புரட்டாசி மாத பெளர்ணமியில், அம்பாளுக்கு இளநீர் அபிஷேகம் செய்வது ரொம்பவே விசேஷம். இளநீர் கொண்டு நைவேத்தியம் செய்வதும் சிறப்பு வாய்ந்தது. இந்த வழிபாட்டை செய்து அம்பாளை ஆராதிப்பதால், தாலி பாக்கியம் நிலைக்கும். கடன் தொல்லையில் இருந்து நிவர்த்தி அடையலாம். சகல ஐஸ்வரியங்களுடன் ஆனந்தமாக வாழலாம்.
பொதுவாகவே பெளர்ணமியில் வழிபடுவது மகத்துவம் வாய்ந்தது. ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய அமாவாசை என்பது முன்னோர்களை வழிபடக்கூடியது. அந்த நாளில், அதாவது அமாவாசை நாளில், பித்ரு ஆராதனை செய்யவேண்டும். இது அவர்களுக்கான நாள். முன்னோர் வழிபாடு செய்யவேண்டும் என்பதுதான் நம் வாழ்வின் மிக முக்கியக் கடமை. ஆகவே அமாவாசையில் அவர்களுக்கான நாளில், முன்னோர் ஆராதனை மிக மிக அவசியம்.
அதேபோல், மாதந்தோறும் வரக்கூடிய பெளர்ணமி என்பது அம்பாளை ஆராதிக்கக் கூடிய நாள். பெண் தெய்வங்களை வழிபடுவதற்கு உரிய நாள். குலதெய்வத்தை வணங்கவேண்டிய நாள். இதில் அமாவாசையில் முன்னோர் வழிபாடு போல, பெளர்ணமியில் பெண் தெய்வங்களை, அம்பாளை வணங்கி வழிபடவேண்டியது மிக மிக அவசியம்.
பெளர்ணமியில் காலையும் மாலையும் வாசலில் கோலமிட வேண்டும். வாசலில் விளக்கு ஏற்றிவைக்கவேண்டும். பூஜையறையில் கோலமிட்டு, விளக்கேற்றி வைத்து, அம்பாள் படங்களுக்கு செந்நிற மலர்கள் கொண்டு அலங்கரிக்கவேண்டும்.
பெளர்ணமியில், அம்பாளுக்கு இளநீர் அபிஷேகம் செய்வது ரொம்பவே விசேஷம். ஆலயத்தில் குடிகொண்டிருக்கும் அம்பாளுக்கு, அவளை அபிஷேகிப்பதற்கு இளநீர் வழங்கலாம். அதேபோல், வீட்டில் அம்பாள் சிலை இருந்தால், நாமே இளநீரால் அபிஷேகம் செய்து ஆராதிக்கலாம். சிலை இல்லையெனில், அம்பாளுக்கு இளநீர் கொண்டு நைவேத்தியம் செய்யலாம்.
பெளர்ணமி என்பது முழு நிலவு தோன்றும் அற்புதமான நாள். பெளர்ணமி என்பது சந்திரன். சந்திரன் என்பவன் மனோகாரகன். நம் மனதை ஆளுபவன். ஆகவே பெளர்ணமியில் வழிபடுவது என்பது மனதில் உள்ள குழப்பங்களைப் போக்கவல்லது. மனதில் தெளிவைக் கொடுக்கக்கூடியது.
அம்பாளை, கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்து வழிபடலாம். லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்யலாம். அபிராமி அந்தாதி பாராயணம் செய்து வணங்கலாம். அம்பாள் துதியும் போற்றியும் சொல்லி வணங்கலாம். இதனால் தாலி பாக்கியம் நிலைக்கும். கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். வீட்டின் தரித்திர நிலை விலகும். சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கப் பெறுவீர்கள்.