குருவாரம் என்று சொல்லப்படும் வியாழக்கிழமையில், குரு பிரம்மாவை வணங்குவோம். படைத்த பிரம்மா, நமக்கு எல்லா சத்விஷயங்களையும் தந்து அருளுவார்.
அமாவாசையும் பெளர்ணமியும் நம் வாழ்வில் மிக முக்கியமான நாட்கள். இரண்டுமே வழிபாட்டுக்கு உரிய நாட்கள். அமாவாசை என்பது நம் முன்னோர்களை வழிபடுவதற்கு உகந்த அற்புதமான நாள். அமாவாசை நாளில், முன்னோர்களுக்கு உரிய நாளில், முன்னோர்களை வணங்கி வழிபட அவர்களின் பரிபூரண ஆசீர்வாத்தைப் பெறலாம்.
அதேபோல், பெளர்ணமி நாளில், அம்பாள் வழிபாடு மிகவும் பலத்தையும் பலன்களையும் கொடுக்கவல்லது. சந்திரனின் சக்தியானது முழுமையாக வியாபித்திருக்கும் அற்புதமான நாளில், சக்தி வடிவமான அம்பிகையை ஆராதிப்பதும் பூஜிப்பதும் பிரார்த்திப்பதும் சகல செளபாக்கியங்களையும் தந்தருளும். தரித்திர நிலையையே மாற்றும் .இல்லத்தில் சுபிட்சத்தைக் குடிகொள்ளச் செய்யும். தம்பதி இடையே இருந்த பிணக்குகள் அனைத்தும் நீங்கும். அவர்களிடையே ஒற்றுமை மேலோங்கும்.
அதேபோல், பெளர்ணமி என்பது குருவை வணங்குவதற்கு உரிய நாளும் கூட. பெளர்ணமி என்பது நிலவு சம்பந்தப்பட்ட சந்திரன் சம்பந்தப்பட்ட விஷயம். சந்திரன் என்பவன் மனோகாரகன். நம் மனதை ஆளுபவன். நம் மனம் என்கிற இயந்திரத்தை இயங்கச் செய்பவன். குருவின் அருளும் ஆசியும் உபதேசமும் இருந்தால்தான் ஞானம் பிறக்கும். குருவிடம் இருந்து ஞானத்தைப் பெற வேண்டுமெனில், சந்திர பலம் அவசியம். மனோபலம் முக்கியம். மனதில் தெளிவுடன் இருந்தால், ஞானத்தை அடையலாம்.
குருவாரம் என்று வியாழக்கிழமையைப் போற்றுகிறோம். நவக்கிரகத்தில் உள்ள குருபகவான் என்பவரே வியாழ பகவான் தான். தேவகுரு பிரகஸ்பதியே நவக்கிரக குருவாகவும் திகழ்கிறார். நம்மையெல்லாம் படைத்து இந்த உலகுக்கு அளித்தவன் பிரம்மா. படைப்புக்கடவுளான பிரம்மாவை வணங்கி வழிபட்டால், எல்லா நலமும் வளமும் மாற்றமும் ஏற்றமும் கிடைக்கப் பெறலாம்.
குருவாரம் எனப்படும் வியாழக்கிழமையும் பெளர்ணமியும் இணைந்து வந்துள்ள அற்புதமான நாளில், குரு பிரம்மாவை வணங்குவோம். நம் தலையெழுத்தையே திருத்தி அருளும் பிரம்மாவை பிரார்த்திப்போம். நம் வாழ்வில் ஏற்றங்களைத் தந்து நம்மை நிம்மதியும் ஆனந்தமும் பொங்க வாழச் செய்வார் பிரம்மா.