அல்லல்கள் நேரும்போதெல்லாம் ஆபத்பாந்தவனாக இருந்து நமக்கு அருளக்கூடியவர் ஆஞ்சநேயப் பெருமான். சக்தியும் வீரமும் சத்தியமும் சாந்நித்தியம் கொண்ட அஞ்சனை மைந்தனை தொடர்ந்து வணங்கி வந்தால், துன்பமெல்லாம் பறந்தோடிவிடும். துக்கமெல்லாம் வடிந்துவிடும்.
அனுமன் சாலீசாவைப் பாராயணம் செய்யச் செய்ய, அனுமன் சாலீசாவைப் பாராயணம் செய்து அனுமனை வணங்க வணங்க, மனோபலம் பெருகும். மனோரதமான விஷயங்கள் வாழ்வில் நடக்கும். எதிரிகளையும் எதிர்ப்புகளையும் விரட்டியடிப்பார் ஆஞ்சநேயர்.
அனுமன் சாலீசா நமக்கெல்லாம் கிடைத்த சரிதம் தெரியும்தானே.
டில்லியை ஆட்சி செய்த மொகலாய மன்னரிடம் ராமபிரானின் பெருமைகளையும் ராம தரிசனத்தின் ஆனந்தத்தையும் மகான் துளசிதாஸர் மனம் விகசித்து விவரித்தார். ’அடியேனுக்கும் ராம தரிசனத்தைச் செய்து வையுங்கள்’ என வேண்டினார் மன்னர்.
’’ராம தரிசனம் என்பது பரீட்சித்துப் பார்க்கிற விஷயம் அல்ல. உண்மையான பக்தியுடன் வேண்டினால் மட்டுமே கிடைக்கக் கூடியது’’ என்று துளசிதாஸர் சொல்ல... கோபமானார் மன்னர். எவ்வளவோ எடுத்துக் கூறியும் செவிசாய்க்காத மன்னர் துளசிதாஸரைச் சிறையிலிட்டார்.
ஆனால் துளசிதாஸர் வருந்தவில்லை. சிறையில் அமர்ந்துகொண்டு, அனுமனைத் துதிக்கும் பாடலை, ஸ்தோத்திரத்தை இயற்றினார். மனமுருக அனுமனைப் பிரார்த்தித்தார்.
அவ்வளவுதான். அனுமனின் அருளால், டில்லி நகரம் முழுவதுமே குரங்குகள் சூழ்ந்திருப்பதாக மன்னருக்கு சேதி வந்தது. அணி அணியாக குரங்குகள் சூழ்ந்துகொண்டன.
குரங்குகளின் அட்டகாசத்தைத் தவிர்க்க முயன்ற அரசின் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. மக்கள் குரங்குகளின் ஆட்டத்தைப் பொறுக்கமுடியாமல் மன்னரிடம் முறையிட்டார்கள். கலங்கிப் போன மன்னர், துளசிதாஸரிடம் சென்று குரங்குகள் சூழ்ந்திருக்கும் விவரத்தை எடுத்துக் கூறினார்.
துளசிதாஸர் மெல்லப் புன்னகைத்தார்.
‘’ஸ்ரீராமரின் படைகள்தான் வானரப்படைகள். அந்த வானரக்கூட்டத்தின் ஒரு பகுதிதான் வந்திருக்கிறது. மொத்தப் படையும் வந்தவுடன் ஸ்ரீராமரும் வந்துவிடுவார். நீங்கள் விரும்பிய தரிசனத்தை அளிப்பார்’’ என்றார்.
மன்னர் தவறை உணர்ந்தார். துளசிதாஸரிடம் மன்னிப்புக் கேட்டார். அவரை விடுதலை செய்தார். ‘வானரக்கூட்டங்களின் தொல்லையிலிருந்து எங்கள் தேசத்தை நீங்கள்தான் காக்கவேண்டும்’ என்றார்.
துளசிதாசர் தான் இயற்றிய ஸ்தோத்திரத்தைப் பாடினார். அனுமன் அருளால் வானரப்படை மறைந்தது.மன்னர் மகிழ்ந்தார்.
துளசிதாசர் இயற்றிய அந்த ஸ்தோத்திரம்தான் ‘அனுமன் சாலீசா’. 40 நாலடிப் பாக்களால் அமைந்ததால், இது சாலீசா எனப்படுகிறது என்று சொல்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
மேலும் தோஹா எனும் ஈரடிப் பாக்கள் இரண்டு முதலில் இடம்பெறுகின்றன. இவை குருநாதரையும் ஆஞ்சநேயரையும் போற்றி வணங்குகின்றன.
ராமபக்தியில் ஆஞ்சநேயர், குருவுக்கு நிகரானவர், குருவானவர் என்பதும் கவனிக்கத்தக்கது. ஆஞ்சநேயர், ஸ்ரீராமரை குருவாகவும் கடவுளாகவும் ஏற்றுக்கொண்டு பக்தி செலுத்தினார். ராம பக்தர்கள் அனைவருக்கும் குருவாகத் திகழ்பவர்... அனுமன்.
அனுமனின் திவ்ய ரூபம், வெல்ல முடியாத பலம், புத்தி சாதுரியம், தைரியம், ராமபிரானுக்கு அவர் செய்த அரிய சேவைகள், சஞ்ஜீவி மலையைப் பெயர்த்தெடுத்து வந்தது, அனுமனை வழிபடுவதால் அடையும் நன்மைகள் ஆகியவற்றை எடுத்துரைக்கிறது.
’அனுமன் சாலீசா’ ஸ்தோத்திர பாராயணம் தீயசக்திகளை விரட்டும் சக்தி கொண்டது. ஸ்ரீஅனுமனை நினைத்து, ‘அனுமன் சாலீசா’ பாராயணம் செய்யுங்கள். எதிர்ப்புகள் காணாமல் போகும். எதிரிகள் தலைதெறிக்க ஓடுவார்கள்.
நினைத்த காரியம் ஜெயமாகும். கணவன் மனைவி இடையேயான ஒற்றுமை மேலோங்கும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள்.
அனுமனுக்கு வெண்ணெய் சாற்றி வழிபடுங்கள். வெற்றிலை மாலயும் சார்த்தி வணங்கலாம். ‘ஜெய் ஆஞ்சநேயா’ என்று சொல்லி ராமபக்தனை வணங்கி பிரார்த்தனை செய்யுங்கள். பிரச்சினைகள் அனைத்தும் கரைந்து காணாமல் போகும்!