ஆன்மிகம்

ஆன்மிக நூலகம்: பசி கொடுத்த பக்குவ நிலை

செய்திப்பிரிவு

அன்று அவருடைய இல்லத்தில் மிகப் பெரிய விருந்து ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு ஏராளமான உறவினர்கள், தெரிந்தவர்கள், நண்பர்கள், அக்கம் பக்கத்தவர் என பெரும் திரளான கூட்டம் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். எங்கும் உற்சாகமும் மகிழ்ச்சியும் கரைபுரண்டோடி வீடே அமர்க்களம் ஆயிற்று. ஆனால் உற்சாகத்தில் இருக்க வேண்டிய மாப்பிள்ளையான சிவராம கிருஷ்ணனுக்கு வேறு ஒரு முக்கிய பிரச்சினை ஒன்று காத்து இருந்தது.

அன்று ஏனோ தெரியவில்லை அகோர பசி ஒன்று அவனை வாட்டி வதைத்துக்கொண்டிருந்தது. வைதீகக் குடும்பமானதால் அன்று காலை முதல் சிவராமனுக்கு உணவு எதுவும் அளிக்கப்படவில்லை. குடும்பத்தின் பலவிதமான சடங்குகள் நடந்து கொண்டிருந்ததால் பசியால் தவித்துக் கொண்டிருந்த சிவராமனை எவருமே கண்டு கொள்ளவில்லை. சிவராமனின் நண்பர்கள் அவனுடைய பசி உணர்வை வேறு அர்த்தத்தில் எடுத்துக் கொண்டு கேலியும் கிண்டலும் பரிகாசமும் செய்து விளையாடி மகிழ்ந்தார்கள்.

இதனால் மனம் வெறுத்துப் போன சிவராமன் பெற்ற தாயிடம் தனக்கு உணவு வழங்க வேண்டுமென பலமுறை கெஞ்சிக் கேட்டான். ஆனால் தாய் தன்னுடைய மகன் படும் அவஸ்தையைப் புரிந்து கொள்ளாமல், “சிவராமா, சற்று நேரம் பசியைப் பொறுத்துக்கொள். இன்று ஒரு நாள் பட்டினி கிடந்தால் குடி மூழ்கிப் போய்விடாது. பேசாமல் ஓரிடத்தில் அமைதியாக அமர்ந்து கொள்” என்று அறிவுரையையே பதிலாக அளித்தாள்.

பெற்ற தாயே தனக்கு உதவாத போது மற்றவர்கள் என்ன உதவி செய்ய முடியும்? என்று தீவிரமாக யோசித்துப் பார்த்தான். நேரம் செல்ல செல்ல கட்டுக்கு அடங்காத பசி சிவராமனின் பொறுமையைச் சோதித்தது. லௌகீக விஷயங்கள் எல்லாவற்றையும் அறவே வெறுத்தான். சுற்றம், நட்பு, மனைவி எல்லாம் வெளி வேஷம் என்று எண்ணினான்.

அவரவர் மனமகிழ்ச்சிக்கு தான் ஒரு கருவியாக மாறி இருப்பதைக் கண்டு மனம் பொருமினார். எனவே, திருமண விழா கோலம் மகிழ்ச்சியை கொடுப்பதற்குப் பதிலாக சிவராமனுக்கு தீவிர சிந்தனையைத் தூண்டியது. மனத்தில் சட்டென்று ஒரு உண்மை பளிச்சிட்டது. அதைச் செயல்படுத்த தக்க தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.

பசியினால் வாடி வதங்கிக் கொண்டிருந்த சிவராமனுக்குத் தன் உணர்வினைப் புரிந்துகொள்ள அங்கு ஒருவருமே இல்லையா? என்ற கேள்வி எழுந்தது. இப்படியே காலன் உயிர்களைக் கவர்ந்து செல்லும்போது அதைத் தடுக்கும் வலிமை எவருக்குமே இல்லையா? என்பது போன்ற கேள்விகள் அவன் மனதை துளைத்தெடுத்தன. இதற்கெல்லாம் ஒரு முடிவு காண வேண்டும் என எண்ணினான். தன்னைப் பெற்ற தாய், சுற்றம், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் இல்வாழ்க்கையில் தன் கரம் பற்றிய புது மனைவி ஆகிய சொந்த பந்தங்களை ஒரே வினாடியில் உதறித் தள்ளி வீட்டை விட்டு வெளியேறிச் சென்றான்.

ஸ்ரீபரம சிவேந்திராள்

சிவராமனின் கால்கள் ஒரு தீர்மானத்துடன் ஒரு உயர்ந்த லட்சியத்தை அடைய நேராக தம்முடைய குருகுலத்தின் குருவாக விளங்கிய பரம சிவேந்திரா சரஸ்வதி இருந்த கும்பகோணம் ஸ்ரீமடத்தை நோக்கிச் சென்றது. என்ன ஆச்சர்யம்! உள்ளத்தில் தெளிவு பிறந்ததும், இதுவரையில் அவனை வாட்டி வதைத்துக்கொண்டிருந்த பசிப் பிணி இருந்த இடம் தெரியாமல் மறைந்து போனது. குருவின் திருவடியில் சரண் அடைந்த சிவராம கிருஷ்ணனிடம் இருந்த வைராக்கியத்தையும் மன உறுதியையும் கண்ட பரமசிவேந்திராள் தன்னுடைய குருகுல மாணவன் பக்குவ நிலையை அடைந்துவிட்டதை உணர்ந்தார். உலக வாழ்க்கையின் இன்பங்களை வெறுத்த சிவராமனுக்கு மந்திர உபதேசம் போன்ற தீட்சையை அளித்து அன்று முதல் சதாசிவன் என்ற புதிய திருநாமத்தையும் வழங்கி தன்னுடைய சிஷ்ய ஸ்விகாரத்தை செய்துகொண்டார்.

நெரூர் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் சரிதை;

பிரபோதரன் சுகுமார்; விலை ரூ.100;

வெளியீடு: அயக்கிரிவா பதிப்பகம், 108, புதிய எண்: 176,

பெரிய தெரு, திருவல்லிக்கேணி, சென்னை- 600 005.

தொலைபேசி: 044-2844 4275.

SCROLL FOR NEXT