திருக்கரத்தில் செங்கோல் ஏந்தியபடி காட்சி தருகிறார் குணசீலம் பெருமாள். இங்கே உள்ள பிரசன்ன வேங்கடாசலபதியை மனதாரத் தொழுதால், மனதில் நல்ல குணத்தை விதைப்பார். ஐஸ்வர்யமும் தந்தருள்வார்.
திருச்சியில் இருந்து நாமக்கல் செல்லும் வழியில், 22 கி.மீ. தொலைவில் உள்ளது குணசீலம். காவிரிக் கரையில் அமைந்து உள்ள சின்னஞ்சிறிய கிராமம். இங்கே, அழகுடனும் ஒய்யாரத் திருக்கோலத்திலும் உலகையே ஆட்சி செய்யும் செங்கோலுடனும் திருக்காட்சி தருகிறார்.
இந்தத் தலத்தில் பெருமாளின் திருநாமம் ஸ்ரீபிரசன்ன வேங்கடாசலபதி. திருப்பதி பெருமாளின் திருநாமம்தான் இவருக்கும். ஏனென்றால், திருப்பதிக்கு நிகரான திருத்தலம் என்றே குணசீலம் போற்றப்படுகிறது.
சிறிதான ஆலயம்தான். ஆனால் சாந்நித்தியம் பெரிது. எல்லைகளற்ற கருணையையும் அருளையும் பொழிந்துகொண்டிருக்கிறார் பிரசன்ன வேங்கடாசலபதி. அதேபோல், தாயாருக்கு தனிச்சந்நிதியோ பரிவார தெய்வங்களின் சந்நிதியோ இங்கே இல்லைதான். ஆனாலும் இந்தப் பெருமாளின் சாந்நித்தியத்தை உணர்ந்து ஈர்க்கப்பட்டு எங்கிருந்தெல்லாமோ வந்து தரிசித்துச் செல்கிறார்கள் பக்தர்கள்!
புரட்டாசி மாதத்தில், குணசீலம் பெருமாளை ஸேவிக்க, தென் மாவட்டங்களில் இருந்தும் கர்நாடகம் முதலான வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வரும் திருத்தலம் இது. திருப்பதிக்கு இணையான தலம் என்று போற்றப்படுவதால், வியாபாரிகளும் தொழில் செய்பவர்களும் இங்கு வந்து வேண்டிச்செல்வதையும் தொழில் சிறக்க வேண்டும் என்று பிரார்த்தித்துச் செல்வதையும் பார்க்கலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
தன்னை அறிவதற்காகவும் உலக மக்களின் நன்மை கருதியும் முனிவர் பெருமக்கள், மகரிஷிகள், ஞானிகள் தபஸ் செய்வது வழக்கம். அப்படி குணசீலன் எனும் மகரிஷி, ஆற்றங்கரையில் அமைந்திருந்த இயற்கைச் சூழலை உணர்ந்து, கரையையொட்டி ஆஸ்ரமம் அமைத்துத் தங்கினார். பர்ணசாலை அமைத்தார். இங்கே பெருமாளை நோக்கி கடுந்தவம் மேற்கொண்டார். திருப்பதி ஏழுமலையானின் மீதும் அவரின் பேரழகின் மீது மாறாபக்தி கொண்டிருந்த மகரிஷிக்கு, அந்த வேங்கடவனே நேரில் வந்து தரிசனம் தந்தருளினார்.
மகரிஷியின் கடும் தவத்தால், தவத்தின் பலனால் பெருமாளே அங்கு வந்து எழுந்தருளியதால், அந்த இடம் புண்ணிய க்ஷேத்திரமானது. அந்த ஊருக்கு மகரிஷியின் பெயரால், குணசீலம் என்றே அழைக்கப்பட்டது.
தல்பயா எனும் மகா முனிவர் அந்தக் காலத்தில் வாழ்ந்தார். இறைவனை அடையும் வழியை அறிந்து, அது தொடர்பாக ஏராளமான சீடர்களை உருவாக்கி, அவர்களுக்கு தபஸ் செய்வதையும் கடவுளை வழிபடும் முறையையும் கற்றுக் கொடுத்தார். அப்படி அந்த மகா தபஸ்வியிடம் கற்றறிந்தவர்தான் குணசீல மகரிஷி. குருவிடம் இருந்து கற்றறிந்த வித்தைகளையும் பெற்றுத் தெளிந்த ஞானத்தையும் கொண்டு, திருமாலைத் தரிசிக்கும் பாக்கியத்தைப் பெற்றார்.
பெருமாள், ‘உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள்’ என்றார். ‘இந்த உலக மக்கள் நன்றாக வாழவேண்டும். சோழ தேச மக்கள் அனைவரும் நோய் நொடியில்லாமல், மனதில் எந்தக் கிலேசமும் இல்லாமல் வாழ வேண்டும். அதற்காக, தாங்கள் இங்கே இந்தத் திருவிடத்தில் எழுந்தருளவேண்டும். இங்கேயே இருந்து, மக்களின் மன நலம் காக்கவேண்டும்’ என வேண்டினார்.
அப்படியே ஆகட்டும் என அருளினார் வேங்கடவன். அதுமட்டுமின்றி, அங்கேயே கோயில் கொண்டு, ‘திருப்பதிக்கு வர இயலாதவர்கள், இங்கே வந்து என்னைத் தரிசித்தாலே, திருப்பதிக்குச் சென்று வந்த பலனும் புண்ணியமும் கிடைக்கச் செய்வேன்’ எனத் தெரிவித்தார் திருமால். எனவே குணசீலம் தலத்தின் இறைவன் திருநாமம் பிரசன்ன வேங்கடாசலபதி என அமைந்தது என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
பொதுவாகவே, பெருமாளுக்கு புதன் கிழமையும் சனிக்கிழமையும் உகந்த நாட்கள். ஆகவே இந்தநாட்களில் குணசீலம் வேங்கடாசலபதியைத் தரிசிக்க எண்ணற்ற பக்தர்கள் வருகின்றனர். அதேபோல், திருவோண நட்சத்திர நாளிலும் வியாழக்கிழமையிலும் பெருமாளை ஸேவித்துச் செல்கின்றனர்.
இன்னொரு விஷயம்... மன நலம் பாதிக்கப்பட்டவர்கள், இந்தத் தலத்தில் ஒருமண்டலம் தங்கி, இங்கே வழங்கப்படும் தீர்த்தப் பிரசாதத்தை உட்கொண்டு, பெருமாளை ஸேவித்து வந்தால், மன நலம் குணமாகித் திரும்புவர் என்பது ஐதீகம். மதியம் ஒருமணி உச்சிக்கால பூஜையில், பெருமாளுக்கு பூஜைகள் நடந்த பின்னர், பக்தர்களின் முகத்தில் தீர்த்தம் தெளிக்கப்படுவது வழக்கம். இப்போதைய சூழலில், தீர்த்தமடிப்பது இல்லை.
பெருமாளின் திருக்கரத்தில் உள்ள செங்கோல், விசேஷமானது. இந்த செங்கோல் கொண்டு, தீராத நோயையும் தீர்த்தருள்கிறார் பிரசன்ன வேங்கடாசலபதி என்று போற்றுகிறார் பிச்சுமணி பட்டாச்சார்யர்.
கடந்த பத்துநாட்களாக, குணசீலம் கோயிலில் புரட்டாசி பிரம்மோத்ஸவம் வெகு விமரிசையாக நடந்தேறியது. தினமும் ஒவ்வொரு வாகனத்தில் பெருமாள் புறப்பாடு உள்ளிட்டவை நடந்தன. முக்கிய நிகழ்வான, திருத்தேரோட்டமும் சிறப்புற நடைபெற்றது.
புரட்டாசி மாத பிரம்மோத்ஸவம் நடைபெற்றிருக்கும் இந்த தருணத்தில், குணசீலம் வேங்கடாசலபதியை கண்ணாரத் தரிசித்து மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். சகல ஐஸ்வர்யங்களுடன் திகழ்வீர்கள்.