நாளைய தினம் குருவார வியாழக்கிழமை. புரட்டாசி மாதம் பிறக்கிறது. உத்திர நட்சத்திரநாள். எனவே, பிரம்மாவையும் நவக்கிரக குருவையும், தட்சிணாமூர்த்தியையும் பெருமாளையும் ஸ்ரீஐயப்ப சுவாமியையும் வணங்குங்கள். சகல செளபாக்கியமும் பெற்று இனிதே வாழ்வீர்கள். இதுவரை இருந்த தடைகள் அனைத்தும் அகலும்.
குருவாரம் என்று வியாழக்கிழமையைச் சொல்லுவார்கள். குருவாரம் என்பது குருமார்களை வணங்கி வழிபட உகந்த நன்னாள். குரு பிரம்மாவை வணங்கி வழிபடுங்கள். நம்மையெல்லாம் உலகுக்குப் படைத்த பிரம்மாதான் நம் முன்னோர்களையும் படைத்திருக்கிறார் அல்லவா. எனவே, நம் முன்னோரை வணங்கி வழிபடும் அமாவாசையான நாளைய தினத்தில், பிரம்மாவையும் வணங்கி வழிபட்டால், நம் தலையெழுத்தை சீர் செய்து, திருத்தி எழுதி அருளுவார் பிரம்மா.
இதேபோல், குருவுக்கு உகந்த வியாழன் என்பதால், சிவாலயங்களில் உள்ள கோஷ்டத்தில் அமைந்திருக்கும் தட்சிணாமூர்த்தி சந்நிதியில் நின்று மனதார பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள். ந் ஞானமும் யோகமும் கிடைக்கப் பெறுவீர்கள்.
இதேபோல், நவக்கிரகங்களில் முக்கியமான கிரகமாகவும் முதன்மையான கிரகமாகவும் அமைந்திருப்பது குரு பிரகஸ்பதி. இவரே முக்கியமான கிரகம். குருப்பெயர்ச்சி என்கிறோமே... அப்படி பெயர்வதும் அதனால் நன்மை தீமைகள் நடப்பதும் நவக்கிரக குருவால்தான்.
எனவே, அருகில் உள்ள சிவாலாயத்துக்குச் சென்று, நவக்கிரகத்தை ஒன்பது முறை பிராகார வலம் வந்து வேண்டிக்கொள்ளுங்கள்.
புரட்டாசி மாதம் நாளைய தினம் செப்டம்பர் 17ம் தேதி வியாழக்கிழமை பிறக்கிறது. புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உகந்த மாதம். மகாவிஷ்ணு வழிபாடு செய்ய உரிய மாதம். புரட்டாசி மாதம் முழுவதுமே திருமாலை வணங்குகிற அற்புதமான மாதம். ஆகவே,. புரட்டாசி மாதப் பிறப்பில், பெருமாளை தரிசியுங்கள். முன்னோர் வழிபாடு செய்த மகாளய பட்ச அமாவாசை என்பதால், பெருமாளுக்கு அவசியம் துளசிமாலை சார்த்துங்கள்.
அதேபோல், நாளைய தினம் உத்திர நட்சத்திர நாள். உத்திரத்தில் ஐயப்ப சுவாமியை தரிசிப்பதும் பிரார்த்தனை செய்வதும் மிகுந்த பலன்களைத் தந்தருளக் கூடியது. மேலும் சபரிமலைக்கு மாலையிட்டு குருசாமியின் துணையுடன் மலைக்குச் சென்றாலும், குருவுக்குக் குருவாக, ஞான குருவாக, யோக குருவாக திகழ்கிறார் ஐயப்ப சுவாமி. ஆகவே ஐயப்ப சுவாமியை மனதார வேண்டுங்கள். வழிபடுங்கள்.
நாளைய தினம்... அற்புதமான தினம். மகாளய அமாவாசை. குருவார வியாழக்கிழமை. உத்திர நட்சத்திர நன்னாள். புரட்டாசி மாதப் பிறப்பு. ஆகவே, முன்னோர் வழிபாட்டை முடித்துவிட்டு, அருகில் உள்ள ஆலயங்களுக்குச் சென்று வழிபடுங்கள்.
பிரம்மனின் அருளைப் பெறுங்கள். குரு தட்சிணாமூர்த்தியின் அருள் கிடைக்கப் பெறுங்கள். நவக்கிரக குரு காத்தருள்வார். வேங்கடவனின் தரிசனம், காரியங்களை வெற்றியாக்கித் தரும். ஐயப்ப சுவாமி, சகல யோகங்களும் தந்து அருள்பாலிப்பார்.