ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்: பிரதிநிதித்துவப் படம் 
ஆன்மிகம்

இணையதளத்தில் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புரட்டாசி சனிக்கிழமைகளில் ஸ்ரீரங்கம் கோயிலில் தரிசனத்துக்கு அனுமதி

ஜெ.ஞானசேகர்

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமைகளில் கட்டணமில்லா மற்றும் கட்டண வழி தரிசனத்துக்கு இணையதளம் மூலம் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திருச்சி மாநகர காவல்துறை இன்று (செப். 17) வெளியிட்ட செய்திக் குறிப்பு:

"ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமைகளான செப்.19, 26, அக்.3, 10 ஆகிய தேதிகளில் சுவாமி தரிசனம் செய்ய முன்பதிவு செய்திருக்க வேண்டும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோயிலுக்கு வரும் பக்தர்கள் தனிமனித இடைவெளியைப் பின்பற்றவும், பக்தர்கள் காத்திருப்பதைத் தவிர்க்கும் வகையிலும், அரசின் கரோனா பரவல் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றும் நோக்கிலும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காலை 6.30-8.00, 8.00-10.00, 10.00-12.00, பிற்பகல் 12.00-2.00, 2.00- 4.30, மாலை 4.30- 6.00, 6.00-8.00 என 6 நேரப் பிரிவுகளில் தலா 600 பேர் வீதம் மொத்தம் 3,600 பேர் தரிசனத்துக்கு முன்பதிவு செய்ய இயலும். ரூ.250, ரூ.50 கட்டண தரிசன டிக்கெட்டுகள், இலவச தரிசன டிக்கெட் என 3-க்கும் தலா 200 டிக்கெட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

www.srirangam.org என்ற கோயிலின் இணையதள முகவரியில் டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள், தங்களின் தரிசன நேரத்துக்கு அரை மணி நேரம் முன்னதாகவே கோயிலுக்கு வர வேண்டும்.

இணையவழி டிக்கெட் பெற்றவர்களின் அடையாள அட்டையைச் சரிபார்த்த பிறகே ரங்கா கோபுரம் வழியாக பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். குறிப்பாக, அந்தந்த நேரத்தின்போது மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.

உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து கார்களில் வரும் பக்தர்கள், சித்திரை வீதிகளிலும், சுற்றுலாப் பேருந்துகள், வேன்களில் வருவோர் மூலத்தோப்பு வாகன நிறுத்துமிடத்திலும் தங்கள் வாகனங்களை நிறுத்த வேண்டும். உத்திரை வீதிகளில் வாகனங்கள் செல்வதற்கும், நிறுத்துவதற்கும் அனுமதி கிடையாது".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT