அண்ணன் பிள்ளையாரையும் தம்பி வேலவனையும் வணங்கி வழிபடுவோம். நாளைய தினம் அக்டோபர் 5ம் தேதி, சங்கடஹர சதுர்த்தி. பிள்ளையாருக்கு உகந்த நாள். மேலும் கார்த்திகை விரத நாள். முருகப்பெருமானுக்கு உரிய அற்புதமான நாள்.
எந்தவொரு தெய்வத்தை வணங்குவதாக இருந்தாலும் முதலில் நாம் வழிபடும் தெய்வம் விநாயகப் பெருமான் தான். எந்த ஹோமம் செய்வதாக இருந்தாலும் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து பூஜை மேற்கொள்வது வழக்கம்.
அதேபோல், சிவாலயங்களில் முதலில் பிள்ளையார் சந்நிதி அமைந்திருக்கும். பிள்ளையார் பெருமானை வணங்கிவிட்டுத்தான் எல்லா தெய்வ சந்நிதிகளுக்கும் சென்று வணங்கி வழிபடுவோம்.
இத்தனை மகத்துவம் வாய்ந்த பிள்ளையாருக்கு ஒவ்வொரு மாதமும் வருகிற சங்கடஹர சதுர்த்தி என்பது ரொம்பவே விசேஷமான நாள். இந்தநாளில் விரதமிருந்து விநாயகரை வழிபடலாம். விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் மாலை சார்த்தி பிரார்த்தனை செய்யலாம். வெள்ளெருக்கு மாலை சார்த்தியும் வேண்டிக்கொள்ளலாம்.
நாளைய தினம், சங்கடஹர சதுர்த்தி. எனவே, நாளைய தினம் 5ம் தேதி திங்கட்கிழமை மாலை வேளையில், விநாயகருக்கு மாலை சார்த்தி, மனதார வேண்டிக்கொள்ளுங்கள். கொழுக்கட்டை அல்லது சுண்டல் அல்லது கேசரி நைவேத்தியம் செய்து வழிபடுங்கள். சங்கடங்கள் அனைத்தையும் தீர்த்துவைப்பார்.
அடுத்து... கார்த்திகை விரதம்.
முருகப்பெருமானுக்கு உகந்தநாள். கார்த்திகை நட்சத்திரம் என்பது முருகனுக்கு உரிய நட்சத்திரம். கார்த்திகைப் பெண்கள் வளர்த்த கார்த்திகேயனை வணங்குவதற்கு உகந்த அருமையான நாள். நாளைய தினம் அக்டோபர் 5ம் தேதி, கார்த்திகை நட்சத்திர நாள்.
இந்த நன்னாளில், கந்தனை வணங்குவோம். கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வோம். செவ்வரளி மாலை சார்த்தி வேண்டுவோம். கஷ்டங்களையும் கவலைகளையும் போக்கி அருளுவான் திருக்குமரன்.
ஆகவே, சங்கடஹர சதுர்த்தி... கார்த்திகை விரதம். இந்த இரண்டும் இணைந்த நன்னாளில், அண்ணன் ஆனைமுகத்தானையும் தம்பி ஆறுமுகத்தையும் வணங்குவோம். வளம் பெறுவோம்.