மகாளயபட்ச பரணி நாளில், முன்னோர் படங்களுக்கு பூக்களிட்டு, விளக்கேற்றுங்கள். உங்களையும் உங்கள் குடும்பத்தையும் நிம்மதியும் சந்தோஷமுமாக வாழவைப்பார்கள் உங்களுடைய முன்னோர்கள்.
மகாளயபட்ச காலம் கடந்த செப்டம்பர் 2ம் தேதி தொடங்கியது. ஆவணி மாதத்தின் பெளர்ணமிக்குப் பிறகான நாட்கள், மகாளய பட்ச நாட்கள் தொடங்குகின்றன. அடுத்து வரக்கூடிய அமாவாசை வரை, மகாளயபட்ச காலம் என்று அழைக்கப்படுகிறது.
பட்சம் என்றால் பதினைந்து. மகாளய பட்சம் என்பது 15 நாட்கள். இந்த 15 நாட்களும் பித்ருக்களுக்கான நாட்கள். நம் முன்னோருக்கான நாட்கள். பித்ரு லோகத்தில் உள்ள நம்முடைய முன்னோர்கள், இந்த பதினைந்துநாட்களும் அதாவது மகாளய பட்ச காலம் முழுவதும் பூலோகத்தில் இருப்பார்கள் என்றும் நம் வீட்டுக்கு வந்து, அவர்களை நாம் ஆராதனை செய்வதைப் பார்ப்பார்கள் என்றும் விவரிக்கிறது சாஸ்திரம்.
ஆகவே, மகாளயபட்ச பதினைந்து நாட்களும் முன்னோரை ஆராதிக்கவேண்டும். அவர்களுக்கு எள்ளும் தண்ணீரும் கொண்டு அர்க்யம் செய்து, தர்ப்பணம் செய்யவேண்டும். முன்னோரின் படங்களுக்கு பூக்களால் அலங்கரிக்கவேண்டும்.
மகாளய பட்ச பதினைந்துநாட்களும் முன்னோர் ஆராதனையை தினமும் செய்யவேண்டும் என்பது நம்முடைய கடமை. அப்படி ஒருவேளை நம்மால் செய்யமுடியாத பட்சத்தில், ஒருநாளாவது முன்னோர் ஆராதனையைச் செய்யவேண்டும். தர்ப்பணம் செய்து வணங்கவேண்டும்.
அதிலும் குறிப்பாக, பரணி நட்சத்திரம் வரும் நாளில், அவசியம் தர்ப்பணம் செய்யவேண்டும் என்றும் அவர்களை நினைத்து ஏதேனும் தான தருமங்கள் செய்யவேண்டும் என்றும் வலியுறுத்துகிறது சாஸ்திரம்.
இன்று செப்டம்பர் 7ம் தேதி பரணி. மகாளய பட்சத்தில் வரக்கூடிய பரணி நட்சத்திர நாளை, மகா பரணி என்று போற்றப்படுகிறது. இதை மகாளயபட்ச மகாபரணி என்பார்கள்.
இன்றைய மகாளய பட்ச மகாபரணி நாளில், மாலையில் வீட்டில் விளக்கேற்றுங்கள். குறிப்பாக நம் முன்னோர்களின் படத்துக்கு எதிரே விளக்கேற்றுங்கள். வாசலிலும் ஒரு விளக்கை ஏற்றிவைக்கலாம். முன்னோர் படங்களுக்கு பூக்களால் அலங்கரித்து வழிபடலாம்.
இந்த அற்புதமான, உன்னதமான நன்னாளில், குடும்ப சகிதமாக முன்னோரை வழிபடுங்கள். யாருக்கேனும் குடையோ செருப்போ வஸ்திரமோ வழங்குங்கள். இதுவரை இருந்த தரித்திர நிலையில் இருந்து மாறுவீர்கள். வீட்டில் சுபிட்சம் குடிகொள்ளும். முன்னோரின் ஆசி பரிபூரணமாகக் கிடைக்கப் பெறுவீர்கள். பித்ரு சாபத்தில் இருந்து விடுபடுவீர்கள்.