கும்பகோணம் ஒப்பிலியப்பனை தரிசித்தால், தடைப்பட்ட திருமண பாக்கியம் விரைவில் கைகூடும் என்பது ஐதீகம். உங்களுக்கு என்னென்ன தேவையோ... உங்கள் வாழ்க்கைக்கு என்னென்ன தேவையோ... உங்கள் குடும்பத்துக்கு என்னென்ன தேவையோ... அவற்றையெல்லாம் வழங்கி அருள்வார்; வரம் தருவார் ஒப்பிலியப்பன். முக்கியமான கல்யாண வரம் தந்தருள்வார் ஒப்பிலியப்பன் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.
கோயில் நகரம் என்று அழைக்கப்படும் கும்பகோணம் பெருமை மிகுந்த நகரம். கும்பகோணம் முழுக்க கோயில்கள்தான். திரும்பிய பக்கமெல்லாம் கோயில்கள்தான். எந்தத் தெருவில் நுழைந்தாலும் அங்கே கோபுரத்தையும் கோயிலையும் பார்க்கலாம்.
கும்பகோணம் மட்டுமின்றி கும்பகோணத்தைச் சுற்றியுள்ள ஊர்களிலும் ஏராளமான கோயில்கள் இருக்கின்றன. கும்பகோணத்தில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ஒப்பிலியப்பன் திருக்கோயில். அற்புதமான ஆலயம்.
இங்கே, இந்தத் தலத்தில் அழகும் அருளும் ததும்ப சாந்நித்தியத்துடன் காட்சி தருகிறார் பெருமாள். இந்தத் தலத்தின் பெருமாளுக்கு ஸ்ரீஒப்பிலியப்பன் என்பதுதான் திருநாமம். ஒப்பிலியப்பன் என்றால் ஒப்பில்லா அப்பன். ஒப்பில்லாத தகப்பனாக, அருள் பொழியும் தந்தையாக, ஆனந்தத்தைத் தரும் ஞானத் தகப்பனாக இங்கே குடிகொண்டிருக்கிறார் பெருமாள்.
வருடந்தோறும் ஐப்பசி மாதத்தில் சிரவண நட்சத்திரத்தின் போது, இங்கே, ஒப்பிலியம்மனுக்கு திருக்கல்யாண வைபவம் சிறப்புற நடைபெறும். இந்த வைபவத்தில் கலந்துகொண்டு, ஒப்பிலியப்பனின் திருக்கல்யாணத் திருக்கோலத்தைத் தரிசித்தால், தடைப்பட்ட திருமணம் முதலான மங்கல காரியங்கள் நடந்தேறும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
திருமணம் தள்ளிப்போகிறதே என்று கவலைப் படுபவர்கள்... ஐப்பசியில் நடைபெறும் ஒப்பிலியப்பன் திருக்கல்யாண வைபவத்தை கண்ணாரத் தரிசியுங்கள். புரட்டாசி மாதம் முழுக்க குதூகலமான விழாக்கள் ஒப்பிலியப்பனுக்கு நடைபெறும். தினந்தோறும் வீதியுலா, உத்ஸவம் என்று அமர்க்களப்படும். ஐப்பசி மாதத்தில் அழகுற நடைபெறும் திருமண வைபவம். இதனை தரிசியுங்கள். கல்யாண வரம் தருவார் ஒப்பிலியப்பன் என்று போற்றுகின்றனர் பக்தர்கள். .