குருவார வியாழக்கிழமையில், குரு பிரம்மாவையும் குரு பிரகஸ்பதியையும் குரு தட்சிணாமூர்த்தியையும் வணங்குங்கள். நீண்டகாலம் கழித்து, பிரம்மாவையும் தட்சிணாமூர்த்தியையும் கண்ணார தரிசித்து வழிபடுங்கள். குருவருளும் திருவருளும் கிடைக்கப் பெறலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
கடந்த சில மாதங்களாக, ஆலய வழிபாடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. கடந்த 1ம் தேதி முதல் ஆலயத்தில் பக்தர்களுக்கு தரிசனம் அனுமதிக்கப்பட்டுள்ளது.
குரு பிரம்மா குருவிஷ்ணு என்று சொல்கிறது ஸ்லோகம். எனவே குரு பிரம்மாவை வியாழக்கிழமைகளில் வணங்கி வழிபடுவது ரொம்பவே மகத்துவம் மிக்கது. நம்மைப் படைத்த கடவுளான பிரம்மாவை, பிரம்ம காயத்ரி சொல்லி வழிபடுங்கள். அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில், வீட்டில் அமர்ந்து பிரம்மாவை நினைத்து தியானிப்பதும் பல மடங்கு பலன்களை வாரி வழங்கும் சக்தி மிக்கது என்கிறார்கள் சிவாச்சார்யர்கள்.
தட்சிணாமூர்த்தி என்பது சிவாம்சம். சிவபெருமானே தட்சிணாமூர்த்தியாக, ஞானகுருவாக, சனகாதி முனிவர்களுக்கு உபதேசித்து அருளினார் என்கிறார் என்கிறது புராணம். கல்லால மரத்தடியில் அமர்ந்து கொண்டு, சனகாதி முனிவர்களுக்கு, சின் முத்திரை காட்டியபடி ஞானோபதேசம் அருளும் தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் தரிசித்து, அவருக்கு கொண்டைக்கடலை மாலை அணிவித்து வேண்டிக்கொள்வது ஞானத்தையும் யோகத்தையும் தந்தருளக்கூடியது என்கின்றன ஞானநூல்கள்.
அனைத்து சிவாலயங்களிலும் கோஷ்டத்தில், தென்முகக் கடவுளாக, கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார். வியாழக்கிழமையில், மத்யாஷ்டமி சேர்ந்த நன்னாளில், தட்சிணாமூர்த்தியை வழிபடுங்கள். தனம் தானியம் தந்து, கல்வியையும் கலைகளையும் தந்து செம்மையாக வாழச் செய்வார் குரு தட்சிணாமூர்த்தி.
குரு பிரகஸ்பதி. இவர்தான் நவக்கிரகங்களில் குரு பகவானாகத் திகழ்கிறார். தேவர்களின் குரு பிரகஸ்பதிதான். சிவனருளால், நவக்கிரகங்களில் ஒரு கிரகமாக, குரு கிரகமாக இருக்கும் வரத்தைப் பெற்றார் என்கிறது புராணம்.
சிவாலயங்களிலும் அம்மன் கோயில்களிலும் முருகன் கோயில்களிலும் நவக்கிரக சந்நிதி அமைந்திருக்கும். வியாழக்கிழமைகளில், நவக்கிரகத்தில் உள்ள குரு பகவானை மனதார வேண்டிக்கொள்ளுங்கள். நவக்கிரக குருவுக்கு விளக்கேற்றி பிரார்த்தனை செய்யுங்கள்.
திட்டை திருத்தலத்தில் குரு பிரகஸ்பதி, நவக்கிரக குருபகவான் தனிச்சந்நிதியில் அருள்பாலிக்கிறார். சென்னை பாடி திருவலிதாயத்தில் குரு பகவான் சந்நிதி அமைந்திருக்கிறது.
குரு பிரம்மாவுக்கு ஆலயங்கள் குறைவுதான். என்றாலும் சிவாலய கோஷ்டத்தில் பிரம்மாவை தரிசிக்கலாம். திருச்சியில் இருந்து சென்னை செல்லும் வழியில், 30வது கிலோமீட்டரில் உள்ளது திருப்பட்டூர். இங்கே பிரம்மாவுக்கு தனிச்சந்நிதி அமைந்திருக்கிறது. தலையெழுத்தையே திருத்தி அருளும் திருப்பட்டூர் திருத்தலத்து பிரம்மாவை வேண்டிக்கொள்ளுங்கள். பிரம்மாவை தரிசனம் செய்து பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள்.
குருவருளும் திருவருளும் கிடைக்கப்பெற்று, பட்ட கஷ்டங்களிலிருந்தெல்லாம் விலகி, புதியதொரு வாழ்க்கைக்குச் செல்வீர்கள்.