ஆன்மிகம்

புரட்டாசி ... ஏகாதசி... திருவோண மகிமை

வி. ராம்ஜி

புரட்டாசி மாதத்தில், ஏகாதசி திதியில், திருவோண நட்சத்திர நாளில், மாலையில் பெருமாளை தரிசிப்பதும் இல்லத்தில் பெருமாளுக்கு துளசி சார்த்தி பிரார்த்தனை செய்வதும் மகோன்னதமான பலன்களைத் தந்தருளும். இல்லத்தில் அமைதியையும் ஆனந்தத்தையும் தந்தருள்வார் பெருமாள்.

புரட்டாசியை புண்ணியம் நிறைந்த மாதம் என்பார்கள். புரட்டாசியை வழிபாட்டுக்கு உரிய மாதம் என்று போற்றுகின்றனர். புரட்டாசி என்பது மகாவிஷ்ணுவுக்கு உகந்த மாதமாகச் சொல்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று கிருஷ்ணாவதாரத்தில் பகவான் அருளினாலும் புரட்டாசி மாதம் என்பதே திருமாலை வழிபடுவதற்கு உரிய மாதமாகவே பார்க்கிறார்கள் பக்தர்கள். புரட்டாசி மாதம் முழுவதுமே பெருமாள் கோயிலுக்குச் சென்று தரிசிப்பது மும்மடங்கு பலன்களைத் தந்தருளும் என்பது ஐதீகம்.

புரட்டாசி மாதத்தில் பெருமாள் கோயிலுக்குச் செல்வது சிறப்பு வாய்ந்தது. இந்த மாதத்தில் திருப்பதி, திருவரங்கம், குணசீலம், ஸ்ரீவில்லிபுத்தூர் முதலான பெரும்பாலான வைஷ்ண திருத்தலங்களில், பிரம்மோத்ஸவ விழா விமரிசையாக நடந்தேறும். பத்து முதல் பனிரெண்டு நாள் வரை நடைபெறும் இந்த விழாவில், தினமும் காலையும் மாலையும் உத்ஸவங்கள் அமர்க்களப்படும்.

புரட்டாசி மாதத்தில், விரதம் மேற்கொள்வார்கள் பக்தர்கள். இவர்களில் இந்த மாதத்தில் அசைவம் சாப்பிடாமல் இருப்பவர்களும் உண்டு. பொதுவாகவே சனிக்கிழமை என்பது பெருமாளுக்கு உகந்த நாள் என்றாலும் புரட்டாசி சனிக்கிழமை இன்னும் விசேஷமானது.

அதேசமயம், புரட்டாசி மாதத்தில் வருகிற ஏகாதசி கூடுதல் மகத்துவம் கொண்டது. இந்தநாளில், அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று பெருமாளை துளசி மாலை சார்த்தி வேண்டிக்கொள்வது, நன்மைகளை வழங்கும். எடுத்த காரியத்தை இனிதே முடித்துத் தரும்.

இன்று ஏகாதசி (27.9.2020 ஞாயிற்றுக்கிழமை). இந்தநாளில், பெருமாளை ஸேவியுங்கள். இந்தநாளில் இன்னொரு விசேஷமும் அடங்கியுள்ளது.

இன்று திருவோண நட்சத்திர நன்னாள். திருவோணம் என்பது மகாவிஷ்ணுவின் திருநட்சத்திரம். கோவிந்தனை வணங்குவதற்கு உரிய அற்புதமான நாள். விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் சொல்லி, வீட்டில் விளக்கேற்றி வழிபடலாம்.

குறிப்பாக, மாலையில் விளக்கேற்றி, விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்து வழிபடுங்கள்.

புரட்டாசி விசேஷம். ஏகாதசி விசேஷம். திருவோண நட்சத்திர நாள் விசேஷம். இந்த மூன்றும் இணைந்த மகத்துவம் மிக்க நாளில், பெருமாளை மனதார வழிபாடுங்கள். நாராயணனை வேண்டிக்கொள்ளுங்கள். நலமும் வளமும் தந்து அருளுவார் வேங்கடவன்.

SCROLL FOR NEXT