைத் தந்தருள்வார் பிரளய நாதர் என்று போற்றுகின்றனர் ஆச்சார்யப் பெருமக்கள்.
மதுரையில் இருந்து சுமார் 28 கி.மீ. தொலைவில் உள்ளது சோழவந்தான். இந்தத் தலத்து நாயகியாக ஜனகை மாரியம்மன் அழகுற ஆட்சி செய்துகொண்டிருக்கிறாள். ஜனக மகாராஜா வழிபட்ட திருத்தலம் இது.
ஜனகை மாரியம்மன் கோயிலுக்குப் பின்னால் மற்றொரு ஆலயம் உள்ளது. சக்தியும் சாந்நித்தியமும் கொண்டு திகழும் சிவாலயம் இது. இந்தக் கோயிலில் குடிகொண்டிருக்கும் சிவனாரின் திருநாமம் பிரளயநாத சுவாமி.
மிகச்சிறிய ஆலயம்தான். ஆனால் சுமார் ஐநூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த திருக்கோயில் எனும் பெருமை மிக்க திருக்கோயில். அம்பாளின் திருநாமம் - பிரளயநாயகி. கோயிலின் ஸ்தல விருட்சம் வில்வ மரம். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், வழிபடக் கூடிய திருத்தலம் என்று போற்றுகிறார்கள்.
இந்தத் தலத்தின் இன்னொரு சிறப்பு... சுவாமியும் அம்பாளும் தனித்தனி சந்நிதிகளில் கோயில் கொண்டிருக்கின்றனர். சுவாமியும் அம்பாளும் கிழக்கு நோக்கிய சந்நிதியில் அருள்பாலிக்கின்றனர்.
அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பித் தவிக்கும் மனநிலையில் இருப்பவர்கள், செவ்வாய் தோஷம் முதலான தோஷங்களில் உள்ளவர்கள் சோழவந்தான் பிரளயநாத சுவாமியை வஸ்திரம் சார்த்தி வேண்டிக்கொண்டால், அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பார் பிரளயநாத சுவாமி.
அதேபோல், இங்கே உள்ள விநாயகரும் விசேஷமானவர். விநாயகரின் திருநாமம் பாலகணபதி. இவருக்கும் பிரளயநாதருக்கும் சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வேண்டிக்கொண்டால், நினைத்த காரியம் நிறைவேறும் என்கிறார்கள் பக்தர்கள்.
அதேபோல், பெருமாள் கோயிலில் உள்ள துர்கையைத்தான் விஷ்ணு துர்கை என்று சொல்லுவோம். ஆனால் இங்கே உள்ள சிவாலயத்தில் விஷ்ணு துர்கையை தரிசிக்கலாம். செவ்வாய்க்கிழமையிலும் ராகுகால வேளையிலும் எலுமிச்சை தீபமேற்றி வழிபட்டால், தாலி பாக்கியம் நிலைக்கச் செய்வாள் துர்கை என்பது ஐதீகம்.
சோழவந்தான் பிரளயநாதர் கோயிலின் இன்னொரு சிறப்பம்சம்... விசாக நட்சத்திரக்கார்களுக்கான ஆலயம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
மாதந்தோறும் விசாக நட்சத்திர நாளில் வந்து யார் வந்து வேண்டிக்கொண்டாலும் அவை நிறைவேறும். விசாக நட்சத்திரக்காரர்கள் இங்கு பிரளயநாதரை வேண்டிக்கொண்டால், வீட்டில் குடும்ப ஒற்றுமை மேலோங்கும். குடும்பத்தில் சுபிட்சம் நிலவும். இதுவரையிலான தடைப்பட்ட காரியங்கள் விரைவில் நடந்தேறும்.