ஆன்மிகம்

கோகுலாஷ்டமி: சின்னச் சின்னப் பாதங்கள்

ஜி.விக்னேஷ்

கோகுலாஷ்டமி செப்டம்பர் 5

கிருஷ்ணர் இரவில் பிறந்தார் என்பதால், முதிர் மாலை வேளையில் பூஜை செய்வது வழக்கம். இல்ல வாயிலில் கோலமிட்டு, செம்மண் வரைய வேண்டும். கண்ணனை குழந்தையாகவே பாவிப்பதால், சின்னச் சின்னப் பாதங்களை வாசலிலிருந்து இல்லத்தின் உள்ளே வருவதுபோல கோலமாக வரைவர்.

வாயிலில் தோரணம் கட்டி, மாவிலை வைத்து வாயில் நிலைப்படியை அலங்கரிக்க வேண்டும். கிருஷ்ணரின் பிறந்தநாள் என்பதால், குழந்தைகளுக்குப் பிடித்த பட்சணங்கள் செய்ய வேண்டும். அதில் வெல்லச் சீடை, உப்புச் சீடை, கைமுறுக்கு, தட்டை, களவடை- வெல்லச் சீடை மாவில் செய்வது, தேங்காய் பர்பி, திரட்டுப் பால் உட்பட பல பட்சணங்கள் செய்ய வேண்டும்.

முன்னதாக அலங்கரித்து வைத்துள்ள கிருஷ்ணர் படத்திற்கு அவரது பல நாமங்களை கூறிப் பூக்களாலும், அட்சதைகளாலும் அர்ச்சனை செய்ய வேண்டும். பின்னர் அவரவர் வேண்டுதல்களை மனதில் நினைத்து வழிபட வேண்டும். உலகத்தில் உள்ள அனைவரும் சுகமாக வாழட்டும் (சர்வே ஜனா சுகினோ பவந்து) என்று வேண்டிப் பூஜையை நிறைவு செய்வது வழக்கம். கண்ணனை வேண்டிக்கொண்டால் அவன் நம் கவலைகள் யாவையும் தீர்ப்பான் என்பது ஐதீகம்.

SCROLL FOR NEXT