தனி மனிதன் ஒரு பிரமாண்டமான கோயிலைக் கட்ட முடியும் என்பதற்கு உதாரணமாக ஹதீஸ்சிங் கோயில் அமைந்துள்ளது. குஜராத் மாநிலத்தின் தலைநகரான அகமதாபாத் இரயில் நிலையம் அருகில் இந்த சமணக் கோயில் உள்ளது. ஹதீஸ்சிங் எனும் வணிகரால் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலம் இது.
மிகுந்த கலை அழகும் நுண்ணிய சிற்ப வேலைப்பாடுகளும் கொண்ட இடமாக இரண்டு அடுக்குகளுடன் இந்த ஆலயம் திகழ்கிறது. இக்கோயிலின் கட்டுமானப் பணிகள் 1848 ல் தொடங்கப்பட்டன. ஆனால் பணிகள் நிறைவுபெறுவதற்குள் ஹதீஸ்சிங் காலமாகி விட்டார். அதன் பின் அவரின் மனைவி சீதனி ஹர்கோபாய் என்பவரால் முடிக்கப்பட்டது. இக்கோயில் ஹதீஸ்சிங் கோயில் எனவே அழைக்கப்படுகிறது. குஜராத்திலுள்ள சமண கோயில்களில் இது தனித் தன்மை வாய்ந்ததாகும்.
கோயிலின் உள்ளே நுழைந்தவுடன் கீர்த்தி ஸ்தம்பம் அழகிய தோற்றத்துடன் மிளிருகிறது. கோயில் முழுவதும் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் வடிவமைக்கப் பட்டுள்ளது. இராஜஸ்தானிலுள்ள தில்வாரா ஜைனக் கோயில்கள் போலவே சிறப்பாக அமைந்துள்ளது.
ஜைன தருமத்தை தோற்றுவித்த முதல் தீர்த்தங்கரரான பகவான் விருஷப தேவரைத் தொடர்ந்து வந்த பதினைந்தாவது தீர்த்தங்கரரான, தரணிக்கு தருமத்தை தந்த தருமநாதர் இக்கோயிலின் மூலவராவார்.
கோவிலே கலைக்கூடம்
கோயில் முழுவதும் வெண் சலவைக் கற்களால் இழைக்கப்பட்டது. சிற்பக்கலை, சிகரத்திற்கே சென்றுள்ளது. முகப்பிலுள்ள குவிந்த மாடம் கலைகளைக் குவித்து வைத்துள்ளது போல் காட்சி தருகிறது. இதனை மிக அருமையாக அலங்கரிக்கப்பட்ட பன்னிரண்டு தூண்கள் விதவிதமான சிற்ப வேலைப்பாடுகள் தாங்கி நிற்கின்றன. அழகிய தோரணங்கள் பார்ப்பவர்களை அசர வைக்கின்றன.
வளாகத்தினுள் ஐம்பத்திரண்டு மாடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை ஒவ்வொன்றினுள்ளும் அருகக் கடவுள்களின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. கோயிலின் முக்கியப் பகுதியில் பதினொரு தீர்த்தங்கர பகவான்களின் சிலைகளும், கீழ்ப்பகுதியில் ஆறு சிலைகளும் விக்டோரியா மகாராணியின் உருவம் பொறித்த இரும்புப் பெட்டகம் ஒன்றும் காணப்படுகிறது. கோயிலின் அடுத்த பகுதியில் நீண்ட கலைக்கூடம் மூன்று பக்கமும் அமைந்து பிரமிக்க வைக்கிறது.
அக்காலத்திலேயே இக்கோயிலில் மழை நீர் சேகரிக்கும் அமைப்பு உருவாக்கப்பட்டு இன்றும் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. கலைகளும் தெய்வீகத்தன்மையும் கலந்துள்ள இச்சிறப்பான கோயிலைக் காண வெளிநாட்டுப் பயணிகள் வந்து குவிகின்றனர். அனைத்து மதத்தினரும் பகவான் தருமநாதரை தரிசித்துச் செல்கின்றனர்.
குஜராத் மாநிலத்தில் பெரும் பஞ்சம் ஏற்பட்ட போது, கட்டிடக் கலைஞர்களுக்கு வேலை வழங்கி உணவு அளிப்பதற்காகவே உருவாக்கப்பட்ட கோவில் இது. நூற்றுக்கணக்கான கலைஞர்களின் கலைக்கும் உழைப்புக்கும் சாட்சியாக இந்த ஆலயம் இன்றும் சர்வ சமயத்தவர்களையும் கவர்கிறது.