நாளைய தினம் செப்டம்பர் 17ம் தேதி இரண்டு முறை தர்ப்பணம் செய்யவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்கள் ஆச்சார்யர்கள். அதற்கான விளக்கமும் தந்துள்ளனர்.
நாளைய தினம் வியாழக்கிழமை, செப்டம்பர் மாதம் 17ம் தேதி, புரட்டாசி மாதப் பிறப்பு.ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பிலும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். ஒரு வருடத்துக்கு மொத்தம் 96 தர்ப்பணங்கள் செய்யவேண்டும் என்றும் தமிழ் மாதப் பிறப்பின் போதும், கிரகண காலங்களின் போதும் அமாவாசையின் போதும் தர்ப்பணம் செய்யவேண்டும் என வலியுறுத்தியுள்ளது சாஸ்திரம்.
மேலும் சிராத்த காலம் முதலானவற்றையும் கணக்கில் கொண்டு 96 தர்ப்பணங்கள் என தெரிவித்துள்ளது. இந்தத் தருணங்களில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவேண்டும், எள்ளும் தண்ணீரும் கொண்டு அர்க்யம் செய்யவேண்டும், முன்னோர்களின் படங்களுக்கு பூக்களிட்டு, சந்தனம் குங்குமமிட்டு அலங்கரிக்க வேண்டும் என்கிறார்கள்.
அதேபோல், தமிழ் மாதப் பிறப்பின் போது தர்ப்பணம் செய்வதும் முன்னோரை வணங்குவதும் எப்படி நம்முடைய கடமையோ அதேபோல், அமாவாசைகளிலும் நாம் முன்னோரை வழிபடுவதும் வணங்குவதும் ஆராதிப்பதும் பிரார்த்தனை செய்துகொள்வதும் மிக மிக அவசியமானது. நம் சந்ததிக்கும் நமக்கும் நற்பலன்களை வழங்கக் கூடியது.
ஆக, தமிழ் மாதப் பிறப்பின் போது தர்ப்பணம் செய்வதும் அமாவாசையின் போது தர்ப்பணம் முதலான முன்னோர் வழிபாடுகளைச் செய்வதும் புண்ணியத்தைத் தந்தருளக் கூடியது என விவரிக்கிறார்கள்.
அந்த வகையில், செப்டம்பர் 17ம் தேதி நாளைய தினமான வியாழக்கிழமை, புரட்டாசி மாதம் பிறக்கிறது. எனவே மாதப் பிறப்புக்கான தர்ப்பணம் செய்யவேண்டும். அதேபோல நாளைய தினம், அமாவாசையும் அமைந்துள்ளது. எனவே அமாவாசைக்கு உரிய தர்ப்பணத்தையும் செய்யவேண்டும். புரட்டாசி மாதப் பிறப்பு தர்ப்பணம், அமாவாசை தர்ப்பணம் என இரண்டு தர்ப்பணங்களைச் செய்யவேண்டும் என்று ஆச்சார்யர்கள் விவரித்துள்ளனர்.
முதலில், அமாவாசை தர்ப்பணம் செய்யவேண்டுமா, மாதப் பிறப்புக்கான தர்ப்பணம் செய்யவேண்டுமா என்றும் பலர் குழம்பலாம்.
முதலில், மாதப் பிறப்புக்கான தர்ப்பண வழிபாடுகளைச் செய்யவேண்டும். தர்ப்பணம் செய்யும் போது, புரட்டாசி மாதத்துக்கான தர்ப்பணம் என்று சொல்லியே தர்ப்பணம் செய்யவேண்டும். எந்த மாதம் செய்கிறோமோ அந்த மாதத்தைச் சொல்லி தர்ப்பணம் செய்வது முறை என்பது பலருக்கும் தெரிந்ததுதான். ஆக, மாதப் பிறப்புக்கான தர்ப்பணம் முதலில் செய்யவேண்டும்.
பின்னர், அமாவாசைக்கான தர்ப்பணத்தை செய்யவேண்டும். இதற்கான தர்ப்பணத்தைச் சொல்லும் போது, அமாவாசை தர்ப்பணம் என்று சொல்லித்தான் தர்ப்பணம் செய்யப்படும் என்பது பலரும் அறிந்ததுதான்.
ஆக, செப்டம்பர் 17ம் தேதி, வியாழக்கிழமை, புரட்டாசி மாதப் பிறப்பு தர்ப்பணமும் மகாளய அமாவாசை தர்ப்பணமும் என இரண்டு தர்ப்பணம் செய்து முன்னோரை வணங்கி வழிபடவேண்டும்.
அற்புதமான இந்த நன்னாளில், நம் முன்னோர்களை மறக்காமல் வழிபடுவோம். பித்ருக்களின் பரிபூரணமான ஆசீர்வாதத்தைப் பெறுவோம். தடைப்பட்ட மங்கல காரியங்கள், திருமணம் உள்ளிட்ட சந்ததி வளர்க்கும் விஷயங்கள், சந்தான பாக்கியம் முதலானவை கிடைக்கப் பெறலாம்.