ஒப்பிலியப்பனை மனதார வேண்டிக்கொண்டால்... நினைத்தது நிறைவேறும். கேட்டதெல்லாம் கிடைக்கும். மங்காத செல்வத்தையும் புகழையும் தந்தருள்வார் ஒப்பிலியப்பன்!
கோயில் நகரம் என்று கும்பகோணத்தைச் சொல்லுவார்கள். கும்பகோணம் முழுக்க கோயில்கள்தான். திரும்பிய பக்கமெல்லாம் கோயில்கள்தான். எந்தத் தெருவில் நுழைந்தாலும் அங்கே கோபுரத்தையும் கோயிலையும் பார்க்கலாம். கும்பகோணம் மட்டுமின்றி கும்பகோணத்தைச் சுற்றியுள்ள ஊர்களிலும் ஏராளமான கோயில்கள் இருக்கின்றன. கும்பகோணத்தில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ஒப்பிலியப்பன் திருக்கோயில். அற்புதமான ஆலயம்.
இந்தத் தலத்துக்கு திருவிண்ணகரம் என்று பெயர். 108 திவ்விய தேசங்களில் இந்தத் திருத்தலமும் ஒன்று. கருடாழ்வார் இங்கே தவம் செய்து, பெருமாளின் திவ்விய தரிசனத்தைப் பெற்றார் என்கிறது ஸ்தல புராணம். அதேபோல், மார்க்கண்டேய மகரிஷி இங்கே பெருமாளை நினைத்து கடும் தவம் புரிந்து, மகாவிஷ்ணுவின் அருளைப் பெற்றார் என விவரிக்கிறது.
பெருமாளுக்கு பூதேவி என்கிற பூமாதேவியும் ஸ்ரீதேவி என்ற மகாலக்ஷ்மியும் என இரண்டு மனைவிகள். இவர்களில், ஸ்ரீதேவியை தன் மார்பிலேயே இடம் கொடுத்து அமரவைத்திருக்கிறார் பெருமாள். இதி பூமாதேவிக்கு ரொம்பவே வருத்தம். ‘பகவானின் இதயத்திலேயே அமரும் வரமும் பாக்கியமும் எனக்குக் கிடைக்கலையே... எனக்குக் கொடுக்கலையே...’ என வருந்தினார்.
பூமாதேவியின் உள்ளத்து விருப்பத்தைப் புரிந்துகொண்ட பெருமாள், பூமாதேவியை அழைத்தார். ‘’பூவுலகில், மார்க்கண்டேய மகரிஷியின் மகளாக அவதரிப்பாய். அப்போது உன் எண்ணம் நிறைவேறும்’’ என அருளினார்.
மிருகண்டு முனிவரின் மைந்தன் மார்க்கண்டேய மகரிஷி. தவ வலிமை மிக்க மார்க்கண்டேய மகரிஷிக்கு இரண்டு ஆசைகள். சொல்லப்போனால், ஒரேயொரு ஆசை. அந்தவொரு ஆசையில் இரண்டும் அடங்கிவிடும். அவருக்கு, பூமாதேவியானவள் தனக்கு மகளாகப் பிறக்க வேண்டும் என்பது மிகப்பெருங்கனவு; ஆசை.
சரி... இன்னொரு ஆசை?
‘திருமால், எனக்கு மாப்பிள்ளையாகவேண்டும்’
பூமாதேவி மகளாகிவிட்டால், மார்க்கண்டேய மகரிஷிக்கு மகாவிஷ்ணு மாப்பிள்ளையாகிவிடுவாரே.
இது நிறைவேற வேண்டும் என கடுந்தவம் புரிந்து வந்தார் மார்க்கண்டேய மகரிஷி. தவத்தின் பலனாக, ஒருநாள், அவருடைய துளசி வனத்தில், தவத்தில் இருந்து எழுந்து வந்த போது, குழந்தையின் சத்தம் கேட்டது. சத்தம் வந்த திசையில் சென்று பார்த்தார். துளசிச்செடிகளுக்கு மத்தியில் பெண் குழந்தை ஒன்று இருந்தது. அந்தக் குழந்தையை ஆதுரத்துடன் கைகளில் எடுத்துக்கொண்டார். தன் கண்களால் குழந்தையை ஒற்றிக்கொண்டார். பூமாதேவி எனப் பெயரிட்டு வளர்த்து வந்தார்.
பூமாதேவியும் வளர்ந்தாள். திருமண வயதை அடைந்தார். திருமண வயது நெருங்குகிறது என்றால்... அவளுக்குத் திருமணம் செய்துவைக்க வேண்டும் என்று அர்த்தம். தன் மகளுக்கு மகாவிஷ்ணுவை மணம் முடிக்க வேண்டும் என்று அர்த்தம். அப்படி மகாவிஷ்ணுவுக்கு திருமணம் செய்து வைத்தால், மகாவிஷ்ணு நமக்கு மாப்பிள்ளையாகிவிடுவார் என்று அவருக்கு ஆசை.
என்ன செய்வது ஏது செய்வது எனச் சிந்தித்துக் கொண்டே இருந்தார் மார்க்கண்டேய மகரிஷி. அந்தத் தருணத்தில்தான், வயது முதிர்ந்த அந்தணர் வேடத்தில் மகாவிஷ்ணு வந்தார். மார்க்கண்டேய மகரிஷியின் குடிலுக்கு வந்தவர்... ‘உங்கள் மகள் பூமாதேவியை எனக்கு மணம் முடித்துக் கொடுங்கள்’ என்று கேட்டார். அதைக் கேட்டு அதிர்ந்து போனார் மகரிஷி.
‘’என் மகளுக்கு எந்த அளவுக்கு உப்பு போடணும், எப்படி சமைக்கணும் என்றெல்லாம் தெரியாதே’ என்று நழுவப்பார்த்தார். ஆனால் முதியவராக வந்த திருமாலோ... ‘பரவாயில்லை... உப்பே இல்லாவிட்டாலும் பரவாயில்லை. உப்பில்லாத உணவை சாப்பிடத்தயாராக இருக்கிறேன்’ என்றார்.
அவர் ‘வேண்டாமே...’ என்றார். பெருமாளே ‘பரவாயில்லை’ என்றார். ஒருகட்டத்தில், மகரிஷியால் தவிர்க்கமுடியவில்லை.
அதன்படியே, மணம் முடித்து வைத்தார். அப்போது, மார்க்கண்டேய மகரிஷிக்கு முன்னே முதியவராக வந்த பெருமாள், தன் ரூபத்தைக் காட்டி அருளினார். அதேபோல், மகளாக வளர்ந்தவள்தான் பூமாதேவி என்பதையும் ரூபம் காட்டி தரிசனம் தந்தார். உடனே, மார்க்கண்டேய மகரிஷி, பூமாதேவி சமேத திருமாலின் திருவடிகளை நமஸ்கரித்து வணங்கினார்.
இந்தப் புராணத் தொடர்பு கொண்ட திருத்தலம்தான் ஒப்பிலியப்பன் திருக்கோயில். இன்றைக்கும் உப்பில்லாத உணவே பெருமாளுக்கு நைவேத்தியம் செய்யப்படுகிறது.
இந்தத் தலத்துக்கு வந்து, ஒப்பிலியப்பனை மனதார வேண்டிக்கொண்டால்... நினைத்தது நிறைவேறும். கேட்டதெல்லாம் கிடைக்கும். மங்காத செல்வத்தையும் புகழையும் தந்தருள்வார் ஒப்பிலியப்பன்!